நினைவே சங்கீதம் 29: கவிதையின்பம் காட்டுகிறாய்…

காதலுக்காக கவிதை எழுதித் தரச் சொல்லிக் கேட்காத நண்பன் ஒருவனும் எனக்கு இருந்தான். காரணம் அவனே ஒரு கவிஞன். கவிஞருக்கு பெற்றோர் இட்ட பெயர் ராகவேந்திரன். ராகவேந்திர சுவாமி ரஜினியின் குரு என்பதால் கவிதைகளை குருஜி என்ற பெயரில் எழுதி வந்தான். பழைய டைரிகள் முழுக்க எட்டு, பத்து வரிகளில் அவன் ஏராளமாக எழுதிக் குவித்தாலும்,
எனக்குப் பிடித்தது என்று செய்ததை விட,
உனக்குப் பிடிக்கும் என்று செய்ததே அதிகம்,

விழிகளால் வருடினாய்,
உடல் முழுக்க அதிர்வு
என்பது போல் எல்லாம் அவன் எழுதிய இரண்டு, மூன்று கவிதைகள் வாரமலரில் வந்திருந்தன.வாரமலரின் பல்லாயிரக்கணக்கான வாசகிகளில் எங்கள் தெருவில் இருந்த சில நூறு பேர்களில் ஒருத்தி குருஜியின் ரசிகையாகவும், மெல்ல மெல்ல குருஜியின் கவிதைகளின் நாயகியாகவும் ஆகிப் போனாள். இருவரும் எங்கள் நண்பர் கோஷ்டிக்குத் தெரிந்தும் சந்தித்துக் கொண்டார்கள். எங்களுக்குத் தெரியாமலும் சந்தித்துக் கொண்டார்கள்.
ராகவேந்திர மடத்தில் அவள் அடிப் பிரதட்சிணம் செய்த போது, நம் கவிஞரும் அடிப் பிரதட்சிணம் செய்தார். அந்தக் காலத்தில் அடியே ! என்று ஆரம்பிக்கும் பல காதல் கவிதைகள் எழுதப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமோ? என்று நாங்கள் கிண்டலடிப்பதுண்டு.

இன்றைய காலம் போல் காதலர்கள் பிறந்த நாளை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டாடும் காலமல்ல அது. என்றாலும் அவள் எப்படியோ குருஜியின் பிறந்த நாளை அறிந்து கொண்டு, அவன் பிறந்த நாளுக்கு ஒரு கேஸட்டைப் பதிந்து தந்தாள். கூடவே ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் பட்டையும். எங்களுக்குத் தெரியாத அந்த பிறந்த நாளன்று இரவு நண்பர்கள் எல்லோரும் வீடு சென்ற பின், நானும், அவனும் தனியாக இருந்த போது, குருஜி, “மாப்ள, எனக்கு பர்த்டே. அது ஒரு கேஸட்டும், ஃபை ஸ்டாரும் கொடுத்துச்சு,” என்றான். கேஸட்டை என்னிடம் நீட்டினான். அது நாள் வரை எதையும் என்னோடு பங்கிட்டுத் தின்றவன் முதன்முறையாக அந்த ஃபைவ் ஸ்டாரை என்னிடம் காட்டிவிட்டு அப்படியே முழுங்கினான். “ஒன்னோட ஃபிரண்ட்ஸ் கூட்டத்துக்கு எல்லாம் தரவேண்டாம்னு சொல்லிதான் தந்தா மாப்ள, சாரி” என்றான். நிச்சயமாக அவள் உன் குரங்கு கூட்டம் என்று தான் சொல்லியிருப்பாள். தம்பி நம்மிடம் மாற்றிச் சொல்கிறான் ! “கேஸட்ட கேட்டுப் பாரு,” என்று தந்தான்.

வீட்டில் வந்ததும் கேஸ்ட்டைப் போட்டேன். ஜேசுதாஸின் கம்பீரமான குரலில்
வேதம் நீ … இனிய நாதம் நீ…
நிலவு நீ… கதிரும் நீ….
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ…. இனிய நாதம் நீ…
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்…
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…
இரண்டு பக்கமும் சேர்ந்து அறுபது நிமிடம் ஓடக் கூடிய அந்த கேஸட் முழுவதும் கவிதை இன்பம் காட்டுகிறாய் … என்ற ஒற்றை வரியை ஜேசுதாஸ் பாடிக் கொண்டே இருக்கிறார் ! முதலில் நான் கூட கேஸட் சிக்கி விட்டதோ என்று நினைத்தேன். இல்லை ! வேண்டுமென்றே தான் அப்படி பதிந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இப்படி எல்லாம் பாடல் பதிந்து தர பல ரெக்காடிங் சென்டர்கள் இருந்தன. ஒரே படத்தில் சந்தோஷமாகவும், சோகமாகவும் ஒலிக்கும் பாடல்களை மட்டும் தொகுத்து பதிவது, கனவு, நிலவு என்று தீம் சாங்குகளாகப் பதிவது, ஒரு ரஜினி பாட்டு, ஒரு கமல் பாட்டு என்று மாற்றி மாற்றிப் பதிவது என்று பல்வேறு ரசனைக்காரர்கள் இருப்பார்கள். இந்தப் பெண் நம் கவிஞருக்கு கவிதை இன்பம் காட்டுகிறாய் என்ற ஒற்றை வரியை ஒரு கேஸட் முழுக்க பதிந்து தந்திருக்கிறாள் ! இன்றளவும் அந்தப் பாட்டைக் கேட்டால் எனக்கு அவர்கள் நினைவுதான்.

பாட்டு கேட்கும் மும்முரத்தில் பின்னால் அண்ணன் வந்த நிற்பதை கவனிக்கவில்லை. நானும் ஒரு அரைகுறைக் கவிஞன் என்பதால், அண்ணன் “யார்ரா உனக்கு இப்படி பதிஞ்சி தந்துருக்கா?” என்றார். “ எனக்கில்லண்ணே..” என்றதை முதலில் அவர் நம்பவில்லை. “எந்த தப்பையும் எனக்குத் தெரிஞ்சு என் கண்பார்வைல செய். அதுதான் உனக்கு நல்லது,” என்றார். “அதெல்லாம் இல்லண்ணே”. அண்ணன் தன் குறுக்கு விசாரண மூலம் கடைசியில் யாரென்று கண்டுபிடித்து விட்டார்.

சம்பவம் முடிந்து ஒரு வாரம் பத்து நாள் இருக்கும். நானும் குருஜியும், இன்னொரு நண்பனும் நைட்ஷோ கல்பனா தியேட்டருக்குப் போனோம். அவர்கள் வீட்டில் நடு இரவில் கதவு திறக்க மாட்டார்கள். எனவே, இருவரும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் தான் படுக்க வேண்டும். ஒன்பது மணிக்கே மாடியில் தண்ணீர் தெளித்து, எக்ஸ்ட்ரா பாய், தலையணை போட்டு, ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வைத்து விட்டுப் படத்துக்குப் போனோம். வந்ததும் அண்ணன் தான் கதவைத் திறந்து விட்டார். எல்லோரும் மாடியில் போய் கொஞ்ச நேரம் படம் பற்றி பேசி விட்டுத் தூங்கிப் போனோம்.

காலையில் நாங்கள் எழுந்த போது, அண்ணன், “ கவிஞர் குருஜி எல்லோருக்கும் கவிதையின்பம் காட்றாரு. நமக்கு மட்டும் கொறட்டையின்பம் காட்டிட்டாரு. ராத்திரி சுத்தமா தூங்க விடல்ல,” என்றார் சிரித்தபடி. குருஜி தேவர்மகன் வடிவேலு ‘ஐயாவுக்கு தெரிஞ்சு போச்சா?’ என்று சொல்வது மாதிரி ‘அண்ணனுக்குத் தெரிஞ்சு போச்சா?’ என்று என்னை முறைத்து விட்டு ஓடியவன்தான். பத்து நாட்கள் எங்கள் வீட்டுப் பக்கமே வரவில்லை. பொதுவாய் இது மாதிரி லவ் ஜோடிகள் பற்றியெல்லாம் காலப் போக்கில் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போய்விடும். ஆனால் இவர்கள் விதி விலக்கு. இருவரும் இன்று வரை என்னோடு தொடர்பில் தான் இருக்கிறார்கள்.

ஆனால், தனித் தனி குடும்பத்தோடு இருக்கிறார்கள். குருஜி சற்று தொலைதூரத்தில் இருக்க, அவள் மதுரையில் தான் இருக்கிறாள். எதிர்சேவை, விஷால் மால் என்று அவ்வப்போது எங்காவது பார்ப்பதுண்டு. ஏதோ மாநில அரசுத் துறையில் பணியாற்றுகிறாள். பார்க்கும் போதெல்லாம் .“உங்க ஃபிரண்ட் எப்படி இருக்காரு?” என்பாள். நகுலன் கவிதை மாதிரி எந்த ஃபிரண்ட் என்று நானும் கேட்கமாட்டேன். எந்த ஃபிரண்ட் என்று அவளும் சொல்ல மாட்டாள். நானும் “அவன் ரிடையர்ட் ஆகி ஆறு மாசம் ஆச்சு”, “பையன பாக்க கனடா போயிருக்கான்”, “ரெண்டாவது பையனுக்கு அலயன்ஸ் பாக்கறான்” என்பது மாதிரியான சமீபத்திய செய்திகளை அவளுக்கு அப்டேட் செய்வேன். அவனிடமும் அது பற்றி சொல்வேன். எந்த ரியாக்ஷனும் இன்றி கேட்டுக் கொள்வான்.

குருஜிக்கு இப்போது மதுரையில் சொந்த பந்தங்கள் யாரும் இல்லை. போன மாதம் ஒரு பொது நண்பரின் மகள் கல்யாணத்திற்கு வந்தவன் எங்கள் வீட்டில் தான் தங்கினான். மாடி அறையில் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஒரு மணிக்கு மேல் தான் தூங்கினோம். அன்றிரவும் எனக்கு அவன் குறட்டையின்பம் காட்டினான்!
– ச.சுப்பாராவ் (தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *