மார்ச், ஒரே மாதத்தில் மட்டும் ரூ10 லட்சம் கோடி மாயம் ஏனிந்த வீழ்ச்சி?

இந்திய சந்தைகள் இப்போது எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் வீழ்ச்சியின் பின்னே பல காரணங்கள் இருக்கின்றன.
ஏப்ரல் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தையை சூறாவளி தாக்கத் தொடங்கியது. சில நாட்களில் சென்செக்ஸ் ஆயிரக்கணக்கான புள்ளிகள் வீழ்ச்சியடைய, முதலீட்டாளர்களின் கோடி ரூபாய்கள் அவற்றின் லட்சங்களில் மாயமாக ஆரம்பித்தன. இந்த வீழ்ச்சியின் பின்னணியில் உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகளை உள்ளடக்கிய ஒரு சூறாவளி சந்தையில் குடிகொண்டிருப்பதை உணரலாம்.

- மத்திய கிழக்கு போர் பதற்றம் – எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே தீவிரமடைந்த போர் பதற்றம் இந்திய சந்தையை நேரடியாக பாதித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 115-க்கு மேல் உயர ஆரம்பித்தது. இந்தியா எண்ணெய் இறக்குமதியில் பெரிதும் சார்ந்துள்ளதால், இது பணவீக்கம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் தேய்மானத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது. - வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
மார்ச் மாதம் முழுவதும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) இந்தியப் பங்குகளை சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் விற்றுள்ளனர். இது அண்மைக்காலத்தில் இந்தியா எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் வெளியேற்றமாகும். போர் பதற்றம், உயர் எண்ணெய் விலை, ரூபாயின் பலவீனம் ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களை விற்கும் மனநிலைக்கு தள்ளின.
- ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி
ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.95-க்கு அருகில் வீழ்ந்தது, இறக்குமதி செலவை அதிகரித்து, பணவீக்க அழுத்தத்தை அதிகப்படுத்தியது. எண்ணெய் இறக்குமதி செலவு உயர்வு இந்திய பொருளாதாரத்தின் மீதும் கூடுதல் அழுத்தத்தை விளைவித்ததில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. - உள்நாட்டு காரணிகள்
பட்ஜெட் தாக்கலில் பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் பத்திர பரிவர்த்தனை வரி(STT) உயர்வு, வர்த்தகர்கள் முதல் தரகு நிறுவனங்கள் வரை அதிருப்தியை உண்டாக்கியது.
காலாண்டு முடிவில் பல நிறுவனங்களின் வருவாயானது எதிர்பார்ப்புக்கு குறைவாக இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளின் பலவீனம் இந்தியாவையும் பாதித்தது.
5.ஒப்பீட்டளவில் பெரிய வீழ்ச்சியா?
பங்குச்சந்தையின் வீழ்ச்சி என்பவை உண்மையில் முதலீட்டாளர்களுக்கான அரிய வாய்ப்புகளாகவே அடையாளம் காணப்படும். இறக்கமின்றி ஏறும் சந்தை அபாயகரமானது. ஏற்ற இறக்கமான சந்தையின் வளர்ச்சியே இயல்பானது. ஆனால் தற்போது சந்தை எதிர்கொள்ளும் வீழ்ச்சி ஒப்பீட்டளவில் பெரிது. படிப்படியாக எட்டும் வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை தந்து, தங்கள் இருப்பை அவர்கள் சந்தையில் விற்கச் செய்து, சரிவை மேலும் பள்ளத்தாக்கு அளவுக்கு மாற்ற முயல்கிறது.
இந்திய சந்தை கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய முதலீட்டாளர்களின் விருப்பத்துக்குரிய சந்தையாக இருந்தது. கொரோனாவுக்கு பிந்தைய ஏற்றம் முதலீட்டாளர்களின் பெருவிருப்பத்துகுரியதாக இருந்தது. அதே வேளையில், எண்ணெய் விலை உயர்வு மற்றும் புவிசார் அரசியல் சார்ந்த ஆபத்துகள் இணைந்து இந்தியாவை பதம் பார்க்க ஆரம்பித்தன. மார்ச் மாதம் நெடுக தொடர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர் விற்பனையுடன், எண்ணெய் எரிபொருள் சார்ந்த அதிர்ச்சியும் சேர்ந்து ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் மார்க்கெட் மூலதன இழப்புக்கு வித்திட்டன.

6.வரமா சாபமா?
சில முதலீட்டு நிபுணர்கள் போர் பதற்றம் தணிந்தால், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வாங்கும் படலம் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் நுழைவு மூலம் சந்தை மீண்டு வரும் என்கின்றனர். ஆனால் எரிபொருள் எண்ணெய் விலை 100 டாலருக்கு மேலாகவே நீடித்தால், பணவீக்கம், ரூபாய் பலவீனம், கார்ப்பரேட் லாபம் ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
திய பங்குச்சந்தையின் இந்த வீழ்ச்சி ஒரு தற்காலிக அதிர்ச்சியா அல்லது நீண்டகால போக்கின் தொடக்க அறிகுறியா என்பது, இந்த நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல் முடிவதற்குள் திட்டவட்டமாக தெரிந்துவிடும். அதுவரை, தினசரி வர்த்தகம் என்ற பெயரில் சந்தையில் நுழைவோர் சூடுபட அதிக வாய்ப்புண்டு. மற்றபடி, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது வரப்பிரசாத காலம் எனலாம். கையிருப்பை ஒட்டு மொத்தமாக சந்தையில் கரைக்காது, இறக்கம் தோறும் தவணை முறையில் வாங்கிக் குவித்தால், காலக்கிரமத்தில் லாபம் பார்க்க ஏதுவாகும்.
– எஸ்.சுந்தர்
பொறுப்பு துறப்பு
பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகள் அதற்கான அபாயங்களுக்கு உட்பட்டவை. இங்கே வழங்கப்பட்டது எதுவும் முதலீடுக்கான பரிந்துரை ஆகாது.



