
ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்
மதுபான ஊழல் வழக்கில் இருந்துடெல்லி முன்னாள் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி கலால் வரிக் கொள்கை வழக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 27) விடுவித்துள்ளது. கெஜ்ரிவால், சிசோடியா உட்பட 23 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் நிராகரித்து அவர்களை முழுமையாக விடுவித்துள்ளது.
மேலும், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்த ஆதாரமும் இல்லை என்றும், பெரிய சதி அல்லது குற்றவியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும் நீதிபதி ஜிதேந்திர சிங் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. வழக்கு ஆரம்பம் முதலே ஆதாரங்கள் இல்லாமல் நடத்தப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும்” வாக்குமூலம் கோரியும் சரியாக வழங்கப்படவில்லை, நட்சத்திர சாட்சிகளின் பட்டியல் தரப்படவில்லை, ஒப்புதல் வாக்குமூலங்களின் நகல் கூட கொடுக்கப்படவில்லை” என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். அத்துடன் சிபிஐ வழக்கறிஞரிடம் நேர்மையை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இந்த தீர்ப்பைக் கேட்டவுடனே நீதிமன்ற அறையிலேயே கெஜ்ரிவாலும், சிசோடியாவும் தங்கள் வழக்கறிஞர் ஹரிஹரனை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த அர்விந்த் கெஜ்ரிவால் உணர்ச்சி வசப்பட்டு அழுதார். அப்போது “நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது. உண்மை வென்றது” என்று கூறினார். மேலும் நான் ஊழல்வாதி அல்ல. நீதிமன்றம் கெஜ்ரிவாலும் சிசோடியாவும் நேர்மையானவர்கள் என்று கூறியுள்ளது என்று கூறினார்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாகச் சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் காரணமாகவே அர்விந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்யவிடாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில் அவரும், மணீஷ் சிசோடியாவும் விடுதலையாகியுள்ளது ஆம் ஆத்மி கட்சியினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



