
எங்கே குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திய ஜனநாயக மாதர் சங்கமும் களத்தில் நிற்கின்றன என பெ.சண்முகம் கூறியுள்ளார்.
“கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட மிக கொடூரமான ‘ஜெம்’ கிரானைட் வீரமணி பாலியல் வன்கொடுமை போக்சோ வழக்கு விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் கண்டிக்கிறார்களா, இல்லையா? என்று அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ ஜெம் வீரமணி மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. 2013-ல் ஜெயலலிதா ஆட்சியிலும், 2025-ல் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை இல்லை எனச் சொல்கிறார்கள். தற்போது அவர் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆட்சிக் காலத்திலும் அவர் மீது புகார் செய்யப்பட்டும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல், அந்தப் பாலியல் குற்றவாளி தப்பித்துவருகிறார் எனும் தகவல்கள் தற்போது வெளியாகிவருகிறது
எனவே தமிழக அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் கடந்த ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் ஆட்சி காலங்களில் புகார் அளிக்கப்பட்டு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அல்லது புகாரைப் பெற்ற சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அன்றைக்கு இருந்த ஆளுங்கட்சி தரப்பில் இருந்து யார் மூலம் அழுத்தம் வந்தது?இவ்வளவு குழந்தைகளைப் பல்வேறு காலக்கட்டங்களில் அழைத்து, இதுபோன்ற பாலியல் குற்றங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறார் என்றால், இது மிகப்பெரிய அளவில் பாலியல் மோசடி நடந்திருப்பதற்கான எடுத்துக்காட்டு. இதில் வீரமணி மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கு வாய்ப்பில்லை.
இதில் சம்பந்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள், அன்று அழுத்தம் கொடுத்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் யார், இதையெல்லாம் மூடி மறைப்பதற்கு யார் யாரெல்லாம் உதவி செய்திருக்கிறார்கள் என்ற கோணத்தில் ஒரு விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விடக் கூடுதலாகத் தலையிட்ட வேறு ஒரு கட்சியைத் தமிழ்நாட்டில் சொல்லுங்கள்? எங்கே குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் களத்தில் இல்லாத ஒரு வழக்கைக்கூட நீங்கள் சுட்டிக்காட்ட முடியாது. அந்த அளவிற்கு உறுதியாகப் போராடியவர்கள் நாங்கள். எனவே இதன் மீது எங்களது கருத்து என்னவென்று அமைச்சர் கேட்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த மாதிரியான விஷயங்கள் மட்டுமல்ல; பெண்கள் மீதான வன்கொடுமைகள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் எதுவாக இருந்தாலும் சமரசமில்லாமல் நாங்கள் போராடி வந்திருக்கிறோம். இந்தப் பிரச்னையிலும் வெறும் வீரமணி என்ற ஒரு நபரோடு இந்த வழக்கைச் சுருக்கிவிடக் கூடாது. இந்த விவகாரம் எந்தெந்தக் காலக்கட்டத்தில் நடந்திருக்கிறதோ, எல்லா காலத்திலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள், இவரோடு சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் விரிவான முறையில் இந்த விசாரணையும் வழக்கும் நடைபெற வேண்டும்” என்று பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.



