
தாய், தந்தையுடன் ரிங்கு சிங். (கோப்பு படம்)
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங் இன்று காலமானார்.
டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி பேட்டிங் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர் ரிங்கு சிங். இந்தியா, இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். இவரது தந்தை கான்சந்திர சிங், கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை மிக மோசமானதை தொடர்ந்து ஜிம்பாப்வே போட்டிக்கு முன்னதாக ரிங்கு சிங், இந்திய அணியின் பயிற்சி தவிர்த்து விட்டு நொய்டா திரும்பினார்.
இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங் இன்று (பிப்ரவரி 27) அதிகாலை உயிரிழந்தார். ரிங்கு சிங்கின் தந்தை மரணச் செய்தி அறிந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது சமூகவலை தளப்பதிவின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ரிங்கு சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இது மிகவும் கடினமான நேரமாகும். இருப்பினும் அவர் டி20 உலகக் கோப்பையின் போது தனது பொறுப்புகளில் உறுதியாக இருக்கிறார். ரிங்கு சிங்கிற்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



