சாத்தான்குளம் வழிகாட்டிப் பலகையில் இந்தி: பொறியாளர்கள் இருவர் சஸ்பெண்ட்

சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலையில் வழிகாட்டிப் பலகையில் இந்தி எழுதப்பட்டதற்கு பொறியாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ( எண் 93) அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்தி எழுத்துகள் நீக்கப்பட்டு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்று (அக்.2) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *