
நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடப்பதால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 47-வது படத்தை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23) தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில், தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. இதனால் தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது பிறந்தநாளை எந்த விதத்திலும் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அவரது ரசிகர் மன்றம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.



