
என் அதிகாலைகளை அழகாக்குவது பாடல்கள் தான். நடைபயிற்சிக்கு காலை எழும் போது ஏதாவது ஒரு கோயிலில் இருந்து பாடல் ஒலிக்கத் தொடங்கி விடும். கிராமப்புற தெய்வங்களைச் சுற்றி வாழ்க்கை நடத்துபவனுக்கு பாடல்கள் பரிசாக கிடைப்பது வரம் தான். இன்று காலையும் ஒரு பாடலோடு தான் விடிந்தது. ஆனால் எதிர்பார்க்காத குரல். பெரும்பாலும் சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் பக்திப் பாடல்களோடு தான் என் காலைகள் புலரும்.
ஆனால், இன்று அதிகாலை ஆச்சரியம். அதற்குக் காரணம் பாடகி எஸ்.ஜானகி. அவர் குரலில் பெரும்பாலும் கோயில்களில் இருந்து பாடல்கள் ஒலிக்காது. ஆனால், இன்று அவரது அழகிய ஹம்மிங்கோடு தான் விடிந்தது. ஒரு பக்திப் பாடலின் துவக்கத்தில் இப்படியான சங்கதிகள் கேட்பது பெரும் ஆச்சரியம்.
நாத லீலனே நந்த பாலனே
ராதா லோலா கோபாலா
யெது குல இடையரோடிணைந்து
ஆ.. னந்தம் நாடிய இந்த்ரஜாலா
கோதை நேசனே கீதை நாயகனே
கோபியர் நாடும் அனுகூலா
நாத லீலனே நந்த பாலனே
ராதா லோலா கோபாலா…
கூடுகளில் இருந்து வெளியேறிய பறவைகள் வானில் பறக்கத் துவங்கி விட்ட நிலையில் எஸ்.ஜானகியின் குரலும் காற்றில் மிதக்க ஆரம்பித்தது. முழுமையான கர்நாடக இசைவடிவத்தில் உருவாக்கப்பட்ட இந்த பாடலில் கிருஷ்ணர் ஜெயந்தி காலங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால், அதிகாலையில் இன்று தான் அந்த பாடலைக் கேட்டேன்.
வேத ரூபனே நாதப் பிரம்மனே
கண்ணா சப்தஸ்வரம் நீ ஸரிகமபதநி ஸநிதபமகரிஸ
வேத ரூபனே நாதப் பிரம்மனே
கண்ணா சப்தஸ்வரம் சுவர்க்க நிதியாம்
திருமகளின் அன்பனே என்னுயிரும் நீயே
சுந்தர ரூபா ஹரி பஞ்சவர் தூதா துவாரகை மன்னா வா ஆ ஆ
என ஸ்வரம் பாடிய எஸ்.ஜானகி இப்போது நம்மிடையே இல்லை. நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய இசையரசி என்ற பெருமைக்குரிய எஸ்.ஜானகி இந்திய திரையிசையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடியவர். குடுகுடுத்த கிழவி முதல், குழந்தை வரை குரலை மாற்றிப்பாடும் திறம் கொண்டவர். இசைஞானி இளையராஜா இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகி என்ற பெருமைக்குரிய எஸ்.ஜானகி நான்கு முறை தேசிய விருதும், 33 முறை வெவ்வேறு மாநில விருதுகளையும் பெற்றவர்.

கடந்த 2013-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், தனது 55 ஆண்டு கால அனுபவத்திற்கு இந்த விருது தாமதமாக அறிவிக்கப்பட்டதால் வேண்டாம் என மத்திய அரசின் பத்ம விருதை மறுத்த தைரியலட்சுமி எஸ்.ஜானகி. ஆந்திரா மாநிலம், குண்டூரில் பிறந்தவர் என்றாலும் இந்தியா முழுவதும் உள்ள இசை ரசிகர்களால் நேசிக்கப்படும் குரல் எஸ்.ஜானகியுடையது. 1957-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் தனது திரையிசை பயணத்தை துவக்கிய எஸ்.ஜானகி கர்நாடகா மாநிலம் மைசூரில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார். அவருக்கு வயது 88. முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு ஐந்து மாநில முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்ட எஸ்.ஜானகியின் நாத லீலனே நந்த பாலனே பாடலுக்கு இசை மீட்டியவர் கர்நாடக இசை உலகின் ஜாம்பவான் எம்.ரங்காராவ். பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கன்னப்படத்தில் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர். இவர் தமிழில் சிவாஜி கணேசன், லெட்சுமி, முரளி, ரஞ்சனி நடித்த குடும்பம் ஒரு கோவில் படத்திற்கு இசையமைத்தார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள எம்.ரங்காராவ், தமிழில் வெளியிட்ட ஒரு முக்கிய பக்தி பாடல் இசைத்திரட்டு வல்லமை உள்ளவன். எஸ்.ஜானகியின் குரலில் 11 பாடல்கள் கொண்ட இந்த இசைப்பேழை இசை ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷம் எனலாம். இன்று அதிகாலை அந்த பொக்கிஷத்தில் இருந்து தான் ஒரு பாடலைக் கேட்டேன்.
நாத லீலனே நந்த பாலனே என்று மனதை மயக்கும் பாடலை எழுதியவர் பெயர் சிக்கராயபுரம் ரங்கநாதன் கோவிந்தராசன். அதாவது சி.ர.கோவிந்தராசன் என்ற பூவை அமுதன். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட பூவை அமுதன் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். இவர் வேறு யாருமல்ல, பின்னணிக் குரல் கலைஞரும், மிகச்சிறந்த பாடகருமான எஸ்.என்.சுரேந்தரின் மாமனார். எஸ்.என்.சுரேந்தர் மூலம் திரைப்படங்களுக்கும், பக்திப் பாடல் ஆல்பங்களுக்கும் 600-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். பாலமுரளி கிருஷ்ணா, டி.எம்.சௌந்தரராஜன், கே.ஜே.யேசுதாஸ், ராஜ்குமார் பாரதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.என்.சுரேந்தர், மனோ, பி.சுசீலா, வாணி ஜெயராம், சித்ரா உள்ளிட்ட பலரால் இவரது பாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.

பூவை அமுதன்
பூவை அமுதனின் வளமான தமிழில் எஸ்.ஜானகி குரலில் பாடல்கள் கேட்பது சுகானுபவம் என்றே சொல்லலாம். அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் மரபுக்குரிய சந்தத்துடன் அமைந்திருக்கும். எஸ்.ஜானகி பாடிய இந்த பாடல் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கும்.
ஆடு மயில் மீதில் ஏறும் ஆறுமுகவேலா
அன்பருக்கு நேயமுடன் அருளும் சீலா…
பக்தி என்னும் பயிர் வளர்க்கும் வயலே நெஞ்சம்
பாடி ஆடுகின்றோம் உனது பாதம் தஞ்சம்
ஆடு மயில் மீதில் ஏறும் ஆறுமுகவேலா
அன்பருக்கு நேயமுடன் அருளும் சீலா…
முருகப் பெருமானின் புகழ்பாடும் பக்திப்பாடல்களில் தனித்த அடையாளம் கொண்ட பாடலிது. எம்.ரங்கராவின் மெல்லிசையில் உருவான இந்த பாடலின் மெட்டு அற்புதம். பூவை அமுதன் பக்தி பாடல்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள் எழுதி புகழ் பெற்றவர். கவிமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற பூவை அமுதன் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
அவர் எழுதிய பாடல்களில் ஜாதி ஒழிப்பை முன்னிறுத்திருப்பார். எஸ்.ஜானகி பாடிய இந்த அம்மன் பாடலில் ஜாதிபேதங்கள் குறித்து பூவை அமுதன் எழுதியிருப்பார். இந்த பாடலில் சங்கீத கச்சேரியை செய்திருப்பார் எஸ்.ஜானகி.
அன்னபூரணி ஈஸ்வரி ஆதி நீ மகேஸ்வரி
அன்னை மாரி அகிலநாயகி
ஆண்டருள் புரிந்திடும் தெய்வமே
ஜாதி பேதங்களை நீங்கவே
நீதி நியமங்கள் ஓங்கவே
உள்ளந்தான் திருக்கோயிலாம்
உண்மை பக்தியே வாயிலாம்
தூய நெஞ்சினில் நேயமாகி
நித்யம் நினதடி தஞ்சமாகி
பக்தியால் உன்னை நம்பியே ஆ….
பாதம் பற்றினோம் தேவியே
பூவை அமுதன் எழுதிய நூல்கள் பல்கலைக்கழகங்களில் துணைப் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். சிறுவர் இலக்கியம், மரபுக்கவிதை, நாவல்கள் என 125-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய பூவை அமுதன், பக்திப் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இசையமைப்பாளர் எம்.ரங்காராவ்
பூவை அமுதன் எழுதிய பாடல்கள் அனைத்தும் மெல்லிசை வகையைச் சேர்ந்தவை தான். அம்மன் பாடல்கள் என்றால் பரபரப்பு கிளப்பும் வகையில் இல்லாமல் பம்பை, உடுக்கை கொண்டு ஒரு தாலாட்டுப் பாடலைப் போன்ற பூவை அமுதன், எம்.ரங்காராவ், எஸ்.ஜானகி இணைந்து வழங்கியுள்ளனர்.
காசினியில் நல்ல தெய்வம் கருமாரி
கருணை செய்ய அடியவர்முன் வருவாயே…
உத்தமியே தர்ம தாயே ஈஸ்வரி
உனதருளால் துயரெல்லாம் நிர்மூலமே
எஸ்.ஜானகியின் குரலில் வல்லமை உள்ளவன் வல்லமை உள்ளவன் நீதானய்யா, திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே கோடி ஜென்மம்தான் எடுத்தாலும், சிந்தையால் உன்னை நாடினேன், தாமரைப்பூ மேவும் தூயவளே ஆகிய பாடல்களை பூவை அமுதன் எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றால் எஸ்.ஜானகி பாடிய இந்த பாடலைச் சொல்வேன்.
கிருஷ்ணா ஆஆஆ
கிருஷ்ணா ஆஆஆ முராரிரீ ரீ ரீ
நந்தகுமாரா நவநீத சோரா
தாமரைக் கண்ணா ஸ்ரீஹரி…
சியாமள கோமள கிருஷ்ண முராரே
மோகன முரளி தாரி..
இடையரைக் காத்திட
எடுத்தனை குன்றம்
கருமுகில் வண்ணனே
கோ…விந்தா
இடையரைக் காத்திட
எடுத்தனை குன்றம்
கருமுகில் வண்ணனே
கோ…விந்தா
குடியிடை கோபியர்
இடையினில் கூடி
ஆடினாய் பாடியில்
ஆனந்தா…
திரௌபதி மானத்தை
கருணையால் காத்து நீ
துயரை களைந்த முகுந்தா ஆஆ
நந்தகுமாரா நவநீத சோரா
தாமரைக் கண்ணா
ஸ்ரீஹரி
தேவகானம் கேட்டதைப் போல உணர்வை எஸ்.ஜானகியின் குரல் ஏற்படுத்திய பாடலிது. ஒரு பாடலைக் கேட்டவுடன் அனைவரும் பாட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் வரிகளும், இசையும் அமைந்தால் அதை விட சிறந்த பாடல் இருக்க முடியுமா? அதற்கு இந்த பாடல் சான்றாக உள்ளது. மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் புகழ்பெற்ற பஜனாஞ்சலி பாடலை பூவை அமுதன் எழுதியுள்ளார். எஸ்.ஜானகி பாடிய அந்த பாடல்,

பல கோடி பக்தர் போற்றும் பரந்தாமன்
நெஞ்சத்தில் நலமோடு வாழ்பவளே
லக்ஷ்மி வளம் யாவும் சூழ்பவளே
நாற்கரங்களோடமுத பாற்கடலிலே பிறந்து
நாரணனை கொண்டவளே –
வாழ்வில் பூரணமாய் நின்றவளே
செல்வத்தின் செழுமையுடன் இல்லம்
ஒளி விளங்க இல்லாமை இல்லாமல்
நல்லதெல்லாம் துலங்க வருவாயே
பெருமகளே வரம் அருள்வாயே திருமகளே
பொல்லாதார் திசை விட்டு
நல்லோர்கள்தனை தொட்டால்
பொன்னுலகம் ஆகுமம்மா உந்தன்
பூவடிகள் தொழுவோமம்மா…
ஒரு பக்திப் பாடலுக்குள் இல்லாமை இல்லாமல் என்று பொதுவுடமையை எழுதிய பூவை அமுதன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய கணபதியே அருள் குணநிதியே பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை மூச்சுவிடாமல் கே.ஜே.யேசுதாஸ் பாடியிருப்பார். மேலும் ஐயப்பா அருள் வழங்கும் மெய்யப்பா என்ற பாடலையும் பாடியுள்ளார். மேலும் ஜெயா- விஜயா இசையில் பக்தி கீதம் என்ற அழகிய இசை ஆல்பத்திற்கு பூவை அமுதன் பாடல்களை எழுதியுள்ளார்.
விநாயக பெருமானே, எந்நாளும் உன் பேரை, மனதார நினைக்கிறோம், ஏழுமலை, ஹரே ராமா ஆகிய பாடல்களை கே.ஜே.யேசுதாசும், சாய்ந்தாடு கண்ணா, காஞ்சி காமாட்சி, திருமாலின் இதயத்தில், தாயே சமயபுரம் ,சாய்ந்தாடு கண்ணா ஆகிய பாடல்களை சுனந்தாவும் பாடியுள்ளார். பள்ளி ஆசிரியர் ஒருவர் பக்தியிசைக்கு வழங்கிய கொடைகளாக இந்த பாடல்கள் திகழ்கின்றன பாடலாசிரியர். பூவை செங்குட்டுவனை நினைக்கும் உள்ளங்கள் இனி பாடலாசிரியர் பூவை அமுதனையும் நினைக்க வேண்டும் என்பதே என் ஆசை..
– ப.கவிதா குமார் ( நினைவுகள் சுழலும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



