தவெக கூட்டணியின் பெயர் அறிவிப்பு: கூட்டத்தை இடதுசாரிகள் புறக்கணிப்பு

தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது.

தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுணா விசிக தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், அமைச்சர் வன்னி அரசு, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், தாரகை கதபட் , ஐயூஎம்எல் சார்பில் தலைவர் காதர் மொகிதீன், அமைச்சர் ஷாஜகான் மற்றும் சையது ஃபாரூக் பாஷா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைக்கப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என இடதுசாரி கட்சிகள் அறிவித்து விட்டன.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 9) தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், கூட்டணிக்கு பெயர் வைப்பது, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அடங்கிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *