
கோவையில் சாதியைச் சொல்லி திட்டியதால் பட்டியலின மாணவர் தற்கொலை செய்த வழக்கில் தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பீளமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவர் அகிலன். இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக அவரது தாய் கௌசல்யா அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தங்களது மகன் சாவுக்கு சாதிப்பிரச்னையே காரணம் என்று குற்றம் சாட்டினர். வகுப்பறையில் மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து மாணவர் அகிலனிடம் ஆசிரியர் கேட்டதாகவும், அதன்பிறகு சக மாணவர்கள் இருவர் சாதிப் பெயரைக் கூறித் திட்டி, தாக்கியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்கொலைக்குத் தூண்டுதல், தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பள்ளித் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் என நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



