
வாழ்வது மட்டும்தான் இந்த பேருலகம் மனிதகுலத்திற்கு முன்பு திறந்து வைத்திருக்கும் பெரும் சாத்தியம். ஆனாலும், விரும்பும் வாழ்க்கை விரும்புகிற முறையில் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. பேராசை கொண்டு பெரும் பொருள் ஈட்டுகிற மனிதர்கள் வாழும் உலகிது. இங்கு பலரும் பொருள்சார் வாழ்வின் மீதான வேட்கையில் எந்த அடிப்படை அறத்தையும் பின்பற்றுவதில்லை. முழித்திருக்கும் போதே முழியைத் தோண்டி விற்றுக் காசாக்கிடும் காரியக்காரர்களால் நிறைந்திருக்கிறது சமகாலம். பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் குறுகிய செயலுக்கு வியாபார உத்தி என்று பெயரிட்டுக் கொள்கிறார்கள்.
வெற்றி மட்டும்தான் இறுதி லட்சியம் அதனை அடைய எந்த கீழ்மையான செயலையும் செய்யலாம் தவறில்லை என தங்களின் செயல்களுக்கு நியாயத்தை கற்பித்துக்கொள்ளும் மனிதர்கள் ஒருபுறம். இவர்களால் வடிவமைக்கப்பட்டது போல தோற்றம் அளித்தாலும் நிஜத்தில் இந்த உலகம் இப்படியான அறம் புரண்ட மனிதர்களுக்கு மட்டுமானதில்லை. இதற்கு நேர் எதிரான பிறிதொரு உலகமும் இந்த பூமிப்பந்தில் விரிந்து கிடக்கிறது. இன்றைக் கடந்து விட்டால் போதும் நாளைய பொழுதை நாளை பார்த்துக்கொள்வோம் எனும் நினைப்பிலேயே நாட்களை நகர்த்துபவர்கள்தான் சரிபாதிக்கும் மேலானோர் இங்கு.
அதிகாலையில் சிறு நகரங்களில் அந்த நாளுக்கான கூலியைப் பெறுவதற்கான வேலைக்கு காத்திருக்கும் கட்டிடவேலை செய்யும் சித்தாள்கள், கொத்தனார்கள். கலைந்த கேசத்துடன் ரயில் பெட்டிகளில் இருந்தும்,பேருந்துகளில் இருந்தும் கலைத்து இறங்கிவரும் பயணிகளிடம் “வாங்க சார் போகலாம்,சார் ஆட்டோ வேணுமா?” என பாந்தமாக அழைக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள். எல்லாம் இற்று முதுமை எய்திய பிறகும்கூட எதிரே சீறிவரும் சொகுசுக்கார்களை வழிவிரித்து பச்சைக்கொடி ஆட்டி விசில் பறக்க நின்று கொண்டிருக்கும் சாலையோர உணவு விடுதிகளின் வாயில் காப்போர், அன்றாடத்தை நகர்த்திட சாலையோரத்தில் கடைவிரித்து தங்களின் அந்நாளுக்கான பணம் தேடிடும் சில்லறை வியாபாரிகள், வாழ்நாள் எல்லாம் மூட்டைகளைச் சுமந்து சுமந்து கூன்முதுகாகிப் போன சுமைப்பணித் தொழிலாளிகள் என கடைகோடி மனிதர்கள் வாழும் உலகமும்தான் இந்த பேருலகம்.
இந்த விளிம்பு நிலைப் பாட்டாளிகளின் வாழ்வினைக் கதையாக்கியோர் பலருண்டு. விந்தன் துவக்கி வைத்த இப்பகுதி மக்களின் வாழ்க்கைப் பாடுகளுக்குள்ளும் பாடப்பட்டிருக்காத ஒருபகுதி மக்களின் வாழ்க்கைப்பகுதி மிச்சமாக இருக்கிறது. வாழ்வின் கசப்பான எச்சிலாக மிச்சம் மீதியென ஒதுங்கி விளிம்பிற்கும் வெளியே துரத்தப்பட்டு இருட்டிற்குள் வாழ்வினைத் தேடிட நிர்பந்திக்கப்பட்டவர்களின் மீதான கரிசனை இல்லாமல் போய்விட்டது. உதிரிப் பாட்டாளிகளின் வாழ்விற்கும் கீழான வாழ்வினை தங்களுக்கானதாக ஆக்கிக்கொண்ட பாலியல் தொழிலாளிகளின் வாழ்வினைப் பற்றிய கதைகளும் அவர்களுடைய வாழ்வின் துயர்மிகு பக்கங்களும் தமிழ்க் கதைகளில் ஏன் பதிவுறுத்தப்படவில்லை எனும் கேள்வி ஏன் இதுவரை எழவில்லை என எழுபதுகளில் முதல் கேள்வியை கேட்டவர் எழுத்தாளர் ஜி.நாகராஜன்.
தான் தேடிக்கண்டடைய நினைத்த இலக்கியப் புலத்தின் அசல் தன்மையை தன்னுடைய கதைகளில் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்பதற்காக வாழ்வினையே தத்தம் செய்தவர் எழுத்தாளர் ஜி.நாகராஜன். மதுரை டவுன்ஹால் ரோட்டு இருள் வாழ்க்கையின் ஒளிவிழாத இருள் பக்ங்களை எழுத்தாக்கிட துணிந்து அந்த கொடும்சாலையில் இறந்தும் போனவர். அவர் ஒரு கணிதஆசிரியர். அந்த நாட்களில் மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் தங்கம் தியேட்டரில் இடைவேளையின் போது சிலைடு போட்டிருக்கிறார்களாம். “எங்கள் கல்லூரிக்கு பேராசிரியர் ஜி.நாகராஜன் கணித வகுப்பெடுக்க வருகிறார், மிகக்குறைந்த இடங்களே இருக்கின்றன, மாணவர்களே விரைந்து சேருங்கள்” என்று.
கணிதத்தில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும், இந்தியிலும் பெரும் புலமை பெற்றவர் எழுத்தாளர் ஜி.நாகராஜன். இலக்கியத்திற்காக எழுத்திற்காக எல்லா பகட்டையும் விட்டெறிந்தவர் அவர். அவருடைய ‘குறத்தி முடுக்கு’,‘நாளை மற்றுமொரு நாளே’ எனும் இரண்டு நாவல்களும் அவருடைய முன்மாதிரி இல்லாத இலக்கிய சாதனைக்கான சாட்சிகள். நாவல்களில் மட்டுமல்ல, சிறுகதைகளிலும் அவருடைய பங்களிப்பு மிக தனித்துவமானது. ‘பச்சைக்குதிரை’, ‘மிஸ். பாக்கியம்’, ‘ஓடின கால்கள்’ போன்ற மனங்களுக்குள் பயணிக்கும் சிறந்த கதைகளை எழுதியிருக்கிறார். அவருடைய சிறுகதைகளில் ஆகச்சிறந்த கதை மனித வாழ்வின் இருப்பை பற்றி தர்கம் செய்த ‘டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்’ எனும் கதை. மனிதர்களுக்கு இடையே மரணமும் வாழ்ந்து விடுவது எனும் வைராக்கியமும் எப்படி அவர்களை வதைக்கிறது என்பதைக் குறித்த கதையிது..

கதை தேவயானை என்கிற பாலியல் தொழிலாளியைப் பற்றியது. பூடகமாக எல்லாம் எழுதுபவரில்லை ஜி.என். முதல்வரியிலேயே மூஞ்சில் அடித்தாற்போல கதையைச் சொல்லிவிடும் வழக்கம் கொண்டவர் அவர். “போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால்…கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டுவாசலில் எவரும் காத்திருக்க வேண்டாம் என காலையிலேயே சொல்லி விட்டான் அத்தான்”. இதுதான் முதல்வரி. வாசகருக்கு கதையின் ஓட்டம் முதல்வரியிவேயே துவங்கிவிடுகிறது.
தேவயானை யாருமற்ற அவர்களுடைய தொழிலிடமான வீட்டில் கசங்கிக்கிடக்கும் படுக்கையறையில் படுத்துக்கொண்டு தன்னுடைய சக தொழிலாளிகளான மற்ற பெண்களையும் அவர்களைப் பற்றிய தனித்த குணாம்சங்களையும் அசைபோட்டபடி விட்டத்தை வெறிக்கிறாள். அவளுக்கு வாழ்வின் மீதான கசப்பு துளிர்விடத் துவங்குகிறது. என்ன பொழப்பு இது. இப்பிடி எந்தவிதமான கூச்சமும் இல்லாம மரத்துப் போய்விட்ட. இந்த உடலைச் சுமந்து கொண்டு எதற்கு வாழவேண்டும் என யோசிக்கிறாள். சரி தற்கொலை செய்வோம் என அதற்கு தன்னைத் தயாரிக்கிறாள்.
ஊரிலிருந்து இந்த அறை நோக்கி வருவோம் என அவள் நிச்சயம் நினைத்திருக்கவில்லை. அவளுடய கட்டிலுக்கு அடியில் இரண்டு முழக்கயிறு ஒன்று இருக்கிறது அதை உருவி எடுக்கிறாள். அந்தக் கயிறு தேவயானையின் அம்மா வாழ்வதற்காக இந்த ஊருக்கு கிளம்பும்போது இவளுடைய மெத்தையைக் கட்டுவதற்காக கொடுத்த கயிறு. அந்த மணிக்கயிறு போதும் தற்கொலைக்கு என உறுதியாகிறாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு உத்திரத்தில் இறுக்கப்பட்டிருக்கும் வட்டவடிவிலான இரும்பு வளையத்தைப் பார்க்கிறாள். கயிற்றின் நீளத்திற்கும் இரும்பு வளையத்திற்கும் இடையே உள்ள தூரத்தை கண்களால் அளக்கிறாள். பளீர் என எரிந்து கொண்டிருக்கும் மெர்க்குரி விளக்கு வெளிச்சத்தில் தூரம் மட்டுப்படவில்லை. வேறு வழியில்லை என கீழ் அறைக்குப்போய் ஒரு கம்பை எடுத்து வருகிறாள். அந்தக் கழியின் இடுக்கில் கயிற்றைப் பொருத்தி அதனை இரும்பு வளையத்தில் போய் சேர்ப்பதுதான் அவள் திட்டம். கயிறு மேலேறும்போது அது இரும்பு வளையத்தை தொடும் முன்பாகவே கீழே விழுந்து விடுகிறது.
சின்ன இரும்பு ஆணி இருந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என யோசித்தபடி அந்த இருட்டறையில் ஆணியைத்தேடி கண்டைடகிறாள். ஆணியில் கயிற்றைக்கட்டி அந்த தொகுதியை கழியில் கட்டி இறுக்கி மேலேற்றுகிறாள். தற்கொலை செய்ய வேண்டும் எனும் சிந்தனையைவிட அவளுக்குள் இரும்பு வளையத்திற்குள் கயிற்றை மாட்ட வேண்டும் அதுமட்டும்தான் ஓடிக்கொண்டேயிருக்கிறது. எல்லாம் சரியாக நடந்துவிட்டது. தன்னையே மெச்சிக்கொள்கிறாள். மாட்டியபிறகு கட்டிலில் மல்லாந்து படுக்கிறாள். வேலையின் துரிதத்தில் கவனம் மனம் தப்பிப்போகும் விசித்திர நொடியது. அதனைக் கச்சிதமாக ஜி. என். துளித்துளியாக காட்சிப்படுத்தியிருப்பார் கதைக்குள். பிறகுதான் அவளுக்கு எதற்காக இதைச் செய்தோம் எனும் நினைப்பே வருகிறது. சரி இனி கயிற்றில் தொங்கிவிட வேண்டியதுதான் என சட்டென எழுகிறாள்.
அப்போதுதான் தெரிகிறது கட்டிலுக்கும் கயிற்றுக்குமான இடைவெளி சற்று அதிகம். அடடா ஒரு கத்தியோ அல்லது பிளோடோ இருந்தால் மிச்சப்பகுதியை வெட்டிவிடலாம் என அறையெங்கும் தேடுகிறாள். எதுவும் சிக்கவில்லை. அப்போதுதான் சமையல்கட்டில் பளபளக்கும் அரிவாள்மனை நினைவில் வருகிறது. ஓடிப்போய் அதனை எடுத்துவந்து தூரத்தை கண்களால் அளந்தபடி கயிற்றை அறுக்க துவங்குகிறாள். எல்லாம் தற்கொலையில் நிகழப்போகும் மரணத்தை நோக்கி மெதுவாக நகரத்துவங்குகிறது. கயிற்றில் முடிச்சிடத் தெரியாமல் அவள் குழம்பி நின்றபோது கதவை யாரோ தட்டுகிறார்கள். அவ்வளவுதான் சட்டென்று எல்லாம் மாறிவிடுகிறது.
கதவினைத் தட்டிடும் ஒசை கேட்ட மறுநொடியில் கயிற்றை உருவி கட்டிலுக்கு கீழே எறிகிறாள். தன்னுடைய சேலையைத் திருத்துகிறாள், தலையை சரி செய்கிறாள். முகத்தைக் கழுவுகிறாள். சடசடவென வழக்கமான தன்னுடைய இருள் வாழ்க்கைக்கு தன்னைத் தயார் படுத்தியபடி கதவைத் திறக்கிறாள். வாழ்க்கை இப்படித்தான் கனநேரத்தில் எல்லாவற்றையும் தலைகுப்புறக் கவிழ்த்திவிடும். சற்று நேரத்திற்கு முன்பு தற்கொலை செய்ய தயாரானவள் என மற்றவர்கள் நம்புவது இருக்கட்டும் இவளேகூட நம்ப மாட்டாள். கதவைத் திறந்தால் அன்றைய வாடிக்கையாளாரை அழைத்துக் கொண்டு மாமன்தான் கதவைத் தட்டியிருக்கிறான்.

அவ்வளவுதான் இதுவரையிலும் நடந்து கொண்டிருந்த கதையின் பகுதியை முற்றாக கலைத்துவிட்டு வேறு ஒன்றை எழுதுகிறார் எழுத்தாளர். அது மரணத்தின் அசைவு. இது வாழ்வின் பகுதி. தனக்கு முன்பாக வந்திருக்கும் மனிதரை பாலியல் தொழிலாளிகளுக்கேயான தொல் சடங்கின கசந்த புன்னகையை கசியவிட்டபடி வரவேற்றாள். கட்டிலில் அமரச் சொல்கிறாள். டெர்லின் சர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த அந்த மனிதர் கட்டிலில் அமரவில்லை. அவளை கட்டிலில் உட்காரச் சொல்கிறார்.தூரத்தில் கிடந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தபடி அவளை ரசிக்கத் துவங்குகிறார். அதுவரை அவளுடைய வாழ்க்கையில் எப்போதும் எட்டிப் பார்த்திராத வெட்கம் அவளைச் சூழ்ந்திட தலைகவிழ்கிறாள்.
