எத்தனை குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்குத்திருட்டு, எஸ்ஐஆர் மோசடிக்கு எதிராகவும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரியும் டெல்லி ஜந்தர் மந்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், அவர்கள் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனை மீறி சிஜேபி செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ், நிர்வாகிகள் அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஸிண்டே ஆகியோர் தடையை மீறி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் நுழைந்து முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஆகியோர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவை 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த அரசாங்கத்தால் எத்தனை போராட்டக்காரர்களைக் கைது செய்ய முடியும்? எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்? அவர்கள் எவ்வளவு இளைஞர்களை சிறையில் அடைக்கிறார்களோ, அவ்வளவுக்கும் எந்தவொரு அரசியல் சார்பும் இல்லாத சாதாரண குடிமக்களும் வீதிக்கு வந்து, மக்களின் உண்மையான சக்தியை அவர்களுக்குக் காட்டுவார்கள். அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோருக்கு எங்கள் ஆதரவு. அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்டப் பிரதிநிதித்துவத்தையும் ஆதரவையும் வழங்க திமுக தயாராக உள்ளது.”என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *