
இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் விலைவாசி உயருமான என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
ஈரான் மீது போர்
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான் மேற்கு ஆசிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்கள், விமான நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இந்த வழியாக செல்லும் கப்பலை மூழ்கடிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய மோதலால் இந்தியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு வராது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாயும், வணிக சிலிண்டர் விலை 100 ரூபாய்க்கு மேலும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இதனிடையே சர்வதேச சந்தையில் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 110 அமெரிக்க டாலருக்கு அதிகமாக விற்பனையாகிறது.
இதனால் இந்தியாவில் பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கவலை அளிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்வு ஏற்படுமா என்று ரகுமான் எம்.பி. கேள்வி இன்று (மார்ச் 9) எழுப்பினார்.
நிர்மலா சீதாராமன் பதில்
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ” உள்நாட்டு விலை நிலைகள் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சகிப்புத்தன்மை வரம்பின் கீழ் எல்லைக்கு அருகில் உள்ளன, இது பணவீக்கத்தில் அதிக கச்சா எண்ணெய் விலைகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன, ஆனால் இந்த உயர்வு பணவீக்கத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஓராண்டாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில், பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய மத்திய கிழக்கு போரால் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நிதி, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.



