
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்குள் அதிகாரப்பூர்வ கருத்து வேறுபாடு வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 3 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தில் மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் கூறும் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையிலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாகத் தங்களது ஆட்சேபனையைப் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் தரவுகளை நிர்வகிக்கும் மென்பொருள் அதிகாரத்தைத் டெல்லியில் இருந்து ஒரே நபர் கட்டுப்படுத்துவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஆங்கில நாளிதழ் வெளியான இந்த தகவல்களை சுட்டிக்காட்டி, திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரில் கோடிக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல்பாட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததோடு, குறிப்பாக மேற்கு வங்கத்தில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இன்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி, எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இன்றியும், அவர்களை இருட்டடிப்பில் வைத்தும், ஒருதலைப்பட்சமாகவும் இரகசியமாகவும் முடிவுகளை எடுத்துவந்துள்ளார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் அவர்கள் புறக்கணிப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது. இந்த வெளிப்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை நிலைகுலையச் செய்துள்ளன.
தேர்தல் ஆணையம் என்பது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். இதன் செயல்பாடுகள் முடிந்தவரை ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை கருத்துகளின் அடிப்படையிலோ தான் அமைய வேண்டும். ஆனால், அதன் மூன்று உறுப்பினர்களில் இருவருக்குத் தெரியாமலேயே ஆணையத்தின் பெயரில் முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதைச் சாதாரண நடைமுறை சார்ந்த விவகாரமாக கடந்துபோக முடியாது. இது இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலாகும். சுயாதீனமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், அரசியல் தலையீடுகள் இன்றியும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஓர் உச்ச அமைப்பின் நம்பகத்தன்மை இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
‘நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்து கூட எங்களுக்குத் தெரியவில்லை. சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் சரிபார்த்து மேற்கொள்ள இஆர்ஓ (ERO) எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் அவர்களால் சேர்க்க முடியவில்லை. அதைச் செய்வதற்கான இஆர்ஓ நெட் (ERONet) வலைதளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது’ என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால், தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதத்திலேயே, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கண்டன பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்தன. அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க எவ்வித உரிமையும் இல்லை. ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். தற்போதைய எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து நிகழ்வுகள் குறித்தும் நேர்மையான மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.



