ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் முதலிடம் பிடித்தார் ஸ்மிருதி மந்தனா!

ஸ்மிருதி மந்தனா

ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டித் தரவரிசையில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா பேட்டர்கள் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. இதில் நடைபெற்ற முடிந்த டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி மார்ச் 6-ம் தேதி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை இன்று (மார்ச் 3) வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டை பின்னுக்கு தள்ளி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஸ்மிருதி மந்தனா மொத்தமாக 89 ரன்களை எடுத்ததன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார். ஏற்கெனவே 2025-ம் ஆண்டிலும் ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்திருந்தார்.

அதே சமயம் தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் ஒரு இடம் பின் தங்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதுதவிர்த்து ஆஸ்திரேலியாவின் பெத் மூனி மற்றும் அலிசா ஹீலி ஆகியோரும் தலா 2 இடங்கள் முன்னேறியுள்ள நிலையில், மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மகளிர் ஒருநாள் பவுலர்களுக்கான தரவரிசையில் கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்திருந்த இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோனை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய வீராங்கனை அலானா கிங் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய தொடரின் மொத்தமாக அலானா கிங் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார். சோஃபி எக்லெஸ்டோன் இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் மரிஸான் கேப் நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி இரண்டாம் இடத்திற்கும், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் மூன்றாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *