
தமிழ் வாழ்க்கையில் சடங்குகளுக்கும், தொன்மங்களுக்கும் அழிக்கவே முடியாத தனித்த இடமுண்டு. தங்கள் வாழ்வினில் பெரும் துயரங்கள் சூழ்கிறபோது அவர்கள் சரணடைவது தெய்வங்களின் காலடியில்தான். அதிலும் குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சமாக நீடித்தே இருக்கிறது. மனித குலத்தின் வரலாற்றுப் பகுதியிலும் கூட. அச்சமும் மகிழ்ச்சியும் துளிர்விடும் போதெல்லாம் தெய்வ நம்பிக்கை நிறைந்திருக்கிறது. வேட்டைச் சமூகத்தின் எச்சமிது என எளிமையாக இந்த வழக்கத்தை கடந்து போய்விட முடியாது.
இன்றைக்கும் தமிழ்வாழ்வில் தொடர்கிற நீத்தார் சடங்குகள் தன்னைப் பெற்றோரை வணங்கிடும் வழக்கமின்றி வேறு என்ன? குலதெய்வ வழிபாட்டின் பின்புறம் உள்ள உளவியல் மிக எளிமையானது. குல தெய்வங்களை தன்னுடைய சந்தததி உருவாகிட காரணமான மூத்தோன். நம் வம்ச விருட்சத்தின் ஆதி விதை இவர்கள் எனும் நம்பிக்கையில்தான் வணங்குகிறார்கள். பகுத்தறிவினால் கட்டுடைக்க முடியாத விசித்திரங்கள் தொன்மங்களும் சடங்குகளும். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன் என்பதுதான் பக்தி தொக்கி நிற்கும் முக்கிய புள்ளி. தங்களுடைய துயரங்களைச் சொல்லி அழ ,கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ள இடம் தேடுகிறார்கள் மனிதர்கள.
அது மனதின் காயங்களை சொஷ்தப்படுத்தும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையே அவர்களை குலதெய்வங்களை நோக்கி உந்தி தள்ளி நகர்த்துகிறது. பேராசன் மார்க்ஸ் மதம் ஒரு அபின் எனும் சொற்றொடரை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதியிருப்பார். அதன் முன் அவர் எழுதியிருக்கும் இரண்டு வரிகள் மிக மிக முக்கியமானவை. கண்ணீர்க் கடலில் தத்தளிப்பவர்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக இருக்கிறது மதம். வாழ்வின் மீது நம்பிக்கை இழந்து போன கூட்டத்திற்கு நம்பிக்கை பிடிகயிறாக இருக்கிறது மதம். ஆகவே மதம் ஒரு அபின். இதன் வழியே நாம் வந்தடைய வேண்டிய இடம் மிக முக்கியமானது. வாழ்வில் துயரங்களும், கஷ்டங்களும் நீடித்திருக்கும் வரை கடவுள் என்னும் கருத்தும் நீடித்ததிருக்கும் என்பதே மனித குல வரலாறு விளக்கும் யதார்த்தம்.
எத்தனை சடங்குகள், வழிபாட்டு முறைகள். மானுடவியல் ஆய்வாளர்களின் ஆய்வுக்கருவிகளுக்கும் சிக்காத தனித்த நூதனம் தொல்சடங்குகள். நம்பிக்கைப் பிடிகயிறு வலுவிழக்கும்போது ஏற்படும் உளவியல் சிக்கல்களை கதைகளாக எழுதியிருக்கிறார்கள் தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்கள். அப்படி எழுதப்பட்ட கதைகளின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று ‘அய்யனு கிடா’. எழுத்தாளர் சுபி எழுதியிருக்கும் ‘அய்யனு கிடா’ அன்பும் கருணையும் எப்படி மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத பண்புகளாக நீடித்திருக்கிறது என்பதை கிடா வெட்டு எனும் தொன்மச் சடங்கின் வழியாக காட்சிப்படுத்துகிறது.
எழுத்தாளர் சுபி தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘யாறு’ விற்குள் அய்யனு கிடா என்கிற சிறுகதையை எழுதியிருக்கிறார். சுபி புதுவெள்ளமாக புரண்டுவரும் சமகால பெண் எழுத்தின் தனித்த அடையாளம். கவிதைகளில் துவங்கிய சுபியின் படைப்புலகம் கதைகளின் பக்கம் நகர்ந்து வந்திருப்பது சுபிக்கும் தமிழ்க்கதைகளுக்கும் மிக மிக நல்லது. சமகால எழுத்தாளர்களிடம் இருந்து கைநழுவிப் போய்க் கொண்டிருக்கிறது கச்சிதத் தன்மை. ’யாறு’ கதைத் தொகுப்பில் சுபி எழுதிச் சேர்த்திருக்கும் பனிரெண்டு கதைகளும் மிக மிக ககச்சிதமானவை.
எங்கு துவங்கி எப்படி கதையை நடத்தி நிறைவு செய்ய வேண்டும் என்பதில் குழப்பமற்ற புரிதல் அவருக்கு இருக்கிறது. அவருடைய சிறந்த சிறுகதைககளில் ஒன்றான அய்யனு கிடாவையே இனியான பக்கங்களில் வாசித்து உணர்வோம். சுபியின் கதைகளின் ஆதாரம் மனித உறவுகளுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களைப் பேசுவதுதான். இது ஒருவிதமான உளவியல் பயிற்சி. அய்யனு கிடாவவை வாசிக்கிற எவருக்குள்ளும் அவரவர்களின் வாழ்வின் பகுதிகள் மனத்திரையில் வெளிப்படவே செய்யும். வாழ்வின் கடந்து போன பகுதிகளுக்குள் நீந்தித் திரும்பிடும் மிதவைகளை கையளித்திருக்கிறது சுபியின் ‘அய்யனு கிடா’.

எழுத்தாளர் சுபி
“மூன்றடி உயரமுள்ள திண்டின் மேல் ஆளுயர குதிரை மீது பெரிய திரண்ட கண்களுடன் அழுத்தம் திருத்தமாக வளைந்த புருவங்களோடு கிடா மீசை வைத்தபடி எங்கள் எல்லைக் கருப்பு நின்று கொண்டிருந்தது”. இதுவே அய்யனு கிடா கதையின் முதல்வரி. முதல்வரியிலேயே பளிச்சென கதையைப் புலப்படுத்தும் பாங்கிது. அதிலும் எங்கள் எல்லைக் கருப்பு எனும் சொற்சேர்க்கை நம்பிக்கையை இன்னும் அழுத்திச் சொல்கிற சொற்றொடர். வாசகருக்கு கதையின் மையம் எதுவென புரிந்து கொள்ள வரிகளுக்குள் வார்த்தைகளைப் பதுக்கி வைப்பதுதான் ஒரு தேர்ந்த எழுத்தின் அடையாளம். கோயில் பூசாரி “எத்தினி கெடா அய்யனு” எனக் கேட்ட போது புரிந்துவிடுகிறது. குலதெய்வ வழிபாட்டின் மிக முக்கியமான பகுதியான பலியிடலை காட்சிப்படுத்தப் போகிறது கதை என்பது. ரெண்டு கிடா என்பதால் இரண்டு பொங்கல் வைக்க வேண்டும்.
கருப்புக் கோயில்களில் மூன்று கல் அடுக்கி அடுப்புப் பூசி பொங்கல் வைப்பதெல்லாம் காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. அடுப்பிற்குள் விறகுகளையும் குச்சிகளையும் பொருத்தமாக பயன்படுத்தி எரிக்கும் பழக்கம் சமகாலப் பெண்களுக்கு கைவரவில்லை. புகையின் அடுப்பு நெருப்பில் மூச்சு முட்ட எதற்கு இந்த வேண்டாத வேலை என இப்போதெல்லாம் கியாஸ் அடுப்பினை வேன்களில் ஏற்றிய பிறகே கோயிலுக்கு கிளம்புகிறார்கள். கதையில் கருப்பு கோயிலில் வீட்டிற்கு வந்த மருமகள் ரெட்டைக் கிடாவிற்காக ரெண்டு பொங்கல் வைக்கிறார். பொங்கல் பொங்கியதும் கிடா வெட்டுதான். குடும்பம் உறவுகள் என யாவரும் திரண்டிருக்க எல்லைக் கருப்புக்குப் பலியிட சுத்தமான கருப்புக் கெடாவை மஞ்சள் தண்ணி ஊற்றி இழுத்து வருகிறார்கள்.
