
(நேரிசை ஆசிரியப்பா)ஃபிராங்க்ஃபர்ட் சென்றான் பேரறி வாலன்
நிராதரவாய் அங்கு நின்றனன் அவனும்
கேட்டனன் உதவிகள் கிளர்ச்சி செய்து
வாட்டம் கொண்ட வர்க்கத் தோழருக்கே!
கிடைக்க வில்லையே உதவி அங்கே
நடையைக் கட்டினான் நகர்பா ரிஸுக்கு
வரவேற் பில்லை மார்க்ஸுக்கு அங்கே
அரசியல் நிலைமை நன்றா யில்லை
“வெளியே போகணும் விரைவில் அல்லது
பலியாய் ஆகணும் பாழும் காலரா
நோய்க்”கென அரசு நொந்து கொண்டுதான்
வாய்விட்டுச் சொன்னது மார்க்ஸை நோக்கி
ஆகஸ்ட் மாதம் அறிஞன் சென்றான்
சோகத் தோடு லண்டன் நகரம்
அடுத்த மாதம் அங்கே வந்தாள்
நடுக்கத் தோடு நங்கை ஜென்னி
வறுமையின் கரங்கள் வாவென அழைத்தன
இறந்திடும் வரையிலும் இருந்திடு இவணென
நவம்பர் ஐந்தில் நன்றாக ஜென்னியும்
தவம்செய் யாமல் தானொரு மகவீன்றாள்
‘செல்சி’ என்ற செல்வர் வாழிடத்தில்
இல்லம் வைத்தான் இன்னலைப் பழித்து
கிரேட்விண்டு மில்தெருவில் கீழ்த்தட்டு மக்கள்
ஒரேயொரு அமைப்பின்கீழ் ஒன்று பட்டனர்.
அறிவுத் தம்பட்டம் காரலும் அடித்தான்
அறிவினில் குறைந்த அன்பரை இகழ்ந்தான்
கற்பிக்கும் வேலையில் கவனம் கொண்டான்
அற்பணிப் புணர்வுடன் அதனைச் செய்தான்
அகதி மக்கள்மேல் அன்பைக் கொட்டினான்
சகதி மத்தியிலே தங்கி வசித்தான்
கிரேட்விண்டு மில்தெருவில் நாளுமொரு கூட்டம்
கறாராய்க் கூட்டினான் அறிஞன் மார்க்ஸும்
புதியதோர் இதழை*ப் புத்திமான் தொடங்கினான்
அதிற்பல கருத்துசொன்னான் அற்புதமாய்!
ஆனாலும் தோற்றது விரைவில் அவ்விதழே!
*நியூ ரைனிஷே சைடுங்-அரசியல் பொருளாதார- ஆய்வு
(1850 மார்ச் முதல் நவம்பர் வரை- மாத இதழ்கள் 6 மட்டும்)
1850(அரையடி வெண்டளை விருத்தம்)
2)வாழ்வில் ஒருநாள் நடந்ததிது
வறுமை பிடுங்கியே தின்னுகின்ற
ஏழ்மை நிலையில் பிறந்திருந்த
எழில்மிகு பிள்ளை பசித்தழுக
பால்வாங் கிடவும் வசதியில்லை
பசியில் குழந்தை துடித்ததங்கே
பால்தாய் கொடுத்திட்ட போதினிலே
பாழும் குருதியும் வந்ததுவே
3)வீட்டுக் குரியவள் வாடகைதான்
வேண்டு மெனச்சொல்லி வந்துநின்றாள்
வாட்டும் வறுமையில் ஜென்னியெதை
வைத்துக் கொடுப்பாளோ வாடகைதான்?
வீட்டிற் கமீனாவைக் கூட்டிவந்தாள்
வீட்டுக் குரியவள் அப்பொழுதே
வீட்டிலே அந்நேரம் மார்க்ஸுமில்லை
வெட்கித்தான் ஜென்னி தலைகுனிந்தாள்
4)எடுத்தனர் ஜப்தி நடவடிக்கை
எல்லாப் பொருட்களின் மீதிலுமே
உடுத்தும் துணிமணி தொட்டிலுடன்
ஓய்ந்து படுத்திடும் கட்டிலையும்;
தடுத்தும் விடவில்லை பொம்மையையும்;
தாங்கிடு வாரோ குழந்தைகளும்?
படுத்துக் கிடந்தனர் ஜென்னியுடன்
பலகையில் பச்சிளம் பாலகரும்

5)உதவிகள் தேடி அலைந்தநண்பன்*
உடலில் அடிபட்டு வீடுவந்தான்
அதுவரை ரொட்டி, மருந்து,கறி
ஆகிய வைதந்தோர் பாக்கிகேட்டார்
பதைத்திட்ட ஜென்னி படுக்கைகளைப்
பட்டென விற்றுக் கடனடைத்தாள்
இதயத்தில் சற்றும் இரக்கமின்றி
இல்லம் தரவில்லை ஆங்கிருந்தோர்
6)ஜென்னியும் காரலும் கொஞ்சகாலம்
ஜெர்மன் விடுதியில் தங்கினரே!
அன்னிய நாட்டில் அகதிகளாய்
அவர்பட்ட துன்பம் சிறிதில்லையே!
இன்னல்கள் எத்தனை வந்தபோதும்
இணையர்கள் அன்புடன் வாழ்ந்தனரே!
உண்ண உணவின்றிப் போனபோதும்
உள்ளத்தில் அன்பு குறையலையே!
*கண்ராடு ஷ்ராம்
-மனோந்திரா (தொடரும்)
இந்த கவிதைத் தொடரைப் படிக்கhttps://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.



