
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.
ஜீவனாம்சம் கேட்ட மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த கணவர், சிசிடிவியால் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துவேறுபாடு
கர்நாடகா மாநிலம், தார்வாட் மாவட்டம் சோமபுரா கிராமத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண்ணை கடந்த 2000-ம் ஆண்டு நரேந்திர கிராமத்தைச் சேர்ந்த உதய ஹட்டராகி திருமணம் செய்தார். இருவரின் வாழ்க்கை பத்து ஆண்டுகள் நல்லமுறையாகத் தான் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், இருவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று லலிதா, நீதிமன்றத்தை நாடினார்.
காட்டிக் கொடுத்த சிசிடிவி
இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில், பிப்ரவரி 26-ம் தேதி சவதாட்டி சாவடியில் உள்ள துர்காதேவி கோயில் முன் அடையாளம் தெரியாத கார் மோதி லலிதா உயிரிழந்தார். விபத்து வழக்காக பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஒரு பேருந்தின் பின்புறம் பொருத்தப்பட்ட சிசிடிவியில் லலிதாவை ஒரு கார் மோதி கொலை செய்யும் காட்சி பதிவாகியிருந்தது. இதை பார்த்த அந்த பேருந்தின் ஓட்டுநர், காவல்துறையிடம் இந்த விஷயத்தை கூறினார். அந்த சிசிடிவி காட்சியைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஜீவனாம்சம்
அப்போது லலிதா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக லலிதாவின் கணவர் உதய ஹட்டராகி மற்றும் அவரது மூன்று நண்பர்களையும் போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை வழக்குத் தொடர்பாக எஸ்.பி குஞ்சன் ஆர்யா கூறுகையில், தனது கணவரிடமிருந்து
ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று லலிதா நீதிமன்றத்தை அணுகியதால் அவரது கணவர் கோபமடைந்துள்ளார். தனது குடும்ப பராமரிப்புக்காக இரண்டு ஏக்கர் நிலம் வேண்டும் என்று லலிதா கேட்டிருந்தார். ஆனால், அவரது கணவர் நிலத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இது தனது கணவருக்கு அடிக்கடி போன் செய்து லலிதா கேட்டுள்ளார்.
4 பேர் கைது
இதனால் தனது மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்ய உதய ஹட்டராகி முடிவு செய்துள்ளார். இதற்காக மூன்று பேரை ஏற்பாடு செய்துள்ளார். தனது மனைவிக்கு போன் செய்த உதய ஹட்டராகி, துர்கா தேவி கோயிலுக்கு வரச்சொல்லியுள்ளார். இதன்படி கோயிலுக்கு வந்த லலிதாவை, உதயஹட்டராகி ஏற்பாடு செய்த கூலிப்படையினர் காரை ஏற்றிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த போது பின்னால் வந்த பேருந்துவில் இருந்த சிசிடிவியில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் லலிதாவின் கணவர் உதய ஹட்டராகி, அவரது நண்பர் நாகப்பா படேகல், அபிஷேக் வரகன்னவர் மற்றும் நாகராஜா உப்பின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். ஜீவனாம்சம் கேட்ட மனைவியை கூலிப்படை ஏவி கணவனே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



