
எஸ்ஐஆர் இல்லாவிட்டால் தவெக 160 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (அக்.23)நடைபெற்றது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில்,இக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எஸ்ஐஆர் நடைமுறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, தவெக, திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆனாலும் பாஜக, அதிமுக, தேசிய மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றன.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ எஸ்ஐஆர் நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தோம்.
திமுகவைக் கையில் வைத்துக்கொண்டு எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். முதலில் தேர்தல் ஆணையம் தனது தவறுகளைச் சரிசெய்ய வேண்டும். தவறுகளைச் சரிசெய்யாமல் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்வது தேவையற்றது. எஸ்ஐஆர் நடைமுறையால் இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டனர். எஸ்ஐஆர் நடைமுறை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பொதுத்தேர்தலில் தவெக 160 இடங்கள் வரை வெற்றி பெற்றிருக்கும்” என்றார்.



