
வாழ்வை நிதானமாக எதிர்கொள்கிற மனிதர்கள் அருகிக் கொண்டிருக்கிறார்கள். எதுவாயினும் அடுத்த நொடியில் நடக்க வேண்டும் எனும் விருப்பமும் வேட்கையும் மனித குலத்தை வதைக்கிறது. தன்னுடைய பார்வை எல்லைக்குள் தட்டுப்படுகிற எதனையும் உற்றுக் கவனிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு பருந்துப் பார்வைகூட பார்ப்பதில்லை. நிதானம் தொலைந்த உலகினால் சூழப்பட்ட சமகால வாழ்வில் உறவுகளுக்கு இடையேகூட அன்பின் கண்ணிகள் நெகிழ்ந்து போய்க் கிடக்கின்றன. கணவன் மனைவி உறவுகளில் மெல்லிய கீறல் விழுந்து விட்டால் போதும் அதனை ஒட்டி மேவிட எந்த ஒரு சாத்தியமும் இல்லாமலே போய்விடுகிறது.
இந்த நேச விரிசலின் கதைகள் அப்பாவிற்கும், குழந்தைகளுக்கும் இடையில்கூட இப்படித்தான் நடந்து விடுகிறது. இப்படியே இதன் உறவுச்சிக்கலின் பிரிவுக்கோடுகள் அலுவலகம், பணியிடங்கள் என எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. எல்லை கடந்து ஏன் இப்படிப் பிசகிக் கிடக்கிறது உறவுக்கதை? எந்த மாபெரும் லட்சியத்தை அடைய இந்தப் பெரும் பயணம் என்கிற புரிதலே இல்லை. நோக்கற்ற பயணங்களே நம் காலத்தின் காட்சிகளாக இருக்கிறது. ஒரு பத்து நிமிடம் ஏதோவொரு பெரு நகரத்தின் சாலையோரத்தில் நின்று மனிதர்களைக் கவனியுங்கள்.
உங்களின் பார்வை எல்லைக்குள் மனிதர்கள் என நாம் அறிந்து வைத்திருந்தவர்கள் சட்டென புலப்படுவதில்லை. எல்லோரும் ஒரு மோட்டார் வாகனத்தைச் சுமந்தபடியோ அல்லது மோட்டார் வாகனத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டோ எங்கோ பயணிக்கிறார்கள் என்பது தெரியும். பொழுது புலரும் முன் இந்தப் பெரும் கூட்டம் எங்கிருந்து கிளம்பி போய் எப்போது திரும்பி வரப் போகிறார்கள் என யோசித்துப் பார்த்தால் அதற்கு சட்டென பதில் கிடைத்துவிடும் எனச் சொல்லிவிட முடியாது. ஒருவழிப் பாதையில் நிகழும் இப்பெரும் பயணத்தில் திரும்பவே முடியாத அளவிற்கு திசைகள் குழம்பிக் கிடக்கின்றன.
மனிதர்கள் தான் மனிதனாக வாழ்வதற்கும், மனிதத் தன்மையற்ற மனநிலையை அடைந்து விடாமல் இருப்பதற்கான சகல சாத்தியங்களையும் அவர்களுடைய வாழ்க்கையே அவர்கள் முன் திறந்து வைக்கிறது. இந்த அவசர யுகத்தில் நிதானம் தொலைத்து எதனையும் கண்டும் காணாமலும் கடந்து போகிறோம். மனிதர்கள் சமயங்களில் மேன்மைமிகு தெய்வநிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள். மனிதர்கள் தெய்வமாகிடும் மகத்துவமான இவ்வபூர்வ பொழுதுகளை தமிழில் சிறுகதை எழுத்தாளர்கள் கண்டு சொல்லியிருக்கிறார்கள்.
புதுமைப்பித்தனின் மகா மசானத்தில் வருகிற அந்தக் குழந்தையை தெய்வமாகத்தானே பார்த்திருப்பார் புதுமைப்பித்தன். கு.அழகிரிசாமி கண்டு சொன்ன ராஜா வந்திருக்கிறார் கதையின் தாயம்மா தெய்வந்தானே? இப்படி தமிழ்க்கதைகள் எல்லாம் தெய்வ நிலைக்கு உயர்ந்துவிட்ட மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். எழுத்தாளர் வண்ணதாசனின் ‘வெள்ளம்’ கதையில் வருகிற தினகரியின் அம்மா ஒரு சிறு தெய்வந்தானே? தினகரியின் அம்மாவின் கைவிரலைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் எனும் மனநிலை எனக்கு இந்த நொடியிலும்கூட துளிர் விடுகிறது. எழுத்தாளர் வண்ணதாசனின் அபூர்வமான கதை ‘வெள்ளம்’.
எழுத்தாளர் வண்ணதாசன் கதைகளை எந்த ஒற்றைச் சிமிழுக்குள்ளும் அடைத்துவிட முடியாது. அவருடைய கதைகள் அவரால் மட்டுமே நிகழ்த்திடச் சாத்தியமான அபூர்வமான கணங்களின் தொகுப்புகள். அவரே தன்னுடைய முன்னுரை ஒன்றில் சொல்வதைப் போல “ நான் கதை எழுதினாலும் கவிதை எழுதினாலும் நேற்று வரையிலும் என் கண் முன்னே கடந்து போனவற்றை எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்” என்பதுதான் அவரின் கதைமொழி. ஒருவகையில் அவரைக் கடந்து போன நல்லதையும் கெட்டதையும் கதைகளாக கடத்திவிட வேண்டும். வேறு என்ன இந்த மனிதக் கூட்டத்திற்கு நான் செய்துவிட முடியும் எனும் அவரின் மனதின் குரல் கதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் கேட்டுவிடும்.

இருநூறுக்கும் மேலான சிறுகதைகளையும் வாசித்து முடித்த பிறகு வாசகனுக்குள் ஓடிடும் ஒற்றைவரி அன்பின் வழியது உயர்நிலை என்பதுதான். நமக்கு முன் எதிர்ப்படுகிற பிணத்தில் நாம் கண்டிருந்த ஊர்க்காரின் முக ரேகையை தேடிடும் குணத்தை அவரின் கதைகள் நமக்குள் நிறைக்கின்றன. நாம் தேடிடும் முகவரியர் மரணித்து ஆண்டுகள் பலவாயிருந்த போதும் நானும் நீங்களும் நேசத்திற்குரியவரை அந்தக் கணப் பொழுதில் நினைக்கவே செய்வோம். இதுவெல்லாம் ஏன் நிகழ்கிறது. வாழ்வை உற்றுக் கவனிக்கும் இந்த மனிதாய குணத்தை நமக்குள் கொண்டுவந்து சேர்த்தவை எழுத்தாளர் வண்ணதாசன் தன்னுடைய கதைகளில் நட்டு வைத்திருக்கிற அன்பின் சொற்கள்.
எழுத்தாளர் வண்ணதாசனின் கதைகள் உலக இலக்கியங்கள் யாவும் வரையறை செய்து வைத்திருக்கிற சிறுகதை இலக்கணங்களை எல்லாம் தாண்டிச் செல்பவை. சிறுகதைக்கான புதிய இலக்கணத்தை உருவாக்கியிருக்கிறார் என்றும் மதிப்பிட்டுவிட முடியாது. இலக்கணம் என்றால் அது பலராலும் பயிலப்பட்டு பயன்படுத்தவும் வேண்டும் அல்லவா? அவர் வாழ்க்கையைத்தான் எழுதுகிறார். வாழ்வின் நுன் பொழுதுகளையே கதையென வடிவமைக்கிறார். ஆனால், அவர் எழுதிச் சேர்த்த கதைகளில் ஒன்று போல மற்றொரு கதையை வேறு எவராலும் தமிழில் எழுதிவிட முடியாது. தனித்த தன்மையிலான கதைகள் எழுத்தாளர் வண்ணதாசனின் கதைகள். ‘வெள்ளம்’ கதை வண்ணதாசனுடைய கதைகளிலேயே மிகவும் தனித்தது.
