பெங்களூருவில் ஐபிஎல் முதல் போட்டி: உற்சாகமாக களமிறங்கும் ஆர்சிபி

பெங்களூரு எம்.சின்னச்சாமி மைதானம்.

ஐபிஎல் தொடரின் 19வது சீசன் முதல் போட்டி பெங்களூருவில் தொடங்க உள்ளதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உற்சாகமடைந்துள்ளது.

ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதனையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகள் தீவிரமாக தயாராகி வருவதுடன், போட்டிக்கான மைதானங்களில் ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் 19வது சீசனுக்கான தொடக்க விழா மற்றும் முதல் போட்டி கர்நாடகாவில் உள்ள பெங்களூருவி எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது 7 ஹோம் போட்டிகளில் 5 போட்டிகளை பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் விளையாடும் என்பதை அந்த அணியின் சிஇஓ ராஜேஷ் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார்.மீதமுள்ள 2 போட்டிகள் ராய்ப்பூரிலும் நடைபெறுகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானம் போட்டிகளை நடத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அத்துடன், அங்கு நடைபெற இருந்த மகாராஜா பிரீமியர் லீக், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டிகள், மகளீர் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்கள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் போட்டிகள் மீண்டும் பெங்களூருவில் நடத்தப்படுமா அல்லது வேறு மைதானத்திற்கு மாற்றப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இந்த நிலையில் எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடகா அமைச்சரவை கூட்டம் அனுமதி அளித்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய ஹோம் போட்டிகளை பெங்களூருவில் விளையாடுவதுடன், எதிர்வரும் ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டி மற்றும் சீசனின் இறுதிப்போட்டியும் பெங்களூரு மைதானத்தில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய ஹோம் போட்டிகளுக்கான மைதானத்தை உறுதி செய்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *