
நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு பொறியாளர்களை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பட்டய பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு கடந்த 2025- 2026-ல் மத்திய அரசு நிதியில் இருந்து மாநில நெடுஞ்சாலையான ஆழ்வார் திருநகரி, நாசரேத், சாத்தான்குளம், இட்டமொழி, வள்ளியூர் சாலை கி.மீ 15/6-16/4 மற்றும் 16/6-19/8 வரையிலான சாலையை மேம்படுத்துதல் மேலும் கி.மீ 16/8(ம)16/10-ல் பெட்டி பாலம் கட்டுதல் என மொத்தப்பணிக்கு ரூ.456 லட்சம் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இப்பணிகள் செய்வதற்கு தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டு , அதில் ஒரு பகுதியாக வைக்கப்பட்ட ஊர் பெயர் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி இருப்பதாகச் சொல்லி உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் தமிழக அரசு செய்திருப்பது ஏற்புடையதல்ல என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
பொறியாளர்களுக்கு வழிகாட்டக்கூடிய வழிகாட்டு நெறிமுறையில் மத்தியஅரசின் நிதியில் தமிழ்நாட்டில் செய்யப்படுகின்ற சாலைப்பணிகளுக்கு இடம் பெறுகின்ற ஊர் பெயர் பலகையில் இரு மொழிகளில் இருக்க வேண்டுமா அல்லது மூன்று மொழிகளில் இருக்க வேண்டுமா என்று தெளிவுப்படுத்தப்படவில்லை என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இது சம்பந்தமான தெளிவான வழிகாட்டுதல் தமிழக அரசு கொள்கை ரீதியாக வெளியிட வேண்டும்.
இந்த சூழ்நிலையில் மேற்கண்ட பணியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி அறிவிப்பு பலகையில் இடம் பெற்றுள்ளதை தெரிந்தவுடன் இந்தி மொழி நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளிவந்தவுடன் சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் எந்த விளக்கமும் கேட்காமல் தற்காலிக பணியிடை நீக்கம் தமிழக அரசு செய்திருப்பது வேதனையான நடவடிக்கையாகும். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் விளக்கம் கேட்டு அதில் ஏதாவது உள்நோக்கம் பொறியாளர்களுக்கு இருந்தது தெரிய வந்தால் உரிய துறைரீதியான நடவடிக்கை எடுப்பது தான் விதிமுறையாகும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



