
சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச் சென்றவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும், திமுக பிரமுகருமானவர் ‘பாத்ரூம்’ முருகன். இவர், கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் காரில் கடத்தப்பட்டார். ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் கணக்கு வழக்கு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கில் முருகனின் கார் ஓட்டுநர் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் அனைவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர். இந்நிலையில், முருகனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன், இன்று (அக்டோபர் 6) காலை தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் – நத்தம் நெடுஞ்சாலை, நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடுவதற்காக அவர் சென்றார் என்று கூறப்படுகிறது.
அப்போது அவரை வாகனத்தில் வந்து வழிமறித்த மர்ம கும்பல், வீரபத்திரனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ந்தத் தாக்குதலில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த வீரபத்திரனின் மனைவி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட காவல் துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸார், வீரபத்திரனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், புறநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது கொலையாளிகள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் சிக்கியது. அதை பறிமுதல் செய்த போலீஸார், அதிலிருந்த பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
திமுக பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