கிடா வெட்டு எனும் பலியிடல் சடங்கில் வித விதமான தன்மைகள் பதுங்கியிருக்கின்றன. கிடா வெட்டும் போது தொங்கு கிடா விழுந்து விடக்கூடாது. அப்படி விழுந்து விட்டால் கருப்பன் பலியை ஏற்கவில்லை என அர்த்தம். பிறகு என்ன செய்ய இரட்டைக் கிடா வெட்டுவதாக மறுபடியயும் ஒரு நேத்திக் கடன் போட்டுவிட்டு திரும்பிப்பார்க்காமல் போக வேண்டியதுதான். பலிபூஜைக்காக ஒராண்டு காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விதமான கிடாய்கள். சில கோயில்களில் சுத்தமான கருப்புக்கிடாய்கள் மட்டுமே பலியிடப்படுகின்றன. வழி வழியாக பின்பற்றப்படுகிற இதே போலான பல நடைமுறைகள் கோயில்களில் அததற்குரிய வழக்கத்தில் இருக்கிறது. எல்லாக் கோயில்களிலும் இருக்கும் பொதுவான நடைமுறை என்ன தெரியுமா?
தனக்கு முன் நிறுத்தப்பட்டு மஞ்சள் நீராட்டப்பட்டு நிற்கும் ஆடோ ,மாடோ அல்லது கோழியோ எதுவாயினும் பலியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என உத்தரவிடுதல் வேண்டும். உத்தரவிடுவதே ஒரு தொன்மச்சடங்குதான். கதையில் முதல் ஆடு பூசாரியின் முன் நிறுத்தப்பட்டவுடன் பூசாரி திருநூறு போட்டு மஞ்சள் தண்ணி தெளிக்கிறார். அங்கிட்டு இங்கிட்டுன்னு அலைஞ்ச கிடா தலைய ஒரு ஆட்டு ஆட்டி பலிக்கு தான் தயார் என உத்தரவிடுகிறது. இதற்கு ஆடு துலுத்தல் எனப்பெயர். இது காலம் காலமாக குலதெய்வ வழிபாட்டில் தொடர்ந்து வரும் அசைக்க முடியாத நம்பிக்கை “ அதானா பார்த்தேன் கோயிலுக்கு உடமைப்பட்ட பூசாரி மஞ்சத்தண்ணி தெளிச்சு விட்டடா ஆடு துலுக்காம போகுமா, எல்லைக் கருப்பா,எல்லாரையும் காப்பத்தப்பா” என்கிறார் பூசாரி. இரண்டாவது பொங்கல் பொங்கியவுடன் மருமகள் உரத்து குரல் எழுப்புகிறாள். “பொங்கல் பொங்கிருச்சு அடுத்த கிடாய எடுத்துட்டுப் போங்க” என்ற அவளின் குரல் கேட்டவுடன் ஆடைப் பிடித்து பூசாரி முன் நிறுத்துகிறார்கள்.
வழக்கம் போல பூசாரி ஆட்டிற்கு மஞ்சள் தண்ணீர் தெளித்து திருநீரு போடுகிறார். எல்லோருமே ஆடு துலுப்பதற்காக காத்திருக்கிறார்கள். ஐந்து நிமிடத்திற்குள் எப்படியாவது துலுத்திடும் என்று எதிர் பார்க்கிறார்கள். ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என நேரம் ஓடி ஒரு மணி நேரமாகிவிட்டது. ஆனாலும் ஆடு துலுக்கவில்லை. பூசாரியோடு சேர்ந்து எல்லோருமே பதறுகிறார்கள். “உனக்கு வேண்டியதெல்லாம் குத்தம் குறையில்லாம செஞ்சாச்சே எதுக்கு இன்னும் எல்லாத்தையும் சோதிக்கிற,பேசாம துலுத்திருப்பா.” எத்தனை கோரிக்கை வச்ச போதும் ஆடு துலுக்கவேயில்ல. என்ன குறை வச்சோம் எல்லைக் கருப்பனுக்கு அவரவர் மனங்களில் கடந்த காலக் காட்சிகள் ஓடாமல் இருக்காது. அதுவே அய்யனு கிடா வாசகருக்குள் கடத்த நினைக்கும் முக்கியமான கதைப்பகுதி.
கிடா துலுக்காம போனதிற்கு கருப்பனுக்குப் போட்ட நேர்த்திக் கடன காலத்தில செய்யாம விட்டதுதான்னு கதை சொல்லி நினைக்கிறார். நேர்த்திக்கடன் போட்டு வருசம் பலவாச்சு. ஆனாலும் கடவுளுக்கு செய்யனும்னாக்கூட அததுக்கான நேரம் அமையனும்ல. இன்னைக்கு செய்வோம் நாளைக்குச் செய்வோம்னு தள்ளிப் போய்க்கிட்டே இருந்தது எனும் அவரின் நினைப்பு கதை சொல்லியை அந்த நாளுக்குள் கொண்டுபோய் சேர்த்தது. செத்துப் பிழைத்த அப்பாவை உயிருடன் மீட்ட அந்த நாளை தனக்குள் நினைத்துக் கொள்கிறார். இவர்களின் தந்தை ஒரு வைராக்கியமான மனிதன். ஆனாலும் என்ன? நோய் எல்லோரையும்தானே இம்சிக்கும். நோய் முற்றியதால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போகிறார்கள். அவரெல்லாம் படுத்துக்கிடக்கிற ஆளில்ல. குடிச்சு குடிச்சு குடல் வெந்து போனாக்க என்ன செய்யிறது. மருத்துவம் கைவிட்ட பிறகு மனிதர்களின் கடைசிப் புகலிடம் எதுவாக இருக்குமோ அதுவாகவே இருந்தது அந்த குடும்பத்துக்கும். ஆஸ்பத்திரியில இருந்து கூட்டிட்டு வந்தபிறகு பேரன் பேத்திகள் எல்லாம் கடைசிப் பால் ஊத்த ஆரம்பித்து விட்டார்கள். அப்போது அவனுடைய அம்மா வெடித்து அழ ஆரம்பிக்கிறார்.

“என்னாடா இப்பிடிக் கிடக்கிறாரு. இந்த மனுஷன் என்னைய அநாதையா தவிக்கவிட்டுட்டு போகப் போறாரா” எனக் கதறுகிறாள். அம்மாவின் அழுகையைச் சகிக்க முடியாத இளைய மகனான கதை சொல்லி எல்லைக் கருப்பை நோக்கிப் போகிறான். எல்லைக் கருப்பு குதிரையில் ஏறி வேட்டைக்கு போகும் நள்ளிரவு நேரம் நெருங்கியதால் கோயிலை நோக்கி விரைந்து ஓடுகிறான். கருப்பு அமர்ந்திருக்கும் குதிரையின் கால்களைக் கெட்டியாக பிடித்துக் கொள்கிறான். கண்ணீர் மல்க எங்க அப்பனைக் காப்பாத்துனா கிடா வெட்டி பொங்க வைக்கிறன்டா எல்லைக் கருப்பா என தெய்வத்தையே அரற்றுகிறான். கண்ணீர் வற்றிய பின் கலங்கிய கண்களோடு வீடு நோக்கி நகர்கிறான்.
இறுதிச் சடங்கு செய்திட எல்லா ஏற்பாடுகளும் வீட்டு வாசலில் நடப்பதைப் பார்த்தவுடன் கதை சொல்லிக்கு துக்கம் தொண்டைய அடைக்குது. அம்மாவைப் பார்க்கிறான். அழுது வீங்கிய கண்களுடன் அம்மா. வீட்டு வாசலில் பந்தல்காரன் பொருட்களைக் கொட்டிய மறுநொடியில் “எவன்டா என்னைய இப்பிடி உட்கார வச்சுது”ன்னு துடிச்சு எழுந்து நின்னவரப் பார்த்து ஊரே மிரண்டு போச்சு. அதற்குப் பிறகு மூனு வருசம் திடகாத்திரமாக இருந்திருக்காரு. அதுக்கு எல்லைக் கருப்புதான் காரணம்னு நினைக்கிறார் கதை சொல்லி.
அப்ப போட்ட நேத்திக்கடன்தான் இந்த ரெட்டைக் கிடா வெட்டு. லேட்டாகிப் போச்சுன்னு கருப்பன் கோவிக்கிறது புரியுது என பூசாரியிடம் சொன்னபிறகு. விடுங்க பூசாரி கருப்பன் இன்னும் எங்களை எம்புட்டு சோதிக்கிறான்னனு பார்ப்போம்னு தடுமாறுகிறான். படிக்கல்லில் உட்கார்ந்திருந்த அம்மாவைப் பார்த்த அடுத்த நொடியில் “அம்மா கருப்பன நெனைச்சு எனக்கு திருநீரு குடும்மா என வாங்கிக் கொண்டு போய் பூசாரியிடம் கொடுக்கிறான். அதனை கிடாவின் மீது போட்ட அடுத்த நொடியில் கிடா துலுத்தது. அவ்வளவுதான் கதை.
இந்தக் கதையைப் பகுத்தறிவின் கண்கொண்டு ஆராய்ச்சி செய்தால் ஏமாற்றமே மிஞ்சும். குல தெய்வங்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உறவு மானுடவியல் நோக்கில் அனுக வேண்டிய தனித்த பகுதி என்பதையே அய்யனு கிடா கதை வாசகருக்குள் கடத்தும் மெய்மை.
– ம.மணிமாறன் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



