
எங்களுக்கு எந்தச் சீரும் நீங்கள் செய்ய வேண்டாம்; அதற்குப் பதிலாகப் பெண்களின் பாதுகாப்பிற்காகப் ‘பெப்பர் ஸ்பிரே’கொடுங்கள் என்று கனிமொழி எம்.பி கூறினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில், “தவெக ஆட்சியில் தமிழ்நாடு என்பது போதைப் பொருட்கள் தாராளமாகக் கடத்தப்படும் மாநிலமாக மாறிவிட்டது. பணத்தாசை பிடித்து அலையும் முதலமைச்சர் விஜய்யும், அவருடன் இருக்கும் 40 அலிபாபா திருடர்களும் விரைவில் மக்களின் கண்முன்னே அம்பலப்படுவார்கள். தான் எதற்காக முதலமைச்சர் ஆனேன் என்றுகூடத் தெரியாத குழப்பமான நிலையில்தான் விஜய் உள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ‘இது நாடா, காடா?’ என்று அன்பான தம்பி, ‘ஸ்வீட் ப்ரோ’ விஜய் சவால் விட்டாரே, இப்போது என்ன ஆனது? அண்ணன் ஸ்டாலின் ஆட்சி சரியில்லை என்றுதானே மக்கள் இவரை நம்பி ஓட்டுப் போட்டார்கள்? ஆனால், இப்போது கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். மாற்றம் வரும் என்று நம்பி தவெகவுக்கு வாக்களித்த பெண்களெல்லாம் இப்போது தாங்கள் செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறார்கள்; பெண்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டார்கள். அதனால் நிச்சயம் விரைவில் மாற்றம் வரும்.
எங்கள் குழந்தைகளுக்கு நீங்களும் மோதிரமெல்லாம் போட வேண்டாம்; எங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும். நீங்கள் எங்களுக்கு எந்தச் சீரும் செய்ய வேண்டாம்; அதற்குப் பதிலாகப் பெண்களின் பாதுகாப்பிற்காகப் ‘பெப்பர் ஸ்பிரே’ (Pepper Spray) கொடுங்கள். இந்தத் துப்பில்லாத ஆட்சியில் அதுவாவது பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும். தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இந்த ஆட்சியில் இதுவரை 700 கொலைகளும், பெண்களுக்கு எதிரான 400 வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. இதுதான் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் லட்சணமா?” என்று கேள்வி எழுப்பினார்.



