
அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
அசாமில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 9) நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் பதற்றமான தொகுதிகள் உள்பட மாநிலம் முழுவதும் துணை ராணுவப்படை உள்பட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எல்.டி.எப் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இவர்களுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மும்முனை போட்டியை அளிக்கிறது. அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாஜோத் கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இரண்டு முறை வென்ற பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற கடும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.