இதுவரையிலும் எந்த ஆணிண் முன்பாகவும் இப்படி வெட்கித் தலை கவிழ்ந்ததில்லை அவள். இதற்காக துக்கப்படுவதா அல்லது பெருமை கொள்வதா என தடுமாறுகிறாள். இப்படியான மன உணர்வின் இருமையை எதிர்நிலைகளை ஜி.நாகராஜனின் கதைகள் எங்கும் காணலாம். தேவயானை அந்த எட்டுமுழ வேட்டி மனிதரை “வந்தது எதுக்கோ அதப் பாருங்க இப்பிடி குறு குறுன்னு என்னைய உத்துப் பார்த்துக்கிட்டேயிருந்தாக்க எப்பிடி” என்கிறாள். அந்த டெர்லின் சார்ட் அணிந்தவர் “ வந்தது உன்னையப் பார்த்து ரசிக்க மட்டும்தான்” என்றபடி அவளை அத்தனை பாந்தமாகப் பார்த்து ரசிக்கிறார். “ அவ்வளவுதானா, இதற்காக மட்டும்தான் வந்தீங்களான்னு?” இவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, இந்தா என அவளிடம் ஐந்து ரூபாய் சலவை நோட்டைத் தந்துவிட்டு அறையை விட்டு வெளியேறுகிறார்.
அவள் அந்த ரூபாயை உற்றுப்பார்க்கிறாள். அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கதவை அடைத்துவிட்டு தலைகாணிக்கு அடியில் ரூபாயை வைத்தாள். விட்டத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் இரும்பு வளையத்தை உற்றுப்பார்க்கிறாள். இருத்தலின் அதீத கணத்தை பதிவுறுத்திய காட்சியிது. மறுபடியும் கதவு தட்டப்படுகிறது. கதவைத்திறந்தால் மறுபடியும் மாமன்வந்து நிற்கிறான். அவருடன் எந்த வாடிக்கையாளரும் இல்லை.
கதை நிகழ்ந்தது நினைவிலா அல்லது நிஜத்திலா அல்லது இரண்டுமற்ற கனவினிலா என்பதான பெரும் குழப்பத்தை தேவயானியின் வழியாக திறக்கிறார் ஜி.என். “என்னாச்சு போய்ட்டாரா அவரு?” “எவரு?.” “அந்த டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர். நீங்கககூட கொஞ்ச நேரத்திற்கு முன்பாக கூட்டிட்டுவந்து விட்டீங்களே அவரு” “நானே ராத்திரி ஒன்பது மணிவரையிலும் ஊரைச்சுத்திட்டு இப்பத்தான் வீட்டுக்கே வாறேன். நான் யாரையும் இங்க அழைச்சுட்டு வரலியே”. தேவயானிக்கு குழப்பம் ஏற்படுகிறது. வேகமாக ஓடிப்போய் தலைகாணிக்கு அடியில் மறைத்து வைத்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டிட தேடுகிறாள். அங்கு எதுவும் இல்லை. அப்படியானால் உண்மையில் நடந்ததுதான் என்ன? கதையை இந்தப்புள்ளியில் முடித்தும் விடுகிறார் எழுத்தாளர்.. தேவயானை தற்கொலைக்கு முயற்சித்தது யதார்த்த நிஜம். அந்த எட்டு முழ வேட்டி மனிதர் வந்ததும், சென்றதும் அப்போது நிகழ்ந்ததும் தேவயானி வாழ நினத்த வாழ்வின் ஓரு துண்டு அவ்வளவே. இருத்தலியம் என எழுத்தில் இறுக்கி வைக்கப்பட்டிருக்கும் தத்துவத்தின் பக்கங்களை லகுவாகத் திறந்த கதையிது.
இலக்கியத்தில் இடமற்று வெளியே விற்கும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதிரிப்பாட்டாளிகளான பாலியல் தொழிலாளிகளின் வாழ்வின் பகுதிகளைக் கதைகளாக்கிய அசல் எழுத்துக் கலைஞன் ஜி.நாகராஜன்.
-ம.மணிமாறன் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



