காங்கோவில் பயங்கர விமான விபத்து: 2 அதிகாரிகள் உள்பட 14 பேர் பலி

காங்கோவில் நிகழ்ந்த விமான விபத்தில் 2 அதிகாரிகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. காங்கோவில் ருவாண்டாவின் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் எம்23 அமைப்பு உள்பட பல கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களால், பல முக்கிய நகரங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், தென்மேற்கு காங்கோவில் உள்ள கிக்விட் நகரிலிருந்து தலைநகர் கின்ஷாசாவுக்கு விமானம் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கெங்கே பகுதியில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ அதிகாரிகள், ராணுவ நீதிமன்றத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் முடோம்போ கட்டலாயி தியென்டே, ஆயுதப்படைகளின் தலைமைத் தணிக்கையாளர் லெப்டினன்ட் ஜெனரல் பாகுமி லிகுலியா உள்பட விமானத்தில் இருந்த 14 பேரும் உயிரிழந்தனர்.

இந்த தகவலை காங்கோ ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் எஃபோமி எகெங்கே அறிக்கை மூலம் உறுதிபடுத்தியுள்ளார். அத்துடன் விமான விபத்துக்கான சூழ்நிலைகள் மற்றும் காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக எகெங்கே தெரிவித்தார். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று காங்கோ சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் டிரைபோன் கின்-கியே முலும்பா கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *