
நவம்பர் 29- டிசம்பர் 8 1847 (வெண்டளையான் அமைந்த தரவு கொச்சகக் கலிப்பா)
1)கூடியது கம்யூனிஸ்ட் கூட்டமைப்பின் கூட்டம்
தேடிமார்க்ஸும் ஏங்ல்ஸும் சென்றிருந்தார் அங்கே
நாடியொரு கொள்கைநெய்து நல்கிடவே சொன்னது
ஈடில்லா மேதைகளாம் ஏங்கல்ஸுடன் மார்க்ஸை
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1848
2)ஆட்டுதுபார் பூதமொன்று ஐரோப்பாக் கண்டமதை
காட்டுத்தீ போல்பரவும் கம்யூனிஸ்ட் கொள்கையது
ஓட்டிடவே ஒன்றுசேர்ந்தார் ஆளுகின்ற வர்க்கத்தார்
ஏட்டில் எழுதிவைத்தார் ஏங்கல்ஸும் மார்க்ஸும்
3)இதுவரை மண்ணில் இருந்த வரலாறு
பொதுவினில் வர்க்கப் புரட்சி வரலாறே!
பதுமைகள் ஆகவே பாமரரைக் கொண்டு
சதுரங்கம் ஆடிய சங்கதிகள் தானே!!
4)தொழில்கள் தமக்கிருந்த தூய ஒளிவட்டம்
அழிந்து தகர்ந்தது ஆலைகள் வந்ததும்!
தொழில்முத லாளிகள் தூக்கி எறிவதைப்
பழந்தொழில் வல்லுநர் பாய்ந்து பொறுக்கினர்
5)குடும்ப உறவுகள் கொண்ட பிணைப்பினைப்
பிடுங்கி எறிந்தது பெருமுத லாளியம்!!
கொடும்பணம் இன்று குடும்ப உறவிற்கு
நடுவினி லேநின்று நாட்டாமை பண்ணுது!
6)பண்ணை அடிமைகளைப் பாட்டாளி யாக்கி
உண்ணும் உணவை உழைத்தே பெறவைத்துத்
தன்னை அழிக்கின்ற சத்துருவைத் தானே
முன்னின்று உற்பத்தி மூலதனம் செய்யுது

- தானாகச் சாகாது தாரணியில் மூலதனம்
ஆனாலும் வர்க்கமொன்று ஆழக் குழிதோண்டும்
கோனாக வாழும் கொடுமைமிகு மூலதனம்
காணாமற் போகின்ற காலமொன்று வந்திடுமே! - முதலா ளித்துவம் மூழ்காமல் நிற்குமென
இதமாய் பிரௌதான் இயம்பியதைக் கேட்டதும்
உதவாக் கருத்திதில் உண்மையில்லை என்றே
பதமாகச் சொல்லிவைத்தான் பாட்டாளி கள்தலைவன் - செல்வம் ஒருபுறத்தே சேர்ந்தே குவிந்திருக்கும்
கொல்லும் வறுமையது கோலோச்சும் வேளையிலே
செல்லும் இடமெல்லாம் சீரழிவைக் கொண்டுசெல்லும்
பொல்லா மூலதனம் பூமியினைத் தான்கெடுக்கும் - உலகத் தொழிலாளர் ஒன்றுபட வேண்டுமென்ற
கலகக் கோஷமதை காரலும் ஏங்கல்ஸும்
பலமாய் வகுத்தளித்தார் பாட்டாளி மேன்மைபெற
புலர்ந்திடப் போகின்ற பொன்னுலகின் கீதமென
-மனோந்திரா (தொடரும்)
இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.



