
ஜம்முவில் ஃபரூக் அப்துல்லாவை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனருமான டாக்டர் ஃபரூக் அப்துல்லா துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பியுள்ளார். கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வழக்கறிஞரின் மகன் திருமணவிழாவில் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் துணை முதலமைச்சர் சுரீந்தர் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். விருந்து மண்டபத்திலிருந்து அப்துல்லா வெளியே வந்த போது அவரை சுற்றி பாதுகாப்பு படையினர் வந்தனர்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென, மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து, ஃபருக் அப்துல்லாவின் தலைக்கு அருகே கொண்டு சென்று சுட முயன்றுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர், மர்மநபரை கீழே தள்ளி சுற்றி வளைத்தார். அப்போது துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா கூரையை நோக்கி சென்றது. அப்துல்லா அங்கிருந்து தலையை குனிந்தபடி தப்பிச் சென்றார். துப்பாக்கியால் சுட்டவரை பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்தனர். அவர் பெயர் கமல்சிங் ஜம்வால்(63) என்றும், ஜம்முவின் மண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ஃபருக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரவலாகி வருகிறது.



