
ரூ.634 கோடி ஊழல் வழக்கில் தனக்கு தொடர்பிருப்பதாக பரவும் செய்தி உண்மையில்லை என சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபிக்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதனை தள்ளுபடி செய்ய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தரப்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த ஊழலில் சின்னதிரை நடிகைகளின் பெயர்களும் இருப்பதாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் வெடித்தன.
இந்த நிலையில், சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பிரபலமான ஜனனி அசோக் குமார் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், இதயம் ஆகிய சீரியல்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “634 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் என்னை தொடர்புபடுத்தி, எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியான பதிவுகளை பார்த்தேன். அது தொடர்பாக விளக்கம் கொடுப்பது முக்கியம் என நினைக்கிறேன்.
எனக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நான் எப்போதும் அரசியலில் இருந்து விலகியே இருக்கிறேன். நான் எந்த கட்சியிலும் இல்லை, எந்த அரசியல்வாதியுடன் தொடர்பிலும் இல்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. என்னுடைய வாழ்க்கைக்கு எதிரானவை. உண்மைக்கு எந்த முகாந்திரமும் இல்லாத இது போன்ற தகவல்கள் எப்படி வெளியாகி, ஊதி பெரிதாக்கப்படுகின்றன? சம்பந்தபட்டவர்களிடம் எதையும் கேட்காமல் அவர் பெயரும், ஆதாரமும் இல்லாமல் எப்படி பரப்பப்படுகிறது என்பதை கேட்க விரும்புகிறேன்.
துல்லியமாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்பு பத்திரிகைத்துறைக்கு உண்டு. என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவது என்னை காயப்படுத்துகிறது. விசாரணைக்கு அழைப்பதாலேயே குற்றம் செய்ததாக அர்த்தமல்ல. திரைத்துறையில் கடினமாக உழைத்து எனக்கான கண்ணியமான இடத்தை உருவாக்கியுள்ளேன். ஒரு பெண் தனியாக ஆரம்பத்திலிருந்து கடினமாக உழைத்து, தன்னுடைய கரியரை உருவாக்கியிருந்தால், ஆன்லைனில் பரவும் அவதூறால் அதையெல்லாம் எளிதாக மறைத்துவிட முடிகிறது.
ஒருவர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல், அல்லது உண்மையை அறிந்துகொள்ளாமல், ஆன்லைனில் பரவும் தகவலை வைத்து ஒருவர் குறித்து எளிதாக முன்முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். என்னைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது பொய் என தெரியும். இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியதை நினைக்கும்போதே வருத்தமாக உள்ளது. யாருக்கும் என்னை நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை தன்மை அறிந்து செய்திகளை நம்புங்கள்” என்று தெரிவித்துள்ளார்.



