ஒரு கதை 29: தப்பியோட்டம்…

இந்த உலகத்தில் சகலவற்றையும் வடிவமைத்து விடுகிறார்கள். வீடு என்றால் இப்படித்தான் இருக்கும். உறவுகள் என்றால் இப்படி இப்படித்தான் இருப்பார்கள். ஒரே படித்தான மாதிரிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு, அவர்கள் விரும்பியது போல இல்லாவிட்டால் வருத்தப்படுகிறார்கள். எரிச்சல் அடைகிறார்கள். அதிலும் குறிப்பாக அம்மா எனும் சொற்பதம் போல பவித்ரமாக்கப்பட்ட சொல் ஒன்று இந்த உலகத்திலேயே இல்லை. குடும்ப மேன்மைக்காக தியாகம் செய்து தன்னைக் கரைத்துக் கொண்டவள். உடலும் மனமும் நோக பிள்ளைகளைப் பெற்றவள். எத்தனை வலி மிகுந்த வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்டாலும் பிள்ளைகளின் நலனுக்காக எந்த துயத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவள்.

அம்மான்னா சும்மான்னு நெனச்சியான்னு ஆரம்பிச்சு அவள் கடவுளுக்கு நிகரானவள் எனும் பெரும் சித்திரம் தமிழ் மொழியில் மட்டுமல்ல, உலக இலக்கியம் எங்கிலும் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. இது நிஜம்தானா? உண்மைதான். ஆனாலும், இது பகுதி உண்மையே. விதி என ஒன்று இருந்தால் விதிவிலக்குகளும் இருக்கத்தானே செய்யும். மிகு புனைவின் உச்சத்தில் கட்டி எழுப்பப்பட்ட. அம்மா என்கிற உறவினைக் குறித்த விதிவிலக்கான கதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா?

பூதக்கண்ணாடியை வைத்து தேடிப்பார்த்தால்கூட கிடைத்திட சாத்தியமற்ற தனித்துவமான கதையொன்றை தமிழில் எழுதியிருப்பவர் எம்.வி.வெங்கட்ராம். அவருடைய ‘பைத்தியக்காரப் பிள்ளை’ என்கிற கதையை வாசிக்கிற எவரும் இப்பிடியெல்லாம் அம்மா இருப்பார்களா எனும் அதிர்ச்சி அடைவார்கள். எம்.வி. வெங்கட்ராம் ‘பைத்தியக்காரப்பிள்ளை’ எனும் தன்னுடைய சிறுகதை ஒன்றின் வழியாக இந்த உலகிற்குச் சொல்ல வருவது அம்மா, அப்பா,தாத்தா, பாட்டி மகள், மகன் என எந்த உறவினையும் புனிதப்படுத்தாதீர்கள் என்பதைத்தான்.

எம்.வி.வெங்கட்ராம் தமிழ்ச் சிறுகதைப் பரப்பினில் அசாத்தியமான சாதனைகளை நிகழ்த்திய கும்பகோணம் குழுவைச் சேர்ந்தவர். மௌனி, கு.ப.ரா, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு போன்ற எழுத்தாளர்கள் யாவரும் காவிரி சுழித்தோடும் நதிக்கரையில் நின்றுகொண்டு அதன் வனப்பையும் அழகையும் லயித்து லயித்து கதைகளை எழுதிக் கொண்டிருந்தனர். இவர்கள் எவரின் பார்வைக்குள்ளும் சிக்காத அதே தஞ்சைப் பகுதியின் நெசவுத் தொழிலாளிகளான சௌராஷ்டிர மக்களின் வாழ்க்கைப்பாடுகளை கதைகளாக எழுதியவர் எம். வி. வி. அவர் தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லாத் துறைகளுக்குள்ளும் பரிசோதனைகளை நிகழ்த்தியவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு என தொடர்ந்து இலக்கியப் பரிசோதனைகளை செய்து கொண்டேயிருந்தவர் அவர். நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.

எம்.வி.வெங்கட்ராம் எப்போதும் விலகிப் பயணிப்பவர். அவருடைய சகாக்கள் அனைவரும் சல சலத்து ஒடும் காவேரியின் சன்னமான ஒசைக்குள் தங்களை இழந்து லயித்துக் கொண்டிருந்தபோது அதிலிருந்து முற்றிலும் தன்னை விலக்கிக் கொண்டவர். காதைத் தைக்கும் தறிகளின் சப்தங்களையும், அந்த சப்தங்களையும் தாண்டி அதீத குரலில் பேசிக்கொண்டேயிருக்கும் மக்களின் தனித்த வாழ்க்கையையும் கதைகளாக்கியவர். அதனால்தான் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ கதையில் வருகிற அம்மாவையெல்லாம் அவரால் எழுத முடிந்திருக்கிறது.

கதையின் துவக்கத்தில் வருகிற ராஜம் என்கிற இளைஞன் ஊரின் ஒற்றைச் சேவல் விழிப்பதிற்கு முன்பாகவே அதிகாலை நாலு மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவன். வீடே ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது தனக்குள் எழும் சின்ன விருப்பமான காப்பி குடிக்கும் ஆசையை நிறைவேற்ற கிளப்புக் கடைக்கு கிளம்புகிறான். ஆணும், பெண்ணுமாக பத்துக் குழந்தைகள் பிறந்து தறிக்குழியிலேயே தங்களுடைய வாழ்க்கையைத் தத்துக்கொடுத்த குடும்பத்தின் மூத்த ஆண்பிள்ளையவன். அப்பாவின் மரணத்திற்கு பிறகு தங்கைகளை கல்யாணம் செய்து அனுப்பி வைப்பதை பெரும் கடமையாக செய்து முடித்தவன். தறி வேலையில் அவனுக்கு கையாளாக இருக்கும் ஏழுவயது கடைசித் தங்கையைத் தவிர அவனுடன் அவனுடைய அம்மாவும் இருக்கிறாள். அம்மாவை உற்றுப் பார்க்கிறான். குறட்டை ஒலி சன்னமாக அவளிடமிருந்து வெளியேறுகிறது. இப்போதைக்கு அம்மா விழித்துக் கொள்ள வாய்ப்பில்லை.

ஒருவேளை விழித்தால் என்னவெல்லாம் நடக்கும் என அவன் மனதிற்குள் யோசிக்கிறான் அதுவே கதை. பத்துப் பிள்ளைகளையும் வரிசையாகப் அம்மா பெத்துப் போட காரணமாக இருந்த அப்பா ஒன்றும் அவ்வளவு நல்லவர் இல்லை. குடிகாரர். தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடித்து துவைப்பார். இருட்டி விட்டால் இவர்களா காலையில் ஊரே அச்சப்படும்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் என எல்லோருமே யோசிக்கும்படி நடந்து கொள்வார்கள். சின்னப் பையனாக இருந்த நாட்களில் இருந்து இதனை ராஜம் கவனித்தே வந்திருக்கிறான். உழைப்பை விட அதிர்ஷ்டத்தைப் பெரிதாக நம்புகிறவர் அவனுடைய அப்பா என்பது அவனுக்கு விவரம் தெரிய வந்த நாட்களில் புரிய வந்தது. லாட்டரி சீட்டு வாங்குவதை அவர் மரணம் வரையிலும் நிறுத்தவேயில்லை. அடுத்து பிறக்கப்போகும் பிள்ளையோட ராசிக்கு பெரும் சொத்து சேரப்போகிறது எனும் நம்பிக்கையில் பிள்ளைகளை வரிசையாக பெற்றும் போட்டார். இப்போது ராஜத்திற்கு உதவியாக தறிக்குழியில் நிற்கும் அவனுடைய கடைசித் தங்கை பிறந்த அன்று இறந்தும் போனார்.

அறியாத வயதில் குடும்ப பொறுப்புகளைச் சுமந்ததினால் வயதை மீறிய முதிர்ச்சி உடலில் புகுந்துவிட்டது. அம்மாவை உற்று பார்த்தபடியே வெளிக்கிளம்பும்போது “ராஜம் கடைக்காப் போற வரும்போது கிளப்புக்கடையில ஒரு டம்ளர் சாம்பாரும் வாங்கிட்டு வா” என்கிறாள். .எது நடக்கக்கூடாது என நினைத்தானோ அது நடந்தே விட்டது. “கிளப்புக் கடையில சாம்பார் டம்ளர்ல தருவதில்ல..பேசாம தூங்கு” என்கிறான். வாரிச்சுருட்டி எழுந்தவள் “எனக்கு வாங்கித்தருவியா, எதுத்த வீட்டு சிறுக்கிக்குன்னா வாங்கித்தருவ” என்கிறாள்.

அப்பாவிடம் சண்டை போட்டு போட்டு அதற்கு நன்றாகப் பழகிவிட்டாள். இப்போது ஆள்தான் மாறியிருக்கிறது. சண்டை உக்கிரமாக மாறும்போது அப்பாவை கடித்து விடுவாள். அம்மாவின் கடிக்குப் பயந்து வீட்டைச் சுற்றி அப்பா ஓடும் காட்சி ராஜத்தின் மனத்திரையில் ஓடுகிறது. அப்பா மரணித்த பிறகு ராஜத்தோடு சண்டை போடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். இன்றைக்கு இப்படி துவங்குகிற சண்டையை அவன் விரும்பவில்லை. “ சரி, சரி கிளம்புகிறேன். வரும்போது வாங்கிட்டு வாரேன். இல்லேன்னா நீ நாயி மாதிரி குலைச்சுக்கிட்டே கிடப்ப, கொஞ்சம் விட்டா கடிச்சு வச்சுருவ” என்கிறான்.

அம்மா அதிகாலையை தன்னுடைய தனித்த வசவுகளினால் உசுப்பத் தொடங்குகிறாள். வசவுகளுக்கு நடுவாக “பெத்த தாய்க்கு ஒத்த டம்ளர் சாம்பார கிளப்புக் கடையில இருந்து வாங்கிட்டுவர இப்பிடி கணக்குப் பார்க்கிற பய அம்மாவை நாய் என திட்டுற, ஆனா, எதிர்த்த வீட்டுச் சிறுக்கிக்குன்னு கம்மல், மூக்குத்தி, தங்கச்செயினுன்னு வாங்கி ரகசியமாக பெட்டிக்குள்ள பூட்டி வைச்சிருக்க” என்கிறாள். தான் எதிர்வீட்டு பங்கஜத்தைத்தான் கல்யாணம் கட்டப்போகிறேன் எனும் பரம ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் டிரங்குப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்பதை எப்படி இந்த அம்மா கண்டுபிடித்தாள் எனத் தெரியாமல் தடுமாறினான்.

ஆனாலும் அம்மாக்காரி விடவில்லை. எதிர்த்த வீட்டு பங்கஜத்தையும் விட்டுவைக்காது மானம் கெட்ட வசவு வைகிறாள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழிதான் உண்டு.கிளப்புக் கடைச்சாம்பாரை வாங்கிட்டு வந்து அவ மூஞ்சில வீச வேண்டியதுதான். மகனாகப் பெறந்த பாவத்துக்கு என்னையத் திட்ட வேண்டியதுதான். எதுவுமே தெரியாத பங்கஜத்த எதுக்கு திட்டுற. சும்மா வீட்டுல ஒரு மூலையில அடைஞ்சு கிடக்கிறான்னு பார்த்தா, எப்பிடி இவளுக்கு பங்கஜத்த கல்யாணம் கட்டப்போற சேதியெல்லாம் தெரியுது. ரகசியமா பூட்டி வைச்சிருந்த டிரங்குப் பெட்டிக் கதையெல்லாம் அவிழ்த்து விட்டுக்கிட்டு இருக்காளே எனத் தடுமாறியபடி டம்ளோரோடு கதையிலிருந்து வெளியேறுகிறான். மூர்க்கமாக நகர்ந்த கதை ஊரின் புறவெளிகளைக் காட்சிப்படுத்தியபடி மிக மெதுவாக நகர்கிறது. சாம்பார் டம்ளரோடு வீட்டிற்குள் நுழைகிறான் ராஜம்.

“உன்னோட சாம்பாரத் தூக்கி சாக்கடையில ஊத்துடா, பெத்த தாய்க்கு செய்யிறதுக்கு இம்பிட்டு யோசிக்கிற பய வாங்கிட்டு வந்தது எதுவும் வேண்டாம்”. ராஜம் தடுமாறினான்.“ இனி இந்த ராட்சசிய சமாதானப்படுத்த முடியாது. அவளா மனசு வச்சு கோபத்த குறைச்சாத்தான் உண்டு. இன்னும் என்ன என்ன வசவு வையப் போறாளோ” என யோசித்தபடி தறியின் காக்குழியில் இறங்கி நேற்றைய வேலையை விட்ட இடத்திலிருந்து துவங்கினான். உதவிக்கு ஏழுவயது தங்கை அவளாகவே வந்து சேர்ந்து கொண்டாள். வேலை வேகமாக நடக்கிறது. காலையில் துவங்கிய அம்மாவின் வசவு நின்றபாடில்லை. கத்திக் கொண்டேயிருக்கிறாள். விறு விறு என தறிமேடைக்கு அருகே வந்தவள். அடுத்த அணுகுண்டைத் தூக்கி சர்வ சாதாரணமாக போடுகிறாள்.“ சின்னவளே, நீ ஒன்னும் இங்க கிடந்து சாக வேண்டாம். விசைத்தறி முதலாளி கிட்ட பேசிருக்கேன். அவரு ஒன்ன வேலைக்கு வரச் சொல்லி இருக்காரு, சட்டுன்னு கிளம்பு, இவங்கூட கிடந்து இடுப்பொடிஞ்சு பங்கஜத்திற்கு நகை சேர்க்கிறதுக்காக பாடுபட வேண்டாம்” என்கிறாள்.

அய்யய்யோ இது என்ன புதுசா ஒன்னு கிளம்பிருச்சு எனத் தடுமாறிய ராஜம், “ஏம்மா இப்பிடி பண்ணிக்கிட்டு இருக்க சாம்பார்தான் வந்திருச்சுல , பேசாம சாப்பிடு” இதுவெல்லாம் அவளோட காதில விழல. மகளை வேலைக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறாள். “இந்தக் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு அக்கா, தங்கைகள் கல்யாணம், தம்பிமார்களோடா படிப்பு கல்யாணம் வரையிலும் பார்த்திருக்கேன். கடைசியா நிக்கிற இவளுக்கும் எதாவது செய்யனுமில்ல”. “நீ செஞ்சு கிழிச்சது போதும், பெத்தவளுக்குத் தெரியாதா, பிள்ளைக்கு என்ன செய்யனும்னு. நான் தறி முதலாளி கிட்ட பேசிட்டேன். அவரும் அட்வான்ஸ் ரூபாய் தரேன்னுட்டாரு. ,நீ ஒன்னோட சோலியப்பாரு”. நீ வாடின்னு மகளைக் கையப்பிடிச்சு தறிக் குழியில இருந்து தர தரன்னு பிடிச்சு இழுத்துட்டு போன அம்மாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜம். “ வேலை பாதியில கிடக்கு விட்டுரும்மா. தங்கச்சிக்கு தோடு வாங்கத்தான் இந்த சேலையவே நெய்யிறேன்”. சட்டென திரும்பிய அம்மா “ அப்பிடியா சரி. உனக்கு உதவிக்கு இவ வேனும்னா தறி முதலாளி தர்றதா சொன்ன அந்த நூறு ரூபாயை நீ அட்வான்ஸா குடு”. இதை ராஜம் மட்டுமல்ல கதை வாசிக்கிற எவரும் எதிர்பார்க்கவில்லை. மார்க்ஸிய மெய்யியல் கூறுவதைப்போல இந்த உலகத்தில் பரஸ்பரம் மனிதர்கள் தன் சக உறவுகளோடு பராமரிக்கும் எல்லா செயல்பாடுகளுக்கும் பின்பாக ஆழமான பொருளியில் காரணங்கள் மட்டுமே இருக்கின்றன என்பதற்கான சாட்சி எம்.வி.வியின் ‘பைத்தியக்காரப்பிள்ளை’ கதை.

இந்த உலகத்தில் தாய் மகன் பாசக் கதைகள். காதலன் காதலிக்கு இடையேயான நெருக்கம். அண்ணன் தங்கை கண்ணீர்க் கதைகள் என யாவற்றுக்கும் பின்னால் இருப்பது. இவனோ அல்லது இவளோ நாளை நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள் எனும் நம்பிக்கையில் மட்டுமே கட்டமைக்கப்படுகின்றன. கட்டமைக்கப்பட்ட உறவுப் போலிமைகளைக் கட்டுடைத்த துணிச்சல் மிக்க எழுத்து எழுத்தாளர் எம் வி.வெங்கட்ராமினுடையது. கதையை இத்துடன் முடிக்கவில்லை. அவர். அம்மாவின் அராஜகக் குரல் கேட்டு தடுமாறுகிறான் ராஜம். பைத்தியமாகிப் போனான். நடக்கிறான். நடக்கிறான். ஊரு, காடு, தேர்,தெருவு என நடந்து தள்ளாடி ரயிலிலேயே விழுந்தும் விடுகிறான் என பைத்தியக்கார பிள்ளை கதையை முடிக்கிறாரௌ. எம். வி.வி.
ம.மணிமாறன் ( தொடரும்)

இந்த தொடரைப் படிக்கhttps://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *