தவெக அரசுக்கான ஆதரவு தற்காலிகமானது தான்: கே.சுப்பராயன் எம்.பி திட்டவட்டம்

தமிழக வெற்றிக்கழக அரசுக்கு நாங்கள் அளித்துள்ள ஆதரவு தற்காலிகமானது தான் என்று கே.சுப்பராயன் எம்.பி கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பின்னர் தனது பொருளாதாரக் கொள்கை குறித்து தவெக இதுவரை தெளிவாக விளக்கவில்லை. அத்துடன் ஆளுநர் உரையிலும், சமூக பொருளாதார நிலைபாடுகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆளுநரின் உரை, வெற்று ஆவணமாக இருந்தது.

தமிழ்நாட்டில் அந்நிய முதலீடுகள் குறித்து தவெக அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. தமிழக நிதிநிலை அறிக்கையில் தனியார்மயம் தலைதூக்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மின்பற்றாக்குறை காணப்படுகிறது. அத்துடன் மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்குவதாக கூறி தனியாருக்கு அதிக லாபம் வழங்கப்படுகிறது. நாங்கள் தவெக அரசுக்கு அளித்த ஆதரவு கொள்கை அடிப்படையிலானது அல்ல. தமிழக வெற்றிக்கழக அரசுக்கு நாங்கள் அளித்துள்ள ஆதரவு தற்காலிகமானது தான். எப்போதும் இந்த ஆதரவு நீடிக்கும் என்று கூறுவதற்கில்லை.

தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு இடதுசாரி கட்சிகளின் ஆதரவு இல்லை. இந்த தேர்தலில் பணபலமும், அதிகாரபலமும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து பல்வேறு ஆலோசனை கூட்டங் களை நடத்தி, எதிர்கால அரசியல் மற்றும் மக்கள் பிரச்னைகளுக்கான செயல் திட்டங்களை உருவாக்கி வருகின்றன. இந்த ஒற்றுமை ஒரு குறிப்பிட்ட இடைத் தேர்தலை மட்டும் அடிப்படையாக கொண்டது அல்ல. நீண்டகால அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *