வீட்டில் இருந்தே வேட்புமனு தாக்கல் செய்யலாம்…வந்து விட்டது புதிய செயலி!

நேரில் வராமல் செயலி மூலமே வேட்புமனு தாக்கல் செய்யும் புதிய நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 4-ம் தேதி தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய 9 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி உள்ளிட்ட 4 நாட்கள் அரசு விடுமுறை தினம் வருவதால், இந்த 9 நாட்களிலும் 5 நாட்கள் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தேர்தலில் நேரடியாக வராமல் ஆன்லைன் மூலமே வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ‘சுவிதா 2.0’ செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இதில் வேட்பாளர்கள் தங்கள் செல்போல் எண், வாக்களார் அடையாள அட்டையை பயன்படுத்தி அடிப்படை தகவல்களை தானாகவே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரடியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஏற்படும், சிரமங்களை தவிர்க்க இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த செயலி மூலம், சொத்து விபரங்கள், வழக்குகள் குறித்த பிரமாண பத்திரங்கள் என அனைத்தும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

வேட்புமனு தாக்கலின்போது ஏற்படும் நெரிசல், மோதல்களைத் தவிர்க்க, இந்த ஆன்லைன் வேட்புமனு தாக்கல் பெரும் உதவியாக இருக்கும் என்றும், கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைனில் வேட்புமனுவை தாக்கல் செய்தாலும் அதன் நகலை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *