அ.இ.பு.த.ம.மு.க கட்சியில் இருந்து சசிகலா நீக்கம்: தலைவர் அறிவிப்பு

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் சக்கரவர்த்தி இன்று (அக்டோபர் 28) செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ தமிழக அரசையும் தற்போதைய ஆட்சியையும் கண்டித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2026-ம் ஆண்டு வி.கே. சசிகலா எங்கள் கட்சியில் பணியாற்ற விரும்புவதாக கூறி சேர வந்தார்.

மேலும் கட்சியின் பொதுச் செயலர் பதவியையும் எடுத்துக் கொண்டார். கட்சியை வழிநடத்துகிறேன் என்று தான் என்னிடம் கூறினார். ஆனால் அதன்படி செய்யவில்லை. தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. எங்கள் யாரையும் சந்திக்கவில்லை, தொண்டர்களையும் சந்திக்கவில்லை. அவரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை

தேர்தலுக்காகத்தான் எங்களை பகடை காயாகப் பயன்படுத்திக் கொண்டார் சசிகலா என்று இப்போது புரிகிறது. அதற்குப் பிறகு எந்தவிதமான ஒரு தொடர்பும் இல்லை, யாரையும் சந்திக்கவில்லை என்ற மனவேதனை எனக்குள் இருந்தது. இதனால் கழகத் தோழர்கள் அனைவரிடமும் ஆலோசித்த பின், அவரைச் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் தேர்தல் நடைபெறும். பிப்ரவரி மாதம் எங்களது கட்சியில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பான ஆலோசனைக் கூட்டத்தில் வி. கே. சசிகலாவை நீக்க முடிவு செய்துவிட்டோம். முறையாக பிப்ரவரி மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நீக்கிவிடுவோம்; அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் சந்தேகமும் இல்லை. எங்கள் பணியை நாங்கள் மீண்டும் தொடர்வோம். அனைத்துத் தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம். புரட்சித் தலைவரின் கொள்கைகளை நாங்கள் விடாமல் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *