
அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின் நாளுக்கு நாள் அரசியல் புதிய புதிய திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து அதிர்ச்சி கொடுத்தனர். அத்துடன் தவெகவிலும் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த 3 பேர் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால், அதிமுக எம்எல்ஏக்களை பதவி ராஜினாமா செய்து குதிரை பேர அரசியலை தவெக நடத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இன்று( மே 26) வழங்கினார். ஆனால், இந்த கடிதத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. “எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதிய கடிதத்தை மட்டுமே ஏற்க முடியும்; தட்டச்சு செய்து அதில் கையெழுத்திட்ட கடிதத்தை ஏற்க முடியாது” என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுத்தி இசக்கி சுப்பையா அதனை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அளித்தார். இதற்கு முன்னதாக, தகுதி நீக்க புகாருக்குள்ளான அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்கக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அணியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.



