உருவமறியா இசைவெளி II- ஒரே கதை, எத்தனை படங்கள்?

திரையரங்குகளிலும், தெருவிலும் திரைப்படம் பார்த்து வளர்ந்தவன் நான். நான் வசித்த மதுரை கோ.புதூரில் கோயில் திருவிழாக்கள் என்றால், திரை கட்டி படம் காட்டுவார்கள். நான் வசித்த தேசிய விநாயகர் கோயில் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்கள் நடைபெறும். பத்து நாட்களுக்கு பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி, நாடகம், நடன நாட்டியம் என வித விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதில் இரண்டு நாட்கள் திரைகட்டி படம் போடுவார்கள். இதில் ஒருநாள் கட்டாயம் எம்.ஜி.ஆர் படம் ஒளிபரப்பு செய்வார்கள். அதற்கு காரணம் மெழுகு திரி ஜான் அவர்கள்.

எம்.ஜி.ஆரின் பற்றாளர்
தேசிய விநாயகர் கோயில் திருவிழாவில் ஜான் அவர்களுக்கு என்ன சம்பந்தம் என நீங்கள் நினைக்கலாம். சிறிய அளவில் இருந்த தேசிய விநாயகர் கோயிலை எடுத்துக் கட்டியவரே அவர் தான். அத்துடன் விழா கமிட்டியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார். அவருடைய முன் முயற்சியில் தான் அந்த கோயில் விழாக்கள் நடைபெறும். ஜான் அவர்கள் எம்.ஜி.ஆரின் தீவிர பற்றாளர். அவர் வீட்டில் மாட்டப்பட்டிருந்த பெரிய போட்டோவில் இயேசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர் இருப்பார். தேசிய விநாயகர் கோயில் திருவிழாவில் இரண்டு நாட்களுக்கு படம் ஒளிபரப்பு செய்யப்படும் போது, எம்.ஜி.ஆர் படமும் ஒளிபரப்பாகும். ஏழை, எளிய மக்கள் அதிகம் வசித்த பகுதி என்பதால் பெரும்பாலானோர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இருந்தனர். 16 எம்.எம் திரையில் கருப்பு வெள்ளை மட்டுமின்றி எம்.ஜி.ஆரின் கலர் படங்களும் ஒளிபரப்பு செய்யப்படும்.

குலேபகாவலி
அங்கு நான் ரசித்த படங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று ‘குலேபகாவலி’. ‘அரேபிய இரவுகள்’ (Arabian Nights) தொகுப்பில் உள்ள ஒரு பாரசீகக் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘தி ரோஸ் ஆஃப் பகாவலி’ (The Rose of Bakawali) என்ற இந்திய நாட்டுப்புறக் கதை இடம் பெற்ற படமிது. 165 நிமிட நேரம் கொண்ட இந்த படத்தில் 40.42 நிமிடங்கள் என 12 பாடல்கள் இடம் பெற்றன. ‘குலேபகாவலி’ படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்களை தஞ்சை ராமையா தாஸ் எழுதினார். எம்.ஜி.ஆருக்கு டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ராஜசுலோச்சனா மூன்று ஜோடி. பார்வை பறிபோன தந்தையின் கண்பார்வையை மீட்டெடுக்கும் குலோப் என்ற மலரைத் தேடி பகாவலி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் இளவரசனின் கதை தான் இப்படத்தின் கரு.

தாசன் என்ற இளவரசன் கேரக்டரில் எம்.ஜி.ஆர் பாட்டு, நடிப்பு, சண்டை என அதிரடி காட்டிய படமிது. குலாம் என்ற கேரக்டரில் சந்திரபாபு, சுகூர் என்ற கேரக்டரில் கே.ஏ.தங்கவேலு, குல்ஜார் என்ற கேரக்டரில் ஈ.வி.சரோஜா, இவர்களுடன் மாறுவேடத்தில் எம்.ஜி.ஆரும் சேர்ந்து பகடை உருட்டும் இடத்தில் நடத்தும் நகைச்சுவை காட்சியைப் பார்த்தால் வயிற்று வலியே வந்து விடும். இந்த படத்தில் இடம் ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும் இணைந்து பாடிய,

‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா…’

பாடல் காலம் கடந்து இன்றளவும் கொண்டாடப்படுகிறது. அதிராமல் பாடி அசர வைத்த ஏ.எம்.ராஜாவின் குரலும், குயில் போன்ற ஜிக்கியின் குரலும் சேர்ந்து ஒலித்த சிறந்த பாடலிது. இந்த படத்தின் இசையமைப்பாளர்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி என்றாலும், பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த ‘மயக்கும் மாலை பொழுதே’ பாடலை இசை மீட்டியவர் திரையிசை திலகம் கே.வி.மகாதேவன்.

பாடல் மாறிய படம்
1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’ படத்திற்காக பதிவு செய்யப்பட்ட இந்த பாடலை ‘குலேபகாவலி’ படத்தில் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா பயன்படுத்திக் கொண்டார். நாகூர் ஹனிபா, எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய ‘நாயகமே நபி நாயகமே’, கே.ஜமுனா ராணி பாடிய ‘ஆசையும் நேசமும்’, ஜிக்கி பாடிய ‘நா சொக்கா போட்ட நவாபு’, திருச்சி லோகநாதன், பி.லீலா, ஜி.கே.வெங்கடேஷ் பாடிய ‘வில்லேந்தும் வீரரெல்லாம்‘, ஜே.பி.சந்திரபாபு, ஏ.ஜி.ரத்னமாலா பாடிய ‘அச்சு நிமிந்த வண்டி’, டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ‘வித்தார கள்ளியெல்லாம்’ போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்ற ‘குலேபகாவலி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

மௌன மொழியில் ‘குலேபகாவலி’
1955-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த ‘குலேபகாவலி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே 1924-ம் ஆண்டு அதே பெயரில் மௌனப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டுள்ளது. இப்படத்திற்கான திரைக்கதையை மோகன்லால் தேவ் குஜராத்தி மொழியில் எழுதினார். காஞ்சிபாய் ரத்தோட் இயக்கிய இந்த படத்தை கோகினூர் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. ‘குல்-ஏ-பகாவலி’ என்ற பெயரில் வந்த இந்த படம் திரையரங்குகளில் பதினான்கு வாரங்களுக்கும் மேலாக ஓடியதுடன், அதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து வெற்றி பெற்றது. திரைப்பட ஆய்வாளர்களால் இந்திய அளவில் முதல் சூப்பர் ஹிட் திரைப்படம் என்ற பெருமையை ‘குல்-ஏ-பகாவலி’ பெற்றுள்ளது. ஜுபைதா, கலீல், பாத்திமா பேகம், சுல்தானா, நூர் முகமது, சவிதா, ஜம்னா,உஷா ராணி நடித்த இந்த மௌனப்படம் நிகழ்த்திய சாதனையைத் தொடர்ந்து இப்படத்தின் கதை இந்திய, பாகிஸ்தானில் புதிய திரைப்படங்களை உருவாக்கின.

தமிழ்நாடு டாக்கீஸ்
எம்.ஜி.ஆர் நடித்த ‘குலேபகாவலி’ தமிழ் திரைப்படத்திற்கு முன்னதாக பேசும் படமாக ‘குலேபகாவலி’ உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. 1935-ம் ஆண்டு இந்த படத்தை இயக்கியவர் பெயர் எஸ்.சௌந்தரராஜன். தமிழ் திரையுலகம் மறக்கக்கூடாத பெயர்களில் இவர் பெயரும் ஒன்று. தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகிஸ்தர் என பல்வேறு முகம் கொண்ட எஸ்.சௌந்தரராஜன், தனது நண்பர் அழகப்ப செட்டியாருடன் இணைந்து 1933-ம் ஆண்டு ‘தமிழ்நாடு டாக்கீஸ்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த பட நிறுவனம் மூலம் 60-க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெற்ற ‘சங்கீத லவகுசா’ என்ற படத்தின் இயக்குநரானார் எஸ்.சௌந்தரராஜன். 1935-ம் ஆண்டு ‘தமிழ்நாடு டாக்கீஸ்’ தயாரிப்பில் வெளியான ‘மோகினி ருக்மாங்கதா’ என்ற புராணப்படத்தை இயக்கினார். அதே ஆண்டு ‘தமிழ்நாடு டாக்கீஸ்’ தயாரிப்பில் வி.ஏ.செல்லப்பா, எம்.எஸ்.ராமச்சந்திரன் நடிப்பில் உருவான ‘குலேபகாவலி’ படத்தை எஸ்.சௌந்தரராஜன் இயக்கினார். டி.பி.ராஜலட்சுமி, ராஜேஸ்வரி, ராணி பாலா என மூன்று நாயகிகள் படத்தில் நடித்தனர். பாத்திரத் தொழிலில் இருந்து திரைப்படத் தொழிலுக்கு வந்த எஸ்.சௌந்தரராஜன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முக்கிய நிர்வாகியாக மாறியுள்ளார். அதற்குக் காரணம் திரைத்துறை மீது அவர் கொண்ட அக்கறை.

