டிக்கெட் கொடுத்து வெற்றி பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்!

மகளிருக்கான இலவசப் பேருந்து பயண விரிவாக்கத் திட்டமான வெற்றிப் பயண திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

திமுக அரசு ‘விடியல் பயணத் திட்டம்’ என்ற பெயரில் மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த நிலையில், தவெகவின் தேர்தல் வாக்குறுதியின்படி வெற்றி பயணத்திட்டம் விரிவுபடுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டமன்றத்தில் 110- விதியின் கீழ் இத்திட்டத்தை ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்துவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். பெண்களுடன் சேர்ந்து திருநங்கைகளும் இத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லாமல் பயணிக்க முடியும். இத்திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவினம் ஏற்படும் என மதிப்பிட்டுள்ளது. மேலும், இச்சேவை எதிர்காலத்தில் பிற போக்குவரத்துச் சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 2) இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேருந்தில் நேரடியாக ஏறி ஆய்வு செய்த அவர், மின்னணு பயணச்சீட்டு எந்திரம் மூலம் பெண் பயணிகளுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்கி பயணத்தைத் தொடங்கி வைத்தார். அவருக்கு பேருந்தில் இருந்த பெண்கள் சாக்லேட் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்பு சாதாரண நகரப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதிப் பேருந்துகளுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீக்கும் அதிகமான மலைப்பகுதிப் பேருந்துகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தமுள்ள 18,413 அரசுப் பேருந்துகளில் 12,695 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தினமும் இயக்கப்படும் 1,68,500 நடைகள் மூலம் நாளொன்றுக்குச் சுமார் 84.32 லட்சம் பெண்கள் இலவசமாகப் பயணித்து பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *