
கடந்தாண்டு ஒரு இலக்கிய நிகழ்வில் கவிஞர் செந்தி இந்த கவிதைத் தொகுப்பை வாசிக்க தந்தார். உடனே வாசித்து விட்டு விமர்சனம் எழுதுவதற்காக எடுத்து வைத்திருந்தேன். அவசர வேலைகள் காரணமாக எழுத முடியவில்லை. இதற்கிடையில் புத்தக குவியலிற்குள் சில்க் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டாள். நீண்ட நாள் கழித்து ஒரு நாள் வெட்கம் தாளாமல் வெளியே வந்த சில்க்கை, இறுகப் பற்றி மீண்டும் வாசிக்கத் துவங்கினேன்.
முதல் வாசிப்பில் இரண்டு கவிதைகளை மடித்து வைத்திருந்தேன். மறுவாசிப்பில் ஏராளமான கவிதைகளை மடிக்க வேண்டியிருந்தது. கால தாமதம் கவிதைகளை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. கவிஞர் செந்தியை முப்பது ஆண்டுகளாக தெரியும். எனது ஆரம்ப கால வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவர். நீண்ட கால மௌன இடைவெளி, அதற்குப் பின் கவிதை வழியாக புத்தக சிநேகிதம், செந்திக்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே கவிதை குறித்த நீண்ட விவாதமும், முரண் பார்வைகளும் இருந்தன. அது இன்றும் தொடர்வது என்பது தற்செயலானது அல்ல. அவரவர் பாதையில் அவரவர் நியாயத்தை பேசிக் கொண்டிருக்கிறோம். வழி போக்கர்கள் வேடிக்கை பார்த்தபடி செல்கிறார்கள்.
செந்தியின் ‘பிறிதொன்றான மண்’கவிதைத் தொகுப்பிற்கு பின் சில்க்கை வாசிக்கிறேன். இடைவெளிகள் நீண்டிருந்தாலும், அவரது கவிதை மனம் அப்படியே சொற்களால் நிரம்பியிருக்கிறது. ஒரு வருட காலத்தில் 91 கவிதைகள் எழுதியிருக்கிறார். நல்ல எண்ணிக்கை எனக்குப் பிடித்த கவிதைகளாக 19-ம், பிடிக்காத ஒரு கவிதையும் இருக்கிறது. இவர் கவிதையின் மைய ஆன்மாவாக, காட்சிகளின் நேர்முக வர்ணணையாளராக இருக்கிறார். அது வாசிப்பு சுகத்தை தருகிறது. புதிரோ, இருண்மை நிறைந்த சொற்களோ? அதிகம் இல்லாதது பெரிதளவு மயக்கத்தை தரவில்லை.
‘தூரப் போதல்’ கவிதையில் பிரிவின் ஆற்றாமையை மனங்குமுறி சொல்கிறார். பிரிவால் யார்தான் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள். இந்தக் கவிதைக்குள் எங்கோ ஒரு மூலையில் நானும் இருக்கிறேன். நான் எழுதிய பிரிவுக் கவிதையில் பிரதானமாகவே செந்தியும் இருக்கிறார். கால நதி ஓட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றை எழுதித்தான் கடக்க வேண்டி இருக்கிறது.இக்கவிதையின் வரிகள் இவரது தற்போதைய நிலைமையை துல்லியமாகச் சொல்லுகின்றன.
தத்துவங்கள் ஒவ்வொன்றையும்
வலது கையால் தூரத்தில்
விட்டெறிகிறேன்
‘காமம் சுமந்தலைதல்’ எனும் தலைப்பிலான கவிதையோ, செந்தியின் சுய காமம் குறித்து வெளிப்படையாகவே பேசுகிறது. வெளிப்படையாக பேசுவதால், யாருக்கும் துயரற்றது என்று நம்புகிறேன். சக உயிர்க்கு இன்னல் விளைவிக்காத, காமம் கொண்ட மானிடர்களால் இன்னும் பத்திரமாயிருக்கிறது உலகு. அதில் பிடித்த வரிகள்,
ஓயாத அலை போல்
காமம் சுமந்து அலைகிறது உடல்
காமம் பூக்கும் இவ்வுடலை
எங்கு வைத்து விட்டு திரும்புவதென யோசிக்கிறேன்…
பிடிக்காத கவிதை என்பதை விட, கருத்தியல் ரீதியான முரண்பாடு என்பதால் இக்கவிதையை மறுக்கிறேன். ‘நான் தோழரல்ல என்றொன்றை எழுதிப் பார்த்தல்’. இக்கவிதையில் சொல்லப்படும் அனைத்து சம்பவங்களும், தோழர்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கே பொதுவானது. இன்னும் வசதியாக தோழர்கள் என்று போட்டுக் கொள்ளும் இடங்களில், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், கவிஞர் வகைமையினர், மாணவர்கள், நீங்கள் யாரிடத்தெல்லாம் நட்பாக இருந்தீர்களோ அத்தனை தரப்பையும் இதில் சேர்க்கலாம். இறுதியில் செந்தியென்ற உங்கள் பெயரையும் இணைத்துக் கொள்ளலாம்.

முறை தவறிய காமத்தை கவிதையாக வடித்து, அதற்கு சாட்சியாக இந்தப் புத்தகத்திற்குள்ளும் அதை வைத்திருக்கிறீர்கள்.தனக்குத் தானே சூன்யம் வைத்துக் கொள்வது என்பது இதுதான் போல, மனிதன் சல்லித்தனம் நிறைந்தவன் தான், அந்த சல்லித்தனத்தை வெளியில் தேடுகிறோமே தவிர, நமக்குள் உரசிப் பார்ப்பதில்லை. மனிதன் என்ற சொல்லிற்குள்ளாவது நம்மை அடைக்கும் விதமான செயல்களை செய்ய முயல்வோம்.
செந்தியின் ஒட்டுமொத்த கவிதையையும், இரு முறை வாசித்து நிமிர்கையில், அவர் நல்லதொரு கதை சொல்லியாக தெரிகிறார். ஒருவேளை எழுத்துச் சோம்பேறித்தனத்தால், யானையைப் பிடித்து பானைக்குள் அடைத்துக் கொண்டிருக்கிறார். 91 கவிதைகளும் கதைகளாக மாறும் சாத்தியம் இருப்பதாக நம்புகிறேன. ‘சில்க்கின் கண்களை அணிந்து கொள்ளும் பெண்ணொருத்தி’ காமத்தை மட்டும் வழங்குவதில்லை. பிரபஞ்சத்தின் மீதான அன்பையும் வாரி வழங்குவாள் என்பதை கூறி, செந்தி அவர்களுக்கு எனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
– செ. தமிழ்ராஜ், மதுரை
சில்க்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி
(கவிதை)
ஆசிரியர்: செந்தி
ஆண்டு: 2024
பக்கம்: 144
விலை ரூ.180
வெளியீடு: வேரல் புக்ஸ்



