
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெளிவில்லை என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கு தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வீரமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை காவல்துறை அதிகாரிகள் முடித்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களை இன்று (செப்டம்பர் 25) சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ஜெம் வீரமணி வழக்கில் திமுக ஆட்சி காலத்தில் புகார் அளிக்கப்பட்டு முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு ஏன் மேல் விசாரணை நடத்தப்படவில்லை? அந்த வீடியோ தெளிவாக இல்லை என்று ஒற்றை காரணத்தை சொல்லி இவ்வளவு பெரிய வழக்கை முடித்து வைக்க முடியுமா? அப்படியென்றால் அதற்கான அரசியல் அழுத்தத்தை கொடுத்தது யார்? அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் யார் என்பதற்கு மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எந்த பதிலும் இல்லை.
அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் 2024-ம் ஆண்டே இந்த புகார் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி பிரமுகர் தற்போது அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். 2025-ம் ஆண்டு இந்த வழக்கை முடிப்பதற்கு திமுக ஆட்சி காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டுமே திமுக ஆட்சி காலத்தில் தான். எனவே, இந்த விஷயத்தை மு.க. ஸ்டாலின், அவர் அறிக்கை விட்டு இருப்பதை போல கடந்து சென்றுவிட முடியாது. இதில் எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று கடந்து போவதனால் இந்த பிரச்னையை கடந்து போக முடியாது.
அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் கூட்டாக இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்றுள்ளனர். இந்த விவகாரத்தில் பல கோடிக்கணக்கான ரூபாய் கை மாறப்பட்டு இருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. எனவே, இவ்வழக்கை உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும். காலவரையறையுடன் இதுபோன்ற வழக்குகளில் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்கும், தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும் நீதிபதியின் உத்தரவுதான் காரணமே தவிர தவெக அரசு காரணம் அல்ல” என்று பெ.சண்முகம் தெரிவித்தார்.



