
லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிற பாகுபாடு கொண்டது என்று பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், மூத்த வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து தன்னை பிசிசிஐ புறக்கணித்து வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராம கிருஷ்ணன் கடந்த 1985-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாகச் செயல்பட்டதுடன் இந்தியாவுக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 26 மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணையாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். 60 வயதான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். கடந்த 23 ஆண்டுகளாக டாஸ் போடும் நிகழ்வு மற்றும் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழா ஆகியவற்றில் வர்ணனை செய்ய பிசிசிஐ என்னை அனுமதிக்கவே இல்லை. ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே போன்றவர்களுக்கும், புதிதாக வர்ணனைக்கு வருபவர்களுக்கும் மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனது சுயமரியாதையை இழந்து என்னால் யாருக்கும் அடிபணிந்து கிடக்க முடியாது.

ரவிசாஸ்திரியுடன் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்
எனது இந்த ஓய்வு ஒரு நீண்ட கதையின் தொடக்கம் மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவரும்போது பொதுமக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். பிசிசிஐ இதை நம்ப முடியாமல் திகைத்து நிற்கும்” என்று எச்சரித்துள்ளார். ஒரு ரசிகர், “நீங்கள் கருப்பாக இருப்பதால் உங்களை பரிசளிப்பு நிகழ்வில் அனுமதிக்கவில்லையா?” எனக் கேட்டதற்கு, “நீங்கள் சொல்வது சரி. நிற பாகுபாடுதான்” எனக் கூறியுள்ளார். இவரது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “ “ஓ நோ! இந்த ஐபிஎல் தொடரில் ஏன் நீங்கள் இல்லை?” எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்



