மதுரை பள்ளி மாணவன் கொலை: கனிமொழி எம்.பி கண்டனம்

மதுரை மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

மதுரை கூடல் நகர், வாடாகோவில் தெருவில் வசித்து வரும் யோகலட்சுமி – கருப்பசாமி தம்பதியின் 17 வயது மகன் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை வெளியூரில் பணிபுரிந்து வரும் நிலையில் சிறுவன், தனது தாய், சகோதரியுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், விளையாடச் சென்ற அந்த மாணவன் காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாணவனின் தாய், கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் மாணவன், பக்கத்து வீட்டில் வசித்து வந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியுடன் நட்பு ரீதியாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவியின் தந்தை, சில தினங்களுக்கு முன்பு மாணவனைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முட்புதரில் மாணவன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11-ம் வகுப்பு மாணவன் கழிவுநீர்க் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது. மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *