நடிகர் சூர்யா அரசியலில் குதிக்கிறாரா?: நற்பணி இயக்கம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

நடிகர் சூர்யா அரசியலில் ஈடுபடுவாரா என்பது குறித்து அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளரான இரா.வீரமணி என்பவர் பேசுகையில், “காலமும் கடவுளும் முடிவு செய்துவிட்டால் சூர்யா மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது” என்று பேசியது சமூக வலைதளங்களில் பரவியது. நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற விவாதம் எழுந்தது.

இந்த நிலையில், இந்த சர்சைக்கு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இரா.வீரமணி, அது தனது தனிப்பட்ட கருத்து என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே பேசினார். ஆனால், அவரது உரையைத் தவறான விளக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இதனை யாரும் நம்ப வேண்டாம். கடந்த மூன்று ஆண்டுகளாக இரா.வீரமணி மன்றத்தின் எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.

நடிகர் சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்குச் சமூகச் சேவையாற்றுவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது. மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் செயல் தலைவர் ஆர்.ஏ.ராஜ் மற்றும் அமைப்பாளர் ஜி..ஹரிராஜ் ஆகியோரால் மட்டுமே வெளியிடப்படும். எனவே சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளை நம்பாமல் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *