
மனித வாழ்வின் நிறைவு எதனுள் உறைந்திருக்கிறது. காதலாகிக் கசிந்துருகிடும் இணையர்கள் அமைந்துவிட்டால் போதும்தானே?. “நாங்கள் ஒரூவரையொருவர் புரிந்து கொண்டிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையேயான நேசம் ஒப்பில்லாதது. அதனை இந்த உலகத்தில் எவருக்கும் நிருபித்துக் கொண்டேயிருக்க வேண்டிய அவசியமில்லை”. இப்படி சட்டென வெளிப்படையாக சொன்ன போதும் மனிதர்கள் “ஆமாப்பா அவிங்க ரெண்டு பேரும் சரியான ஜோடிப்பா” எனச் சொல்வதில்லை. அப்படி ஏற்றுக் கொள்வதற்கும், ஒத்துக் கொள்வதற்கும் அவர்களுக்கு ஒரு அடையாளம் தேவைப்படுகிறது.
குழந்தைகள்தான் நிறைவாழ்வின் அடையாளம் என்று இந்த உலகம் நம்புகிறது. குழந்தையின்மை இன்றைக்கு பெரும் குறையாக உலகத்தாரால் எதிர்கொள்ளப்படுகிறது. அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் மருத்துவ மாஃபியாக்களின் சூழ்ச்சி வலைகளை எல்லாம் விவரித்துப் பேசவேண்டும். குழந்தையின்மை சிதைத்த மனித வாழ்வின் துயரம் இயல்பானதில்லை. அது சுற்றத்தால் நிகழ்த்தப்படும் பெரும் துயரம். இல்வாழ்வின் மதிப்பினை குழந்தைப் பேற்றில்தான் கட்டி வைத்திருக்கிறது உலகம். எதிர்ப்படும் இளஞ்ஜோடிகள் எதிர்கொள்ளும் முதல் சொல் ஏதாவது விசேஷமா என்பதுதான். எத்தனையாவது மாசம். அப்பிடியா. கல்யாணம் ஆகி ரொம்ப நாளு ஆகிப் போச்சில்ல. எனத் தொடர்கிற உரையாடல் எட்டித் தொடுகிற இடம் கடைசியில் இப்படித்தான் முடிகிறது. , “பேசாம ஏன் நீங்க டாக்டர பார்க்கக்கூடாது.” அப்படித் தொடரும் உரையாடல்களின் நோக்கம் கருணையில் கசிந்துருகிடும் துடிச்செயல் அல்ல. மாறாக மற்றவர்களின் இயலாமையின் மீது கல்லெறிகிற குரூர மனதின் வெளிப்பாடு.
பிறரின் உலகத்திற்குள் துளி தயக்கம்கூட இன்றி நுழைந்து கருத்துச் சொல்கிற பேர்வழிகளை அந்த தம்பதியர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? அறிவுரை எனும் பெயரில் நிகழ்த்தப்படுகிற சொற்களால் கட்டப்பட்ட வன்முறைகளின் கதைகளை அவர்களே சொல்லத் துவங்கினால் என்ன ஆகும்? மனம் குமைந்து இடம் பெயர்ந்து காததூரம் வந்தாலும் விடாது தொடரும் கருணைபோல தோற்றமளிக்கும் இழிசொல் மலைகளில் இருந்து எப்படித்தான் தப்பிப்பது என வாழ்வின் கடைசி நொடி வரையிலும் துடித்துக் கொண்டிருந்த மனிதகளின் கதை மிக மிக தனித்தது. அப்படியான தனித்த கதையே ‘தெற்கு ஜன்னல்’.

‘தெற்கு ஜன்னல்’ எழுத்தாளர் ந.சிவநேசனின் முதல் சிறுகதைத் தொகுப்பின் தலைக்கதை. கவிஞராக தமிழின் முன்னணி இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறார் சிவநேசன்.‘தெற்கு ஜன்னல்’ சமீபத்தில் அவர் எழுதிச்சேர்த்து வெளிவந்திருக்கும் தேர்ந்த சிறுகதைத் தொகுப்பு. கதைகளுக்கான கச்சாப் பொருளை மனிதர்கள் தங்களுடைய வாழ்வில் இருந்தும்,தன்னையே போலான மனிதர்களின் வாழ்வில் இருந்தும்தான் எடுத்துக் கொள்கிறார்கள். மனித வாழ்வென்பது துக்கங்களின் தொட்டிலாகிப் போனால் என்னவெல்லாம் ஆகும் என்பதை வாசித்துக் கடப்பது பெரும் மனப் பயிற்சிதான். அப்படியான மனப்பயிற்சிக்கான மூலகமே சிவநேசன் எழுதியிருக்கும் ‘தெற்கு ஜன்னல்’ எனும் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் யாவும். அதிலும் தொகுப்பின் தலைக்கதையான ‘தெற்கு ஜன்னல்’ தமிழ்ச் சிறுகதைகளில் தனித்த கதையாக வடிவம் பெற்றிருக்கிறது.
ஒரு கச்சிதமான சிறுகதையின் துவக்கம் இப்படித்தான் இருக்க வேண்டும். கதையை லாசகனுக்குள் கடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் கதைசொல்லி பெறாக்கு பார்ப்பதில் பெரும் விருப்பம் கொண்ட மனிதன். அதனைக் கச்சிதமாகச் சொல்ல ஒரேவழி என்ன?. பட்டப் பகலில்கூட வானத்தை அன்னாந்து வெறித்துப் பார்த்தபடி நடந்திடும் வழக்கம் கொண்டவர் என்று எழுதுகிறார். இரவில் நட்சத்திரங்களையோ அல்லது நிலாவையோ பார்ப்பது இயல்பு. கதை சொல்பவர் இயல்பானவரில்லை என இதைவிடக் கச்சிதமாகசொல்லிவிட முடியாது. உயரே வெகுதூரத்தில் கருப்பாக பறப்பது காக்கை என்று நினைத்தால் அது கருப்பு நெகிழிக் காகிதம். அடுத்த நொடியில் அவர் மனம் ஏன் கருப்பு நெகிழிக் கவர்களை கோழி இறைச்சிக்கும், பெண்களின் மாதவிடாய் காலத்து பேடுக்கும் பயன்படுத்துகிறார்கள் எனும் புள்ளி நோக்கி நகர்கிறது.
கதைசொல்லி வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பவர் மட்டுமல்ல. கூடுதலாக பார்த்த விஷயங்கள் குறித்த கவலையும் அக்கறையும் கொள்பவர் என வாசகனுக்குச் சொல்கிறார் எழுத்தாளர். அப்போதுதான் வாசகர்கள் கதைக்குள் நகரும் அடுத்தடுத்த காட்சிகளில் தங்களின் மனதை இலகுவாக ஒப்புக் கொடுப்பார்கள். குடும்பத்தை குழந்தைகளை தனியே தொலைதுரம் விட்டுவிட்டு தனித்தொதுங்கி கிடக்கும் மனிதர்களால் என்ன செய்துவிட முடியும். தனிமைத் துயர் அகற்றிட இருக்கும் ஒற்றைவழி சுற்றி வேடிக்கை பார்ப்பதுததான். அப்படி இந்த மனிதன் தன்னுடைய அறையின் தெற்கு ஜன்னலைத் திறந்து எப்போதும் வியந்து பார்க்கும் எதிர்வீட்டு மனிதர்களின் கதையை வாசகருக்காக திறக்கிறார். இறுகிக் கிடந்த. தெற்கு ஜன்னல் திறந்ததும் கதை சொல்லிக்கு கைவசமாவது குளிர்ந்த காற்று மட்டுமல்ல. அங்கு வசிக்கும் முதியவர்களின் தனித்த வாழ்வும்தான்.
இத்தனை வயது கடந்தபிறகும் இப்படி அபூர்வமாக நேசம் கொள்ளும் கணவன், மனைவியைக் காணும் போதெல்லாம் எப்படியும் பணி மாறுதல் கிடைத்து வந்துவிடுவான் என நினைத்தே நாட்களை துளித் துளியாக நகர்த்தும் கதை சொல்லியின்மனைவி முகமே இவருக்குள் விரிகிறது. வேறு என்ன செய்துவிட முடியும் மனிதர்களால். விஞ்ஞானத்தின் துணைகொண்டு வீடியோ காலில் மனைவி குழந்தைகளுடன் பேசுவதைத் தவிர அவரால் ஒன்றும் செய்துவிட முடிவதில்லை. மனிதர்கள் தங்களுடைய தனித்த செயலால் பிறரை வசீகரிப்பதும் அல்லது புறந்தள்ளுவதும் நடக்கவே செய்கிறது. எதிர்வீட்டில் வசிக்கும் மூர்த்தி மற்றும் மித்ரா தம்பதியர்களின் தனித்த கதையே தெற்கு ஜன்னலைத் திறந்தபோது கதைசொல்லிக்கு கைவசமாகிறது. அதனையே வாசகருடன் பகிர்கிறார் எழுத்தாளர்.
மூர்த்தியும்,மித்ராவும் ஆதர்ச தம்பதியர். இருவரும் தங்கியிருக்கும் இந்த வீட்டின் உரிமையாளர்களும் அவர்களே. நாற்பது ஐம்பது லட்சம் பெறுமான வீட்டில் அவர்கள் தனித்து இருக்கிறார்கள். நல்ல மாதச் சம்பளம் பெற்று வாழ்ந்தவர்கள். பணி ஓய்விற்குப்பின் தனித்து தொலைதூரத்தில் இருந்து இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள்.அன்பினால் நிறைந்த அவர்களுடைய வாழ்வின் ஒரே ஓரு சிறுகுறை அவர்களுக்கு குழந்தை இல்லை என்பது மட்டுமே. இந்த வீட்டிற்கு அவர்கள் தங்களுடைய பூர்வீக நகரத்தில் இருந்து ஏன் வந்தார்கள் தெரியுமா? அவர்களைத் துரத்தும் போலிக் கருணையால் கட்டப்பட்ட சொற்களை எதிர்கொள்ள அச்சப்பட்டுத்தான். இங்கு வந்த பிறகும்கூட அந்த வன்முறைகள் சூழ்ந்த வலைக்குகுள் சிக்கிடாது தப்பித்துக்கொள்ள அவர்கள் உருவாக்கிய தந்திரம்தான் தங்களுக்குள் சுருங்கி ஒடுங்கிக்கொள்வது.
அந்தக் குடியிருப்புப் பகுதியில் யாரோடும் அவர்கள் பேசுவதேயில்லை. பேசினாலே அவர்களுடைய உரையாடலின் பகுதிகள் அவர்களின் குறைபாட்டைச் சுற்றியே வட்டமிடும்.என்பதால் அவர்கள் மனிதர்களை எதிர்கொள்வதில்லை. நம்மைச் சுற்றியும் இருக்கும் மனிதர்களில் பலரும் நாய்களோடும் பூனைகளோடும் பெருத்த நேசம் கொண்டு இருப்பதற்கான உளவியல் இதுவாகத்தான் இருக்குமோ என இந்தக் கதையை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. மனிதர்கள் உருவாக்கும் உளவியல் சிக்கல்களில் இருந்து தப்பித்துக்கொள்ளும் தனித்த உத்தியே தாவரங்கள் செடி கொடிகளின் மீது பாசம் கொண்டு அவற்றைப் பராமரிப்பதில் தன்னைக் கரைத்துக் கொள்ளும் மனிதர்களின் தன்மையும். தெற்கு ஜன்னல் திறந்து அந்த வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் வீட்டைப் பராமரிப்பதும் செடிகள் மரங்களோடு நேசம் கொண்டு இருப்பதும் கதை சொல்லிக்கு வசீகரமான செயலாகவே பட்டிருக்கிறது.
அவரோடு பேச வேண்டும் நெருக்கமாக பழக வேண்டும் என கதைசொல்லி நினைக்கும் அடுத்த நொடியில் அவருக்கு அந்தத் தெரு உபதேசம் செய்திருக்கிறது. “தம்பி மறந்தும் அந்த ஆளோட பேசிராத, வேறு வழியில்லாம பேச வேண்டிய சந்தர்ப்பம் வந்தா குழந்தமை பற்றி மட்டும் பேசவே பேசிராத. இங்கு அதை அவர்ட்ட இரக்கமா கேட்டாலும், ,அன்பா கேட்டாலும் ,கருணையா கேட்டாலும் சட்டென கதவைச் சாத்தி போ மேன் வெளிய என கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிருவாரு. பார்த்து கவனமா இருங்க.” என்கிறார்கள். வாழ்க்கை என்ன நாம் விரும்பும் திசைவழியிலா பயணிக்கும். மூர்த்தி சாரோடு அந்த தெருவில் நெருக்கமா இருப்பது இந்த தம்பி மட்டும்தான் என தெருவே ஆச்சர்யம் கொள்ளும் வகையில் இருவருக்குமான சந்திப்பினை தற்செயலாக காலமே நிகழ்த்தி வைக்கிறது.
மூர்த்திக்கும், கதைசொல்லிக்கும் இடையே நடக்கும் சந்திப்புகளின் பொழுதுகளே இந்தக் கதையை அபூர்வமானதாக உருமாற்றுகிறது. கவனமாக இருக்கிறார் கதை சொல்லி. ஆனால் மூர்த்தி தன்னுடைய மனதின் பக்கத்தை லகுவாக திறக்கிறார். “தம்பி கோபம் ,ஆத்திரம் ,வசவு இதுவெல்லாம் உங்களுக்கு எரிச்சலுட்டும் விஷயமாக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை கோபத்தோடு நம்மை யாராவுது திட்டினால்கூட நான் அதை எளிதாக கடந்துவிடுவேன். ஆனால், அய்யோ பாவம் என நம்மீது யாராவது பரிதாபம் கொண்டு பேசினால் என்னால் தாங்கவே முடியாது. உலகத்திலேயே மிகப்பெரிய வன்முறை எது தெரியுமா?? அடுத்த மனிதர்களைப் பார்த்து பச்சாத்தாபப்படுவது, அய்யோ பாவம்சார் நீங்க என பரிதாபம் கொள்வது. அவர்கள் ஏதோ கருணை வடிவிலானவர்கள் நாங்கள் என்பதை நிரூபணம் செய்யவே இந்த வித்தையை நிகழ்த்துகிறார்கள். நிஜத்தில் ஒரு மனிதனின் இயலாமையின்மீது எறியப்படுகிற கருணைக்கல் ஏற்படுத்துகிற மனக்காயம் எவ்வளவு கொடூரமானது தெரியுமா?” என்கிறார்.
மிதமான போதையில் இருவரும் இருக்கும் பொழுதுகள் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாய்க்கிறது. அப்போதெல்லாம் மூர்த்தியே பேசுகிறார். நித்தமும் பேசிக் கொள்கிறவர்களாக இருவரும் மாறிப் போகிறார்கள். காலம் நிகழ்த்துகிற பகடையாட்டத்தில் வெட்டித் தள்ளப்படும் காய்கள் மனிதர்கள்தானே. மித்ரா இறந்து போகிறார். துக்கத்த்தை வெளிப்படுத்தாமல் மனச் சிறைக்குள் பத்திரப்படுத்தி வைப்பதற்கு பெரும் மனப்பயிற்சி தேவை. மூர்த்தி தன்னுடைய நேசத்திற்குரியவளின் மரணத்திற்குக்கூட குலுங்கி அழவில்லை. ஒருவேளை யாருமற்ற நேரத்தில் பூட்டிய வீட்டிற்குள் கதறி துடித்தாரோ என்னவோ?
அதன்பிறகு இருவருக்குமான சந்திப்புகள் குறைந்து போகிறது. பேசக் கிடைத்த சந்தர்ப்த்தில் எல்லாமே அவருடைய மனைவியைக் குறித்தே பேசுகிறார். “தம்பி ரெண்டு பேருமே படிச்சிருக்கோம்,நல்ல வேளையில இருந்தோம். விவரமில்லாமலா இருந்திருப்போம். டாக்டர பார்த்து மருத்துவ ரீதியிலான முயற்சிகள செய்யாமலா இருந்திருப்போம். ஆனா போகிற இடத்தில் எல்லாம் எங்களைத் துரத்தின அய்யோ பாவம் என்கிற பரிதாபச்சொல் கடைசிவரையிலும் எங்களை விடவேயில்லை. உங்களூக்கே தெரியும். நானும் அவளும் இந்த வீட்டையும் செடிகொடிகளையும் எவ்வளவு நேசித்தோம்னு. நான் இந்த வீட்ட வித்திட்டு தொலைதூரம் போகப்போறேன் தம்பி. எனக்கு வடக்கே ஏததாவது ஒரு ஊருக்கு ரயில்ல டிக்கெட் போடுங்க” என்கிறார். திட்டமிடப்படாத பயணத்தை மனிதர்கள் தேர்வு செய்வதைப் போல உலகத்தில் பெருந்துயரம் வேறு என்ன இருக்கிறது. அவர் விலகிச் சென்று தெற்கு ஜன்னலின் எதிர்வீடடைந்த வெகு நேரத்திற்கு கதைசொல்லியின் மனம் தத்தளிக்கிறது. எப்படி போவார் இந்த மனுஷன் இந்த வீட்டைவிட்டு என தனக்குள் உருகி மருகுகிறார்.
தூக்க இரவிற்குள் கேட்கும் மனிதக்குரல்கள் எப்போதும் துக்கத்தையே விளம்புகின்றன. “தம்பி, மூர்த்தி சார் அவரு வீட்டு உத்திரத்தில தூக்கி மாட்டிக்கிட்டாரு” என்கிற அருகாமை வீடுகளின் குரலை ஒருவேளை இவர் எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ. சட்டென கைபேசியை எடுத்துப் பார்க்கிறார். மூர்த்தி அவருக்கு இரண்டு மூன்று குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்கிறார். “தம்பி யாரும் கதவை உடைச்சிராம பார்த்துக்கோங்க. நான் கதவைப் பூட்டியெல்லாம் வைக்கல. ஒருவேளை மழைக்கு இறுகிப் பிடிச்சிருக்கலாம். கதவை மட்டும் உடைச்சிராமா பார்த்துக்கோங்க”. மனிதர்கள் துயரங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள மரணத்தையே கைக்கொள்கிறார்கள். தற்கொலைகள் கணநேரத்து முடிவல்ல.
ஒருவிதத்தில் பரிதாபத்தின் சொற்கள் தனன்னைச் சூழ்ந்து இறுக்கலாம். பச்சாதப வலை சூழும் உலகின் வன்மத்தில் இருந்து தப்பியோட மரணத்தை தவிர என்ன வழியிருக்கிறது எனக்கு என அவர் தனக்குள் கேட்டுக் கொண்டேயிருந்தரூப்பார். அய்யோ பாவம் என எதற்காகவும் எவரிடமும் பரிதாபம் கொள்ளாதீர்கள். உங்கள் கழிவிரக்கச் சொற்கள் அவர்களை அச்சமூட்டி இந்த வாழ்வில் இருந்து விலகிப்போகவே அவர்களை நெருக்கித் தள்ளுகிறது.
-ம.மணிமாறன் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