அத்துடன் தனது படங்களில் வண்ணப் பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். ‘மோகினி ருக்மாங்கதா‘, ‘மிஸ் சுந்தரி’ ஆகிய படங்களில் கைவண்ணம் பூசும் முறையில் முயற்சி செய்துள்ளார். மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு மிக பிரம்மாண்ட நீளத்துடன் (19,984 அடி) ‘ஸ்ரீமத் மகாபாரதம்’ என்ற படத்தை 1936-ம் ஆண்டு எடுத்துள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது.

இத்தனை மொழிகளிலா?

இதனைத் தொடர்ந்து ‘குல்-இ-பகாவலி’ என்ற பெயரில் 1939-ம் ஆண்டு பஞ்சாபி மொழியில் திரைப்படம் வெளியானது. இதில் சலீம் ரசா, நூர்ஜஹான், சுரையா, ஹேமலதா, ஜபீன் ஆகியோர் நடித்துள்ளனர். டி.எம்.பஞ்சோலி இயக்கத்தில் இப்படம் உருவானது. தெலுங்கு பட உலகின் முடிசூடா மன்னன் என்.டி.ராமராவ் நடிப்பிலும் ஒரு ‘குலேபகாவலி’ படம் உருவாகியுள்ளது. 1962-ம் ஆண்டு ‘குலேபகாவலி கதா’ என்ற பெயரில் அந்த திரைப்படம் வெளிவந்துள்ளது. என்.டி.ராமராவுடன், ஜமுனா, நாகரத்னா நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆனால், அதற்கு முன்னதாக 1938-ம் ஆண்டே தெலுங்கு மொழியில் ‘குலேபகாவலி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் மாஸ்டர் காமேஸ்வர ராவ்,கண்ணராவ் பாகவதர், வெங்கடப்பையா, வீரராகவரெட்டி, சகுந்தலா, ராஜாமணி, சுந்தரி லால், உஷாராணி ஆகியோர் நடித்துள்ளனர். வசந்தகுமார் நாயுடு இசையில் இப்படத்தின் பாடல்களை சகந்தி ராஜா ராவ் எழுதினார். கல்லகூரி சதாசிவ ராவ் படத்தை இயக்கினார். இந்த படத்தை ஃபாரமவுண்ட் பிலிம் கம்பெனி தயாரித்தது.

டி.ஆர்.ராமண்ணா இயக்கிய ‘குலேபகாவலி’ படம் இந்தியில் டப் செய்யப்பட்டது. ஆனால், இதே கதையை வைத்து ‘குல்-ஏ-பகாவலி’ பலமுறை இந்தி திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. ஆனந்த் பிரசாத் கபூர் இயக்கத்தில் 1932-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அஷ்ரஃப் கான், ஜைபுன்னிசா நடித்தனர். 1947-ம் ஆண்டு பெரோஸ் தஸ்தூர், மேனகா, ரபாப், சனோபர் நடிப்பில் ருஸ்தம் மோடி இயக்கத்தில் மற்றொரு ‘குல்-ஏ-பகாவலி’ வெளிவந்துள்ளது. ஜுகல் கிஷோர் இயக்கத்தில் 1963-ம் ஆண்டு ஜெய்ராஜ், நிஷி நடிப்பில் மற்றொரு படமும், 1982-ம் ஆண்டு ஃபெரோஸ் கான், ரீனா ராய், சுலக்சனா பண்டிடட்,பிந்து, அம்ஜத்கான் நடிப்பில் ரவிகாந்த் நாகைச் இயக்கத்தில் ‘குல்-ஏ-பகாவலி’ திரைப்படம் எடுக்கப்பட்டது. ராஜேஷ் ரோஷன் இசையமைத்த இந்த படம் முழுமையாக தயாரிக்கப்பட்டும் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது. ஒரு பூவை வைத்து இத்தனை மொழிகளில் வந்த ஒரே படம் ‘குலேபகாவலி’ திரைப்படமாகத்தான் இருக்க வேண்டும்.
-ப.கவிதா குமார் ( தொடரும்)

இத்தொடரைப் படிக்க

  1. https://maduraiseithi.in/?s=%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+II-+
இப்போதே பகிருங்கள்

One comment

  1. ஓர் அரேபிய கதையை தழுவி இதனை இந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என்பது வியப்புக்குரியது. தமிழில் மட்டும் தான் இந்த படம் வெளிவந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். மிக அரிய தகவல்களை உழைத்து தேடி பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுகிறேன். இக்பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *