2031 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்…புதிய அமைப்பை துவக்கிய அண்ணாமலை அறிவிப்பு

2031 சட்டமன்ற பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்து அண்ணாமலை டெல்லி சென்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினிடம் வழங்கினார். இதன் பின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அவரை சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், எதற்கும் அவர் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், அவரது ராஜினாமாவை கட்சியின் தேசிய தலைமை ஏற்றுள்ளது.

இந்த நிலையில் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளத்தில் அண்ணாமலை இன்று ( ஜூன் 5) பேசினார். அப்போது,” லக்னோவில் ஐஎம்மில் படித்து கொண்டிருந்த போது கேப்டன் விஜயகாந்த் நடத்தி வந்த தேமுதிகவில் மூன்று மாதங்கள் இன்டர்ன்ஷிப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அரசியலை அருகில் இருந்து பார்க்க முதல் வாய்ப்பு. இதே டெல்லியில் பாஜகவில் நான் இணைய வரும் போது ஆகஸ்ட் 24, 2020 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார்.

அவரிடம் நான் நிறைய பேசி இருக்கிறேன். அவருடைய அரசியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் பேசி இருக்கிறேன். அப்போது ரஜினிகாந்த், நான் டெல்லியில் இருந்து திரும்பி வரவேண்டும். அவருடைய இயக்கத்தில் இணைய வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தார். அதாவது நான் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 24-ம் தேதி இதை சொன்னார். அப்போது மூன்று விஷயங்கள் என் முன்னால் வந்தது.

தமிழ்நாட்டுக்கு எது நல்லது. சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரவேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது. அதேசமயம் சூப்பர் ஸ்டாருக்கு எது நல்லது. அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது தான் நல்லது. கொரோனா காலக்கட்டத்தில் அவருக்கு இருக்கக்கூடிய உடல்நலப் பிரச்னை, இதை அவர் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதனால் ரஜினிகாந்திடம் என்னால் வர முடியாது என்று சொல்லி, மன்னிப்பு கேட்டு அடுத்த நாள் நான் பாஜகவில் இணைந்தேன்.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தின் அடையாளத்தை ஒருபோதும் விட்டு கொடுத்ததில்லை.கடந்த 18 மாதங்களாக பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தன. கடந்த டிசம்பர் மாதமே கட்சியில் இருந்து விலகும் முடிவை மேலிடத்திடம் அறிவித்தேன். திடீரென அறிவித்து விட்டேன் என்று நினைத்து கொள்ளக் கூடாது. 2026 சட்டமன்றத் தேர்தலை முடித்து விட்டு செல்லுமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியது. அதற்கேற்ப தேர்தல் வேலைகளை செய்து விட்டு வெளியேறியிருக்கிறேன்.

அன்றைக்கு எந்த இடத்தில் இணைந்தேனோ இன்று அதே இடத்துக்கு வந்திருக்கிறேன். வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டும் இலக்குகள் நிறைய இருக்கிறது. ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை ஒரு பண்போடு தலைமையிடம் சொல்லிவிட்டு வெளியே வந்திருக்கிறேன். இதை தமிழர் பண்பு கூட என்று எடுத்துக் கொள்ளலாம். இன்றைக்கு தனித்துவமாக நம்முடைய இயக்கத்தை மக்கள் முன்னால் வைக்கிறேன். 25 வயதில் நான் விஜயகாந்த் அவர்கள் கட்சியில் இன்டர்ன்ஷிப் செய்தது பாக்கியமாக கருதுகிறேன். அன்றிலிருந்து ஒரு புதிய பாதையை உருவாக்க 17 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன். ஒரு புதிய அரசியலை புதிய சமூகத்தை கொண்டு வர முடியுமா என போராடிக் கொண்டிருக்கிறேன்.

தனி நபர் துதிபாடும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்த ஒரு நாற்காலியும் யாருக்கும் நிரந்தரம் இல்லை. அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். நிரந்தர எம்எல்ஏ நிரந்தர அமைச்சர், நிரந்தர தலைவர் என யாரும் கிடையாது. புதிதாக வருபவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். கோவையில் அப்துல் கலாம் பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்படும். இதில் புதிதாக நம்முடன் இணைபவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்னுடன் இணையவுள்ளவர்கள் wetheleader.org என்ற இணையதளத்தில் போய் சேர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு செங்கலாக கட்டமைக்கப் போகிறோம். எனவே யாரும் அவசரப்பட வேண்டாம். படிப்படியாக நம்முடைய இயக்கத்தை வலுப்படுத்துவோம். பொறுமையாக காத்திருங்கள்.

எப்படி திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட மற்ற கட்சிகளையெல்லாம் பார்க்கிறோமோ, அப்படித்தான் நான் பாஜகவை பார்ப்பேன். வன்மமெல்லாம் கிடையாது. வளர்ந்த பாரதம் என்ற கனவோடு அரசியல் இயக்கம் தொடங்கியுள்ளேன். சாமானிய மக்களுக்காக அரசியலை முன்னெடுக்க உள்ளேன். அரசியல் என்பது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல. நிரந்தர எம்எல்ஏ,. நிரந்தர அமைச்சர் என்பதை உடைக்க வேண்டும். பதவி என்பது ஒருவருக்கு மட்டுமே நிரந்தரம் இல்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாருக்கும் நாம் போட்டியில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கும் வேட்பாளர்களை தயார்படுத்துவோம். சமக ஊடகங்களில் நாம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அமைப்பை உருவாக்கி கட்சியாக மாறுவோம். தமிழ்நாட்டில் அடுத்து 2031-ம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்”என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *