
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் டிரோன், ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது அடுத்தடுத்த தாக்குதலை ஈரான் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்கெனவே, எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவுள்ளதாகவும் புரளிகள் கிளம்பியது.
இதன் காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் நேற்று இரவுமுதல் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பெட்ரோல் நிரப்ப வரிசையில் காத்திருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந் நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோல் நிறுவனங்கள் இன்று (மார்ச் 12) விளக்கம் அளித்துள்ளன. பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



