
உத்தரகாண்ட்டில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட 271 பக்தர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள யமுனோத்ரி,கங்கோத்ரி,கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித ஸ்தலங்களுக்கு ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு யாத்திரையில் இதுவரை 60 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இது உத்தரகாண்ட் யாத்திரை வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
உத்தரகாண்டில் இந்த ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி யாத்திரை தொடங்கியதில் இருந்து நேற்று (அக்டோபர் 21) வரை 271 பக்தர்கள் உடல்நலக்கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில் கேதார்நாத்தில் அதிகபட்சமாக 132 பேரும், பத்ரிநாத்தில் 85 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், யமுனோத்ரியில் 34 பேரும், கங்கோத்ரியில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் திரட்டிய இந்த புள்ளிவிவரத்தில், புனிதத் தலங்களுக்குச் செல்லும் வழிகளில் விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் பதிவாகியுள்ள இந்த அதிகப்படியான உயிரிழப்புகள், சுகாதாரத் துறைக்கும், யாத்திரையை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளன. இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த நான்கு புனிதத் தலங்களுக்கான யாத்திரை, பிற யாத்திரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பக்தர்கள் மிகக் குறுகிய காலத்தில் அதிக உயரத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால், அங்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதும், வானிலை விரைவாக மாறுவதும் சவாலாக அமைகிறது.

மலைப்பாதையில் ஏறுவதால் ஏற்படும் உடல் உழைப்பு, அதனுடன் சேரும் சோர்வு, கடும் குளிர் மற்றும் ஏற்கெனவே உள்ள உடல்நலப் பிரச்னைகள் ஆகியவை உடலுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதய நோய்கள், சுவாசப் பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த யாத்திரையின் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உயரமான இடங்களில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளின் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவது, உயிருக்கே ஆபத்தான சூழலுக்கு வழிவகுக்கக்கூடும்.
இத்தகைய சூழலில், யாத்திரை தொடங்குவதற்கு முன்பு வெறும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவது மட்டும் போதாது. யாத்திரை முழுவதும் பக்தர்களின் உடல்நலனைத் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியமாகும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு பயணிக்கு தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக மருத்துவ தலையீடு செய்வதற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும். மேலும், தேவைப்படும் நேரங்களில் பயணிகளை குறைந்த உயரத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கான திறமையான கட்டமைப்பு அவசியமாகும். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் பல பயணிகளை வெற்றிகரமாக மீட்டிருந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று பக்தர்கள் கவலை தெரிவித்தனர்.
பத்ரிநாத்தில் பூசாரியாக பணியாற்றும் அசுதோஷ் கூறுகையில், ‘ யாத்திரை’ தொடங்குவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட துறைகள் சுகாதார வசதிகள், மருத்துவ மையங்கள், உடல்நலப் பரிசோதனை மற்றும் அவசரக்கால உதவிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றன. மேலும், பயணிகள் தங்கள் உடல்நலத்தைப் பேணவும், போதுமான ஓய்வு எடுக்கவும், ஏற்கெனவே ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த ஏற்பாடுகள் உண்மையில் தேவைப்படும் பயணிகளை எவ்வளவு தூரம் சென்றடைகின்றன என்பதை மறுஆய்வு செய்வது மிக அவசியமாகிறது. கடந்த சில ஆண்டுகளில் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட மலைப்பாங்கான அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார வசதிகளும், மருத்துவர்களின் இருப்பும் மேம்பட்டிருந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கவலைக்குரிய விஷயம், இதற்கு தீவிர கவனம் தேவை” என்றார்.
இந்த ஆன்மிக யாத்திரையில் கடந்த 2022-ம் ஆண்டில் 311 பேரும், 2023-ம் ஆண்டில் 245 பேரும், 2024-ம் ஆண்டு 246 பேரும் உயிரிழந்துள்ளனர். 2025-ம் ஆண்டில், மாநில அவசரக்கால செயல்பாட்டு மைய தரவுகளின்படி 218 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



