
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்ததாக மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் செய்துள்ளனர்.
தாராபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.2) பிரசாரம் செய்தார். அப்போது தவெக வேட்பாளர் சத்யபாமாவை பெட்டி பாமா, பல்டி பாமா எனக் கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன் அந்த உருவத்தை வைத்துக்கொண்டு அவரால் எப்படி பல்டி அடிக்க முடிந்தது என்றும் மு.க.ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது.
அவரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தேர்தல் ஆணையம், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் தவெக வழக்கறிஞர் அணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன பேசுவது என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு பிரசார மேடையில் ஒரு பெண்ணைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறார். இதுதான் அவரின் சொந்த நிலைப்பாடு. மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவரும் மாறிமாறி வீதிகளில் தரம்தாழ்ந்து பேசி வருகின்றனர்.
அதிமுக இன்று எந்த நிலைமையில் இருக்கிறதோ, இன்னும் 2 ஆண்டுகளில் அதே நிலைமைதான் திமுகவுக்கும். தேர்தலில் அவர்களால் வாக்கு சேகரிக்க முடியவில்லை. மு.க. ஸ்டாலினை காட்டியோ உதயநிதியை காட்டியோ செய்த சாதனைகளைக் காட்டியோ திமுகவினரால் வாக்கு கேட்க முடியவில்லை. அதனால், இப்போது வக்கிரத்தை காட்டி வாக்கு கேட்கின்றனர்.
விரக்தியின் உச்சத்தில்தான், தன்னிலையை மறந்து திமுகவினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். மு.க. ஸ்டாலினின் பேச்சுக்கு அனைத்துத் தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.



