தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ராஷ்டிரிய சுயம்சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஆர்எஸ்எஸ் நிறுவன நாளை முன்னிட்டு பேரணி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டிஜிபியிடம் விண்ணப்பித்தேன். அக்டோபர் 18, 25, நவம்பர் 1 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும் என்று அளித்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு இன்று (அக்.14) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி , ‘ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அனுமதி மறுக்கப்படுகிறது’ என்று கூறினார்.

காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன், ‘அனுமதி கோரி 21 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அக்டோபர் 3-ம் தேதி தான் விண்ணப்பிக்கப்பட்டது. அதுபோன்று ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கும் வழித்தடம் அனுமதி அளிக்க முடியாத பகுதியாக உள்ளது. விழா காலத்தில் அனுமதி அளித்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன்,“ ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. ஆனாலும் அனுமதி மறுக்கப்படுவது ஏன்? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு திராவிடர் கழகம், திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.

தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் காஷ்மீரிலேயே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படும் போது அமைதி பூங்கா என்று சொல்லப்படும் தமிழ்நாட்டில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? அனுமதியை மறுத்து தேவையற்ற விளம்பரத்தை அரசு ஏற்படுத்தித் தருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று மனுதாரருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் இந்த வழக்கை அக். 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *