
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இல்லத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்த போராட்டத்தை கைவிட பட்டய பொறியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் இல்லத்தில் 06.10.2026 அன்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் சார்பாக மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர், பட்டய பொறியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசினார்.இதன் அடிப்படையிலும், சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்ததன் அடிப்படையிலும் 06.10.2026 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த கோரிக்கைளை தொடர்பான முறையீடு போராட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளான பட்டய பொறியியல் கல்வி தகுதியுள்ள சாலை ஆய்வாளர்கள் மற்றும் உதவி வரைவாளர் ஆகியோருக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பட்டய பொறியியல் கல்வி தகுதியுள்ள வரை தொழில் அலுவலர், இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பட்டய பொறியியல் கல்வி தகுதியுள்ள சாலைப்பணியாளர்களுக்கு சிப்பு நிகழ்வாக இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய பரிசீலனை செய்திட உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் பொது பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முழுமையாக பணிமாறுதல் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 06.10.2026 அன்று நடத்திட திட்டமிட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களிடம் முறையீடு செய்வது என்ற போராட்டத்தை கைவிடுவது என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