‘வெள்ளம்’ கதையில் கதை சொல்லி நுரைத்து பொங்கிப் பெருகியோடும் வெள்ளத்தில் தன் மகளுடன் நின்றுகொண்டு வெள்ளத்தைப் பார்க்கிறார். ஒன்றை உற்றுக் கவனிக்கிறபோது நம்முடைய மனத்திரையில் நல்லதும் கெட்டதுமாக வாழ்வின் பகுதிகள் தோன்றத்தானே செய்யும்? வெள்ளம் சுழித்து ஓடும் இந்த ஆற்றினை நேற்று பார்த்தவர்கள் எவரும் இப்படி ஆறு சுழித்துப் பெருகி ஓடிய நிலத்தின் போக்கை பார்த்ததில்லை. கதை சொல்லிக்கு மட்டுமல்ல ஆற்றை நித்தமும் எந்தப் பரவசமும் இன்றி கடந்து போன மனிதர்களின் மனதினிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது வெள்ளம்.
கதை சொல்லியின் கையைப் பிடித்துக் கொண்டு பெரும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அவருடைய மகள் அப்பாவிடம் ஒரு கோரிக்கை வைக்கிறாள். “ப்பா வெள்ளம் பார்க்க கட்டாயம் அம்மாவ கூட்டிடட்டு வாங்கப்பா” என்கிறாள். மனதிற்குள் மகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனும் விருப்பம் உடனே உருவாகி விடுகிறது. காய்ந்து வறண்டே கிடந்த ஆற்றோட்டம் நீரால் நிறைந்து ததும்பும் இந்தப் பேரழகை பார்த்த போது இது பாடல் பெற்ற ஆறு என்பது மெய்தான் என்றே தோன்றுகிறது. அவருக்குள் காட்சிகள் மிதக்கின்றன.
தினகரியும், அவளின் அம்மாவும் கதை சொல்லியும் பாந்தமாக ஒருவர் கைவிரலை மற்றவர் பற்றிக்கொண்டு கிராமத்து ஆற்றங்கரையின் குளிரில் தளிர்த்திருந்த காட்சிகள் எல்லாம் அவருக்குள் நிறைகிறது. பேசாம லீவப் போட்டுட்டு வெள்ளப் பெருக்கில் நிற்போம் என்ற அவரின் வேட்கை நிறைவேறவா போகிறது? தினகரி கல்லூரி போக வேண்டும். பரிட்சை வேறு ரொம்ப பக்கத்தில் வந்து விட்டது. பரிட்சை பதட்டத்தை தானே கொண்டுவரும். பிறகு எப்படி அவளால் கல்லூரிக்கு விடுப்பு எடுக்க முடியும்? தினகரியால் கல்லூரிக்கு லீவு போட முடியாதது எவ்வளவு மெய்யோ அப்படித்தான் கதை சொல்லியாலும் அலுவலகத்திற்கு லீவு போட முடியாது. தினகரியை கல்லூரியில் விட்டுவிட்டு அலுவலகம் போகிறார் தினகரியின் அப்பா.
வெள்ளத்தால் நிறைந்திருந்த கதை சொல்லியின் மனம் வெள்ளப் பகுதியிலிருந்து வெளியேற வெளியேற தடுமாறுகிறது. ஆற்றின் துளிகள் அவருடைய இருசக்கர வாகனத்தில் ஒட்டியபடி அவருடனேதான் பயணித்தது. சூழலில் மிதந்த குளிர் காற்றில் நிறைந்திருந்த ஈரப்பதத்தில் காற்றின் துளிகள் இருப்பது அவரின் உடலின் சுளீர் சிலிர்ப்பிற்குள் பதுங்கியிருந்தது. கதையை வாசித்துக் கொண்டிருக்கும் எல்லோருக்குள்ளும் வெள்ளம் சுழித்து ஓடுவதை எழுத்தாளரின் கதைச் சொற்கள்தான் கொண்டுவந்து சேர்த்தது. குளிர்ச்சியும்,நெகிழ்ச்சியும் இறுக்கமும் சூழ்ந்திருக்கும் அந்த முரட்டுக் கட்டிடத்திற்குள் நுழைந்த மறுநொடியில் காணாமல் போகிறது.

இன்று அவர் அலுவலகம் வந்திருக்கக்கூடாது. லீவு போட்டு வீட்டிற்கு போயிருக்க வேண்டும். மனைவியையும் மகள் தினகரியையும் அழைத்துக் கொண்டு பாலத்தின் நடுவில் நின்று கொண்டு பாலத்தின் இரு புறங்களிலும் சுழித்துப் பெருகிப் பாயும் வெள்ளத்தின் குளிர்ச்சியை துளித் துளியாக அனுபவித்திருக்க வேண்டும். எத்தனை வேண்டும்களை நம்முடைய வாழ்வின் அன்றாடங்களின் அலுப்பில் தொலைத்திருக்கிறோம் என்பதை நினைத்து நினைத்துப் பார்க்கிறார் எழுத்தாளர். கூடாதுகளால் காணாமல் போன வேண்டும்களின் பட்டியல் மிக நீண்டதது மட்டுமல்ல. தனித்தனியானது. கதையின் இந்தப் பகுதி நமக்குள் கடக்கும் போது நீங்களும் நானும் லாழ்வின் வசீகரப் பக்கங்களை தொலைத்துவிட்டு வெறுமையில் நம்மை உழலச் செய்யும் அன்றாடங்களை பழிக்கிறோம்.
நாம் எத்தனை கூடாதுகளை விரும்பாமலே நிர்பந்தத்தின் பேரால் திரும்ப திரும்ப செய்து கொண்டேயிருக்கிறோம். அன்றாடங்கள் நம்முடடைய வாழ்வின் எத்தனை வசீகரங்களைகக் காணாமல் ஆக்கியிருக்கிறது என்பதுவும் காற்றாட்டு வெள்ளம் போல கரை புரண்டு ஓடுகிறது. விரும்பாமலே இறுகிக்கிடக்கும் அலுவலக அலுப்பையும் கடந்து “ப்பா.. அம்மாவ எப்படியாவது வெள்ளத்தைக் காட்ட கூட்டிடட்டு போங்கப்பா” எனும் குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.
தினகரியின் அம்மாவைப் போலவே குடும்பம் கட்டி வைத்திருக்கும் வீடெனும் பெரும் கூட்டை நத்தையைப் போல சுமந்து கொண்டிருக்கும் பெண்களின் முகங்களும் அவார்களின் அன்றாடங்களும் நகர்கிறது. “குறுக்குத்துறை முன்னடித்துறையில் பித்தளைக் குடத்துடன் படியேறும் முகம், குடையும் வைத்துக்கொண்டு நனைந்தும் வந்துகொண்டு இருந்த முகம், கட்டுமானம் ஆகிக்கொண்டிருக்கிற கட்டிடடத்துறைக்குள்ளேயே தலையில் வைத்த துணிச்சுருளையும், பாண்டுச்சட்டியும், சிமெட்டிப் பாலுமாக நிற்கிற முகம்”…இப்பிடி எத்தனை முகஙகளை அன்றாடத்தின் அலுப்புப் பொழுதிற்குள் தொலைத்திருக்கிறோம் என்பதை வாசகனுக்குள் கடத்துகிறது கதை.
ஆனாலும் அந்தந்த பொழுதின் அழகினை முகங்கள் நிறைத்தே வைத்திருக்கிறது. தினகரியின் அம்மாவின் முகமும்கூட பேரழகுதான் என்று வியந்தேபடியே வீட்டை நோக்கிப் போகிறார். பாலத்தைக் கடக்கும் போது ஊரே கும்மிருட்டு சூழ இருந்த பொழுதில் குடையைப் பிடித்தபடி தினகரியும் அவளுடைய அம்மாவும் நட்ட நடு பாலத்தில் நின்று வெள்ளப் பெருக்கை ரசிப்பது போலான சித்திரம் அவருக்குள் திரள்கிறது. மெய்யை விட கற்பனைகள் எப்போதும் வசீகரமானவையே. கற்பனைச் சித்திரத்தை நெஞ்சாங்கூட்டில் நிறைத்துக்கு கொண்டு வீடு நோக்கிப் போகிறார். இருள் சூழ்ந்திருக்கும் வீட்டின் வாசலில் தலை துவட்டும் துண்டுடடன் வந்த அவருடைய மனைவியைப் பார்த்ததும் மனம் குமைகிறது. என்ன பெரிய பொல்லாத. வேலை நிச்சயம் மனைவியை வெள்ளம் பார்க்க அழைத்துப் போயிருக்க வேண்டும் என உருகி உள்ளுக்குள் மருகிறார். வீட்டிற்குள் சின்ன சின்ன குரல்கள் வெளிப்படுவதை தினகரியின் அப்பா அப்போதுதான் பார்க்கிறார்.
சுடர்விடும் மண்ணெண்ணெய் விளக்கின் ஒற்றை ஒளியின் நிழலில் ஒரு குழந்தை சுருண்டு படுத்திருக்கிறது. சட்டென ஆணும், பெண்ணுமாக எழுந்து நின்று பலரும் அவரை கும்பிடுகிறார்கள். அவர்களில் எவரையும் இவருக்குத் தெரியாது. அவருடைய மனைவிக்கும்தான் நிச்சயமாகத் தெரிந்திருக்காது. தினகரியின் அம்மாவான கதை சொல்லியின் மனைவியே அவருக்குச் சூழலை விளக்குகிறாள். “அறுபது எழுபது வருசத்துக்குள்ள இப்பிடியொரு பேய்மழைய இவுங்க மட்டுமில்ல நாமளும்தான் நம்ம வாழ்க்கையில பார்த்ததே கிடையாதுல்ல. மொத்த வாழ்க்கையையே சுருட்டி எடுத்துட்டு போயிருச்சு வெள்ளம். பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, மண்டபம்னு வகையில்லாத பெரும்கூட்டம் நிறைஞ்சு வழியுது. தெரிஞ்சவங்களோ, தெரியாதவங்களோ நம்மளால வேறு என்ன பண்ணமுடியப்போகுது. அந்தப் பச்சைப் பிள்ளையாவது படுத்துக்கிடட்டும்னு நாந்தான் இங்க இவுங்களப் பூராம் கூட்டியாந்தேன்” என்கிறாள். இதைச் சொல்லும்போது தினகரியைத் தன்னோடு அணைத்துக் கொண்டு நின்றாள்.
காலையில் வசீகரமும் கொண்டாட்டமுமாக இருந்த ஆற்றுப் பெருவெள்ளம் சட்டென துக்கப்பெரு வெள்ளமாக உருமாறிப் போனதே இதுதானே வாழ்க்கை நிகழ்த்தும் அபத்தம். இது கதை வாசகனுக்குள் கடத்திடும் உணர்வு.
இந்தக் கதையின் கடைசிவரி எற்படுத்திடும் பெரும் பரவசத்தையும்,மகிழ்ச்சியையும் எந்தக் காப்பிய வாசிப்பும் கொண்டு வந்து சேர்க்காது. வெள்ளத்தைப் பாலத்தின் அடியில்தான் பார்க்கவேண்டுமா என்ன? அவ்வளவுதாம் கதை..இதுதான் எழுத்தாளர் வண்ணதாசனை அன்பின் நேசராக்கிய சொற்றொடர்.
-ம.மணிமாறன் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF% இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



