
ரமோலா… இந்த பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீலீலா நடித்த ‘குண்டூர் காரம்’ என்ற தெலுங்கு படத்தில் ‘மடக்கு தட்டு மாமா என் மனச தட்டிப் போ மாமா’ என்ற பாடலில் நடிகை பூர்ணாவின் பெயர் ரமோலா தானே நீங்கள் கேட்கலாம். ஆனால், நான் சொல்லும் ரமோலா என்பவர் பன்முகத்திறமை வாய்ந்தவர். அவர் ஒரு நடிகை, மிகச்சிறந்த பின்னணி குரல் கலைஞர், உலக நாடுகள் சுற்றி வந்த பரதநாட்டியக் கலைஞர், இதை விட தமிழில் பட்டையைக் கிளப்பிய பல பாடல்களைப் பாடியவர். யார் என்று தெரிகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் மிக முக்கிய பாடலை ரமோலா பாடியுள்ளார். ஆர்.சி.சக்தி இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளியான படம் ‘தர்மயுத்தம்’. இசைஞானி இளையராஜா இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் புகழ் பெற்றவை. இந்த படத்தில் மேற்கத்திய பாணியில் இடம் பெற்ற ‘டிஸ்கோ சவுண்ட்’ என்ற ஆங்கில பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை எழுதி பாடியவர் ஹரிராம். அவருடன் இணைந்து இந்த பாடலைப் பாடியவர் ரமோலா. ஓட்டல் பாரில் நடனமங்கையுடன் ரஜினிகாந்த் பாடுவது போன்ற இந்த பாடல் மிக பிரபலம். இந்த பாடல் முழுவதும் கேபரே ஆடும் பெண்ணின் குரலில் ம் ம் ஆ ஆ ஆ ஆ ம்ம்ம் ஆஆஆ ஆஆஆ என்ற சிணுங்கலைத் தந்தவர் தான் இந்த ரமோலா. தமிழ் சினிமாவில் மிக அரிதான குரல் வளம் கொண்டவர் ரமோலா.

அதற்கு அவரின் இன்னொரு பாடலை உங்களுக்கு நினைவூட்டலாம் என்று நினைக்கிறேன். 1977-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சுஜாதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘அவர்கள்’. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பொம்மையுடன் கமல்ஹாசன் பாடுவது போன்று அமைக்கப்பட்ட வித்தியாசமான பாடல் படத்தில் இடம் பெற்றது.
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்…
என்ற ‘ஜீனியர் ஜீனியர்’ பாடலை நீங்கள் கேட்டு ரசித்திருப்பீர்கள். கமல்ஹாசன் குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிரமாதமாக பாடிய பாடல் இது. இந்த பாடலில் பொம்மைக்கு நடிகர் சதன் குரல் கொடுத்திருப்பார். இவர்களைத் தவிர இப்பாடலில் பல இடங்களில் நடிகை சுஜாதாவின் சிரிப்பு இடம் பெற்றிருக்கும். இந்த சிரிப்புக்குச் சொந்தக்காரர் தான் பாடகி ரமோலா.

பாடகி ரமோலா
பாட்டுப்போட்டி
கர்நாடக மாநிலத்தின் மத்திய பகுதியில் துங்கபத்ரா ஆற்றின் கரையில் உள்ள விஜயநகரத்தில் பிறந்தவர் ரமோலா. உபத்ராஷ்ட சூர்யநாராயணா மற்றும் சீதாராமா தம்பதியரின் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர். அவரது
பாட்டியின் பெயரான ராமம் தான் ரமோலாவின் இயற்பெயராகும். அவரது மூத்த சகோதரி சரோஜாவின் கணவர், தெலுங்கு இலக்கிய உலகிலும், திரைப்படத்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய பிரபல கவிஞர் ஸ்ரீ ஸ்ரீ. ரமோலாவின் இளைய சகோதரி லட்சுமி அம்முலு நடிகர் ராஜபாபுவின் மனைவி. இப்படி திரை உலகத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்ட ரமோலா, 9-ம் வகுப்பு வரை விஜய நகரத்தில் படித்து விட்டு பின்னர் சென்னைக்குச் சென்றார்.
அவரது மூத்த சகோதரி சரோஜா, சென்னையில் கல்லூரியில் சேர்ந்த போது ரமோலாவும் சென்னையில் குடியேறினார். சிறுவயதில் இருந்தே கலைகளின் மீது நாட்டம் கொண்ட ரமோலா அவரது மூத்த சகோதரியுடன் ஊக்கத்துடன் சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட ஆரம்பித்தார். சென்னை வானொலி நிலையம் ஏற்பாடு செய்த பாட்டுப் போட்டியில் நடிகை ஜெயசுதாவின் தாய் ஜோகாபாயுடன் போட்டி போட்டு பாடி பிரபல இசையமைப்பாளர்கள் பெண்டியாலா நாகேஸ்வர ராவ், கண்டசாலா ஆகியோரின் பாராட்டைப் பெற்றவர் ரமோலா.
பாடகியாக அறிமுகம்
சிறுவயதிலேயே அற்புதமான பாடும் திறமை கொண்ட ரமோலா 1954-ம் ஆண்டு நாகேஸ்வரராவ் நடித்த ‘அன்னதாதா’ படத்தில் அஞ்சலி தேவியின் குழந்தையாக திரைப்படத்தில் அறிமுகமானார். பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற அவர், நடிகை வைஜயந்தி மாலாவின் நடனக்குழுவில் முதன்மை கலைஞராக இருந்தார். இதனால் நடன நாடகங்களில் ரமோலாவிற்கு முக்கிய கேரக்டர்களை வைஜயந்தி மாலா வழங்கினார். அத்துடன் ராமம் என்ற பெயரை ரமோலா என்று மாற்றினார். 1964-ம் ஆண்டில் நாடகங்களில் புகழ் பெற்ற நடிகையாக ரமோலா திகழ்ந்தார். வைஜயந்தி மாலா ராதையாகவும், ரமோலா கிருஷ்ணராகவும் தோன்றிய நாட்டிய நாடகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘சண்டாளிகா’ என்ற புகழ்பெற்ற நடன நாடகத்தில் ரமோலாவும் அவரது தங்கை லட்சுமி அம்முலும் நடித்தனர். டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான நாட்டிய நிகழ்ச்சிகளை ரமோலா வழங்கியுள்ளார். நடனம், நடிப்பு என்பதுடன் பாடல் பாடும் திறமை கொண்ட ரமோலா, 1957-ம் ஆண்டு வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் அஞ்சலி பிக்சர்ஸ் தயாரித்த ‘சுவர்ண சுந்தரி’ திரைப்படத்தில் ஜிக்கி பாடிய ‘ஜகதீஸ்வர பாஹி பரமேஸ்வரா’ என்ற பாடலில் கோரஸ் கலைஞராக ரமேலா அறிமுகமானார்.
3,000 பாடல்கள்
சென்னை வானொலி நிலையத்திலேயே ரமோலாவின் பாடும் திறமையைக் கண்டு கொண்டு அவரை பாடகியாக பெரிதும் ஊக்குவித்தவர் கண்டசாலா. 1972-ம் ஆண்டு நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ நடிப்பில் வெளியான ‘தத்தபுத்ருடு’ படத்தில் கண்டசாலாவுடன் இணைந்து பாடிய ‘மனசைனா ஓ சின்னதானா’ பாடல் ரமோலாவுக்கு பெரும் புகழ் பெற்றுத்தந்தது. ஜி.கே.வெங்கடேஷ் இசையில் வெளியான ‘ஜனரே ஜானா’ திரைப்படத்தில் பி.பி. ஸ்ரீனிவாஸுடன் இணைந்து டூயட் பாடிய ரமோலா ஏராளமான தெலுங்கு பாடல்களைப் பாடினார். அத்துடன் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோருடன் இந்திப் பாடல்களையும் பாடி அங்கும் புகழ் பெற்ற பாடகியாக திகழ்ந்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 3,000க்கும் மேற்பட்ட பாடல்களை ரமோலா பாடியுள்ளார்.
பின்னணி குரல்
அத்துடன் நடிகையாக தன்னை முன்னிறுத்த கடுமையாக உழைத்தார். ‘கிருஷ்ணவேணி’, ‘ஜீவனஜோதி’, ‘மரபூரணி மனிஷி’, ‘பொருகிண்டி புள்ளகுரா’, ‘நாயுடு பாவா’, ‘நாமாலா தாதய்யா ’ என சுமார் 75 படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகையாக மிளிர முடியவில்லை. திரைப்படத்தில் நடித்தாலும் நாடக மேடையை அவர் விடவில்லை. நாகபூஷணம் நடத்திய ரத்தகண்ணீரு, ஜமுனாவின் ‘ஸ்ரீகிருஷ்ண துலாபாரம்’ நாடகங்களில் ரமோலா முக்கிய வேடங்களை ஏற்று நடித்தார். அதுமட்டுமின்றி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளப்படங்களில் இருந்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான படங்களுக்கு ரமோலா பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். அவரது முதல் டப்பிங் பணி என்பது கே.வி.ரெட்டி இயக்கத்தில் 1961-ம் ஆண்டு வெளியான ‘ஜகதேகவீரணி கதை’ படத்தில் நாகினி வேடம் ஏற்ற எல்.விஜயலட்சுமிக்கானது. இந்த படம் தான் தமிழில் ‘ஜகதலப்பிரதாபன்’ என வெளியானது. குறிப்பாக நடிகை மனோராவிற்கு அச்சு அசலாக ரமோலா கொடுத்த டப்பிங் அவருக்குப் பேரும் புகழையும் பெற்றுத் தந்தது. பல ஹீரோயின், குணச்சித்திர நடிகைகளுக்கு அவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
தமிழ் படங்களில் ரமோலா
இவ்வளவு புகழ் பெற்ற ரமோலா தமிழில் வேறு என்ன பாடல் பாடியுள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம். 1978-ம் ஆண்டு அமிர்தம் இயக்கத்தில் வெளியான படம் ‘வண்டிக்காரன் மகன்’. எம்.ஜி.ஆருக்கு எதிராக ‘மக்கள் கலைஞர்’ என நாமகரணம் சூட்டப்படட் ஜெய்சங்கர், ஜெயசித்ரா நடித்த இந்த படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார்.
‘கார்த்திகை மாதம் கார்காலம்
கண் குளிர எங்கும் பனிமூட்டம்
உடல் வேர்த்திட நின்றாள் பருவச்சிலை
அதை வேடிக்கை பார்த்தது
பள்ளியறை ம்..ஹ்ம்…….பள்ளியறை…’ என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொகையறாவுடன் பாடுவார்.
‘படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை’
என்ற புகழ் பெற்ற பாடலில் வரும் சிரிப்பு, சிணுங்கல் என ஜெயசித்ராவின் குரலை போல தன் குரலை மாற்றி பாடியவர் ரமோலா. ஆனால், பல இசைத்தளங்களில் வாணி ஜெயராம் பாடியதாக பதிவாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் முதல் படமான ‘அன்னக்கிளி’ படத்தை இயக்கியவர்கள் தேவராஜ்.மோகன். இதில் தேவராஜ் மட்டும் இயக்கிய ‘ஆயிரம் முத்தங்கள்’, ‘கவிதை மலர்’, ‘இசைபாடும் தென்றல்’, ‘அன்னக்கிளி சொன்ன கதை’. ‘ராஜாத்தி ரோஜாக்கிளி’ ஆகிய படங்கள் வெளியாகின. இதில் 1985-ம் ஆண்டு வெளியான ‘ராஜாத்தி ரோஜாகிளி’ படத்தில் ரமோலா பாடிய புகழ் பெற்ற பாடல் இடம் பெற்றுள்ளது. சந்திரபோஸ் இசையில் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய இந்த பாடலைக் கேட்டுப்பாருங்கள்.
‘முத்தம் ஒன்னு வேணும்
உன் மூக்க கிள்ள வேணும்
முகத்த கொஞ்சம் காட்டு
எனக்கு பொங்கி வருது பாட்டு
உங்களோட தொல்ல….
நீ சின்னஞ்சிறு முல்லை
செய்யாதீங்க தொல்லை‘
என்று கெஞ்சல், கொஞ்சலாய் ஒலிக்கும் தொகையறாவுடன் பாடல் துவங்கும்.
‘காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்
கலகலக்கும் கை வளவி
போடப் போறேன் போடப் போறேன்
வெக்கப்பட்டு வெலகி நின்னா
சொர்க்கம் இல்ல சொந்தம் இல்ல …’
மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடல் முழுவதும் பாடகி ரமோலா செய்திருக்கும் மேஜிக் தமிழ் சினிமாவில் இப்படியான ஒரு பாடகியாக என ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஆனால், விக்கி பீடியா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மலேசியா வாசுதேவனை தவிர பாடகி பெயரே இல்லை என்பது தான் பெருந்துயரம்.
ஸ்ரீதர் இயக்கத்தில் 1981-ம் ஆண்டு சிவாஜி கணேசன், கீதா, ஜெயபாரதி, பத்மபிரியா உள்பட பலர் நடித்த படம் ‘மோகனப் புன்னகை’. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய
‘குடிக்க விடு என்னை குடிக்க விடு
மதுகுளத்தில் குளிக்க விடு
மனமயங்கி மிதக்க விடு
கனவுலகில் நடக்கவிடு
அது தான் எனக்கு அமைதி
அது தான் எனக்கு அமைதி…’
இந்த பாடலில் மது பாட்டிலோடு சிவாஜி தோன்றுவார். அவரைக் குடிக்க விடாமல் ‘நோ நோ நோ‘ என அனுராதா கதறி அழுவார். அவருக்கு இந்த பாடலில் குரல் கொடுத்தவர் ரமோலா. இந்த பாடலில் கண்ணீர் விட்டு கதறி அழுவார். இப்படியான உணர்ச்சிகரமான உணர்வுகளை வெளிப்படுத்திய ரமோலா, வி.எஸ்.நரசிம்மன் இசையில் மிரட்டிய ‘யார்’ படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அற்புதமான டூயட் பாடலைப் பாடியுள்ளார்.
‘இதுக்குத்தான் எல்லாமே இதுக்குத்தான்
கிறுக்குத்தான் உன்மேலே கிறுக்குத்தான்..’ என்ற பாடலில் ரமோலாவின் முத்திரை இருக்கும். ஜோசப் ஆனந்தன் இயக்கத்தில் 1981-ம் ஆண்டு வெளியான ‘திருப்பங்கள்’ படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் ஜாலி ஆபிரகாமுடன் இணைந்து இரவில் வெளிச்சங்கள் என்ற பாடலை ரமோலா பாடியுள்ளார். 1991-ம் ஆண்டு அமீர்ஜான் இயக்கி படம் குறும்புக்காரன். முரளி, சுமா ரங்கநாத் நடித்த இப்படத்திற்கு வி.ஆர்.சம்பத் செல்வன் இசையமைத்தார். இந்த படத்தில் இடம் பெற்ற
‘வாராயோ வாளைமீனு கேளாயோ கெழுத்தி மீனு
மைனாவே மைனாவே நில்லு
உன் மாராப்பு வயசென்ன சொல்லு…’
என்ற பாடலை மனோ, மீரா, யுகேந்திரனுடன் இணைந்து பாடியவர் ரமோலா. 1984-ம் ஆண்டு மோகன், சாதனா, நரேஷ் நடிப்பில் வெளியான படம் நெஞ்சத்தை அள்ளித்தா. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நரேஷ், சாதனாவிற்கான டூயட் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடியவர் ரமோலா. வழக்கம் போல அவரின் சிணுங்கல்களுடன் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சிறப்பான பாடல்,
‘உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்…’
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத யுனிக் வாய்ஸ் என்று ரமோலாவின் குரலை தாராளமாகச் சொல்லலாம். பின்னணிக்குரல் கலைஞர் என்பதால், ரிக்கார்டிங் அறைக்குள் இருந்து கொண்டு எத்தனை விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களை அவர் வழங்கியுள்ளார் என்று நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்நீச்சல் போட்டே தனக்கான இடத்தை தக்க வைத்த ரமோலாவின் திருமண வாழ்க்கை துயரத்தில் முடிந்தது, மேலும் அவரது தாயாரின் மரணம் அவரை மிகவும் பாதித்தது. இந்த நிலையில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் ரமோலா. ஆனாலும், அங்கும் தனது முத்திரையை அவர் பதிக்கத் தவறவில்லை. பாடகி, நடனக்கலைஞர், பின்னணி குரல் கலைஞர், நடிகை என்பதைத் தாண்டி ஒரு பாடலாசிரியராகவும் மாறினார். இயேசுநாதரைப் பற்றி 35 பாடல்களையும் எழுதியுள்ளார் ரமோலா. இவ்வளவு திறமை வாய்ந்த கலைஞரை ஏன் திரையுலகம் கொண்டாடவில்லை?
ப.கவிதா குமார் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க
1) https://maduraiseithi.in/uruvamariya-isaiveli-part-ii/
2)https://maduraiseithi.in/uruvamariya-isaiveli-part-ii-2/
3)https://maduraiseithi.in/uruvamariya-isaiveli-part-ii-3/




வியப்பாக இருக்கிறது! உண்மையை ஒத்துக்கொள்கிறேன், ரமோலா என்ற இந்த அற்புதக் கலைஞரை பற்றி இப்போதுதான் நான் அறிந்து கொள்கிறேன். நீங்கள் குறிப்பிடுகின்ற பாடல்களில் ஒரு சிலவற்றை கேட்டிருந்தாலும் இவரைப் பற்றி அறியாமல் இருந்திருக்கிறேன். உங்கள் அரிய தேடலும் உழைப்பும் பாராட்டத்தக்கவை. புகழ் வெளிச்சம் படாத பல நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இவ்வாறு மறைந்து இருக்கிறார்கள். சிறப்பான திரையிசை வரலாறு.
மிக்க நன்றி தோழர். தமிழ் சினிமாவில் தடமற்றுப் போனவர்களைத் தடம் பதிக்க வைக்கும் சிறு முயற்சி தான் இந்த தொடர்.