
முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக கவுன்சிலர் டிட்டா சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின் போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அன்பில் மகேஷ் கைதை தொடர்ந்து புழல் சிறை வாசலில் திமுகவினர் திரண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது வேலூர் காட்பாடியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் டிட்டா சரவணன், “தைரியமாக இருங்க தலைவரே.. நம்ம வெளியே வந்துவிடலாம். அவனை கரூரில் வைத்து அன்றைக்கே போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா தலைவரே” என்றார். மேலும் கரூரில் வைத்து போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? என முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலானது.
இது தொடர்பாக டிட்டா சரவணன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், விழுப்புரத்தில் மறைந்திருந்த திமுக கவுன்சிலர் சரவணனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.



